'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! – எப்படி வென்றது இந்தியா?

Share

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஏதேனும் சவால் இருக்குமோ என்று தோன்றியது. ஆனால், ஒரு சில ஓவர்களுக்கு நமீபியா பயம் காட்டியதே தவிர இந்திய அணி பெரிய சிரமம் ஏதுமின்றி வென்றிருக்கிறது.

Ind vs Nam
Ind vs Nam

டெல்லி பேட்டிங் பிட்ச் என்பதால் எவ்வளவு பெரிய டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நமீபியா முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. இந்திய அணியில் அபிஷேக்குக்கு பதில் சாம்சன் இணைந்திருந்தார். பும்ராவும் லெவனுக்குள் வந்திருந்தார்.

சாம்சன், இஷான் கிஷன் ஜோடி ஆரம்பத்திலிருந்தே அதிரடிதான். பவர்ப்ளேயில் மட்டும் 86 ரன்கள். சாம்சன் இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 3 சிக்சர்களை பறக்கவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். இஷான் கிஷன் ஓயவே இல்லை. ஸ்மித் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டார். திலக் வர்மா ஒரு பக்கம் நின்று ஆட இஷான் கிஷன் வந்த பந்துகளையெல்லாம் பறக்கவிட்டார். எராஸ்மஸ் வீசிய 7 வது ஓவரில் இஷான் கிஷன் காலி. அவர் 24 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார்.

Ishan Kishan
Ishan Kishan

முதல் 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 120 ரன்களை சேர்த்திருந்தது. இரண்டாம் பாதி ஹர்திக்குடையது. ஒரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருக்க, ஹர்திக் பாண்ட்யா நின்று ஆடி சிக்சர்களை பறக்கவிட்டார். இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நமீபியா அணிக்கு டார்கெட் 210. இந்திய அணி சார்பில் பவர்ப்ளேயில் அர்ஷ்தீப், ஹர்திக், துபே வீசியிருந்தனர். எல்லாருமே அடி வாங்கியிருந்தனர். பவர்ப்ளே முடிவில் நமீபியா அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 57 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீங்கம்ப், ப்ரைலிங்க் போன்றோர் அதிரடியாக ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு ஸ்பின்னர்கள் வந்தனர். அக்சர் படேல் கொஞ்சம் அடி வாங்கவே செய்தார். அவரின் ஓவரில் எராஸ்மஸ் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டார்.

Varun Chakravarthy
Varun Chakravarthy

வருண் சக்கரவர்த்திதான் கேம் சேஞ்சர். 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மின்னொளியில் வருணின் கூக்ளிக்களை நமீபியாவின் பேட்டர்களால் கணிக்கவே முடியவில்லை. ஸ்டீங்கம்ப், நிக்கோல், ஸ்மித் ஆகியோர் அவரின் பந்தில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு போட்டி அப்படியே இந்தியாவின் கையில் வந்துவிட்டது. பும்ரா, ஹர்திக்கெல்லாம் சிறப்பாக வீச நமீபியா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

அடுத்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த க்ரூப்பில் பாகிஸ்தான் போட்டி மட்டுமே இந்தியாவுக்கு சவாலளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களும் வழக்கம்போல சொதப்பினால் பெரிய சுவாரஸ்யமே இல்லாமல் போகும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com