கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ரொம்பவே மோசமாக தோற்றிருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே தோற்றிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், முகமது ஷமிக்கு எதிராக மட்டும் அவரின் மதத்தை குறிப்பிட்டு கேவலமான வசவுகளை அள்ளி வீசினர். ரசிகர்கள் பலரும் அந்த விமர்சனங்களுக்கு எதிராக #IStandWithShami என ஆதரவு குரல்களை எழுப்பினர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களுமே கூட ஷமிக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். ஆனால், அவர்களின் ஆதரவில் ஒரு தற்காப்புத் தன்மை வெளிப்பட்டிருந்தது. அதாவது, மதரீதியான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மென்மையாக ஷமிக்கான ஆதரவை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், கோலி மட்டுமே ஒரு கேப்டனாக ஷமிக்காக முன் நின்றதோடு மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவம் பற்றிப் பேசியிருந்தார்.
மாற்றங்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எந்தச் சலசலப்பும் இல்லாமல் நம்மைத் தகவமைத்துக் கொள்வது ஒரு கலை. கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியில் கேப்டன்சி விஷயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டன. கோலி தானாகவே டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலியிருந்து விலகினார். பிசிசிஐயும் தாமே முன்வந்து மற்ற ஃபார்மேட்களில் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே ஏகப்பட்ட முரண்கள் உண்டாகின. ஒரு கேப்டனாக கோலி அணிக்குள் முழுமையாக அதிகாரம் செலுத்தி வந்திருந்தார். கோலியின் விருப்பத்திற்காக பயிற்சியாளரையே தூக்கி எறிந்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. அப்படி அதிகாரத்தை அனுபவித்தவர், கிரீடம் இறங்கிய பிறகு எப்படிச் செயல்படப்போகிறார், எந்த ஈகோவும் இல்லாமல் ஒரு சாதாரண வீரராக அணியில் அவரால் செயல்பட முடியுமா என்பது போன்ற கேள்விகளும் ஐயமும் எழுந்திருந்தன. ஆனால், கோலி அதற்கெல்லாம் இடமே கொடுக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட 3 குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்குமே ஓர் அபாரத் துணிச்சலும் மனத்திடமும் தேவைப்படும். அது கோலியிடம் இருந்தது. இவற்றாலும்தான் கோலி அந்த ஜாம்பவான் அந்தஸ்தை எட்டியிருக்கிறார்.