துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் தேர்வு! – யார் இவர்?! | BJP Chose Jagdeep Dhankhar for vice president election candidate

Share

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மறுபுறம் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதியன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கானல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேதி ஒருவாரத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபோதிலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகாமலேயே இருந்தது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

இதற்கிடையில், பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வுசெய்யப்படுவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கரை, வேட்பாளராக பாஜக சற்றுமுன் அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்துக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்குவங்க ஆளுநராகப் பதவியிலிருக்கும் ஜெக்தீப் தன்கருக்கும், அம்மாநிலத்தில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜிக்கும் அரசியல் மோதல்கள் வெடிப்பதை அவ்வப்போது ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, பல மாநில எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தியது மம்தா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெக்தீப்  தன்கர்

ஜெக்தீப் தன்கர்

யார் இந்த ஜெக்தீப் தன்கர்?

71 வயதாகும் ஜெக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிதான பகுதியில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதியன்று பிறந்தார். இவர் 1989-91-ல் நாட்டின் 9-வது மக்களவையில், ராஜஸ்தானில் ஜனதா தள கட்சியின் சார்பாக எம்.பி-யாக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், 1993-98-ல் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகவும் பதவியில் இருந்திருக்கிறார். மேலும் இவர் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமாவார்.

இப்படி பல முக்கிய பதவிகளில் இருந்துவந்த ஜெக்தீப் தன்கர், 2019-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட உயர்வாக, வருகிற துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், பாஜக கூட்டணியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com