பட மூலாதாரம், AIG Conservation Dept
பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன.
நீண்டகாலமாகச் செயலற்றுக் கிடக்கும் எரிமலை சிகரங்களின் மீது கடல் நீரோட்டங்கள் காற்றைப் போல கர்ஜிக்கின்றன.
இந்தக் கடலடி மலைகள், கடலின் தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, 3,300 அடி உயரம் வரை செல்கின்றன. சில மலைகளில் பள்ளங்கள் உள்ளன அல்லது முகடுகள் வரிசையாக அமைந்துள்ளன. மற்றவற்றின் உச்சியில் பெரிய, தட்டையான பீடபூமிகள் உள்ளன. சில நேரங்களில் இந்தச் சிகரங்கள் கடலின் மேற்பரப்புக்கு மேலே எட்டிப் பார்த்து, தீவுகளை உருவாக்குகின்றன.
கடல் மலைகள் என்பவை ஆழ்கடல் மற்றும் திறந்தவெளிப் பெருங்கடல் உயிரினங்கள் சந்திக்கும் நீருக்கு அடியிலுள்ள மலைத் தொடர்களாகும். சிறிய மிதவை உயிரினங்களை உண்ணும் மீன்கள் முதல் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் வரை அனைத்துமே இங்கு கூடுகின்றன. இது கடல் உணவுச் சங்கிலியில் ஒரு பரபரப்பான இடமாக உள்ளது.
இப்படியான கடல் மலை ஒவ்வொன்றும் தனித்துவமானது, நிரம்பி வழியும் உயிர் சூழலைக் கொண்டது. அவை பவளப் பாறைகள், ஓடுள்ள கணுக்காலிகள், கடற்பஞ்சுகள், கடல் நட்சத்திர மீன், மீன்கள், ஆக்டோபஸ்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், சுறாக்கள் எனப் பலவற்றால் செழித்துக் காணப்படுகின்றன.
தட்டையான கடல் தரையுடன் ஒப்பிடும்போது, கடல் மலைகள் அதிக எண்ணிக்கையிலும் பன்முகத்தன்மையுடனும் அதிக உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பலவும் உலகில் வேறு எங்குமே காணப்படாதவை. மேலும், இந்த இடங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும்.
வடக்கு அட்லான்டிக்கின் உறைந்த நீரில் இருந்து வெப்பமண்டல பசிபிக்கின் ஆழமான பகுதிகள் வரை, உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடலடி மலைகள் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன.
“கடந்த சில தசாப்தங்களாக கடல் தரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எரிமலை சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காலநிலை இயக்கவியல் துறை இணை பேராசிரியர் அலி மஷாயெக்.
இன்று, கடல் குறித்த ஆய்வு வேகமடைந்து வருவதால், மேன்மேலும் கடலடி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அட்லான்டிக் பெருங்கடலின் கடல் மலைகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தின்போது, விஞ்ஞானிகள் கடலின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் வேட்டையாடிகளான சுறா மீன்களை அசாதாரணமான எண்ணிக்கையில் கண்டுபிடித்தனர்.
“அது எங்கோ தொலைவில் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பது போல் இருந்தது,” என்கிறார் அசென்ஷன் தீவில் ஏழு ஆண்டுகள் முதன்மைப் பாதுகாப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றிய சாம் வெப்பர்.
அசென்ஷன் தீவு என்பது ஆப்பிரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே உள்ள தீவு. வெப்பமண்டல மத்திய அட்லான்டிக்கில் தனிமையிலுள்ள ஒரு நிலப்பரப்பு. ஆனால், அந்தத் தீவைச் சூழ்ந்துள்ள கடல் அலைகளுக்குக் கீழே பார்த்தால், ஒரு வித்தியாசமான கதை வெளிப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள ஓர் எரிமலையின் உச்சியே அசென்ஷன் தீவின் நிலப்பகுதி.
பட மூலாதாரம், AIG Conservation Dept
அது, “கடல் மட்டத்தைத் தாண்டி ஒரு தீவாக மாறியுள்ளது” என்று வெப்பர் கூறுகிறார். இது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நீண்டு கிடக்கும் கடல் மலைகளின் சங்கிலியில் உள்ள ஒன்று. “அது செயின்ட் ஹெலினா வழியாகச் சென்று, அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா வரை செல்கிறது.”
தற்போது பிரிட்டனில் உள்ள எக்ஸிடர் பல்கலைக் கழகத்தில் கடல் முதுகெலும்புயிரி சூழலியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வெப்பர், அசென்ஷன் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 300கி.மீ தொலைவிலுள்ள மூன்று கடலடி மலைகளை ஆய்வு செய்தார்.
ஹாரிஸ் ஸ்டீவர்ட் கடல் மலையின் உச்சி ஆழமாக உள்ளது. மறுபுறம், கிராட்டன், யங் ஆகிய ‘தெற்கு கடல் மலைகள்’ ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்தவையாக உள்ளன. அவற்றின் சிகரங்கள், கடல் மட்டத்தில் இருந்து 330 அடி ஆழம் வரை உயர்ந்துள்ளன. அதோடு, அவை வெறும் 80கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளன. அந்த இடம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது என்கிறார் வெப்பர்.
பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வின் ஜேம்ஸ் கிளார்க் ராஸ் என்ற ஆய்வுக் கப்பலுடன் இணைந்து, வெப்பர் தனது 16 நாட்களில் பெரும்பாலான நாட்களை ஒரு சிறிய நீளமான மீன்பிடிப் படகில் கழித்தார். அப்போது அவர், தனது ஆய்வுக்காக சுறாக்களைப் பிடித்து டேக் செய்துகொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
41 மடங்கு அதிகமான சுறாக்கள்
“நாங்கள் மீனவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். அவர்கள் மீன்களை மிகத் திறமையாகப் பிடித்தார்கள். பின்னர், நாங்கள் அதை டேக் செய்யும் வேலையைச் செய்தோம். அனைவரும் ஒன்றாக வேலை செய்தோம், சமைத்துச் சாப்பிட்டோம், ஒன்றாகத் தூங்கினோம்.”
இந்தத் தெற்கு கடல் மலைகளில்தான் வெப்பர் மற்றும் அவரது சகாக்கள், திறந்த பெருங்கடலுடன் ஒப்பிடும்போது, 41 மடங்கு அதிகமான சுறாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
சுற்றியுள்ள கடல் நீருடன் ஒப்பிடுகையில், வெப்பரும் அவரது குழுவும் தெற்கு கடல் மலைகளில் சுறாக்கள் மற்றும் இதர பெரிய வேட்டையாடி மீன்களின் மொத்த பன்முகத்தன்மை ஐந்து மடங்கு அதிகமாகவும் உயிர்க்கூளம் 30 மடங்கு அதிகமாகவும் இருந்ததைக் கண்டறிந்தனர்.
பல அழியும் அபாயத்தில் உள்ள இனங்களின் எண்ணிக்கையும் மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற வணிக ரீதியாகப் பிடிக்கப்படும் இனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகளவில் இருந்தது.
“ஆழ்கடல் மற்றும் வலசை செல்லும் சுறாக்கள் உள்பட, சுறாக்கள் உலகப் பெருங்கடல்கள் அனைத்திலும் கடல் மலைகளைச் சுற்றி இருக்கவே விரும்புகின்றன” என்று பிரிட்டனில் உள்ள பிளைமௌத் பல்கலைக் கழக உயிரியல் மற்றும் கடல் அறிவியல் பள்ளியின் கடல் ஆளுகை நிபுணரும் இணை விரிவுரையாளருமான லிடியா கோலர் தெரிவித்தார்.
இருப்பினும், கடலடி மலைகள் ஏன் இத்தனை சிறந்த கடல் வேட்டையாடிகளைத் தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது ஓரளவுக்கு மர்மமாகவே உள்ளது.
பட மூலாதாரம், AIG Conservation Dept/ Univ of Exeter/ Univ of W Australia
கடலடி மலைகளும் புவி காந்தப்புலமும்
கடல்வாழ் உயிரினங்கள் தங்குமிடம், சுத்தம் செய்துகொள்வது, உணவு எனப் பல காரணங்களுக்காக கடலடி மலைகளுக்குச் செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. அதோடு, அவற்றை அவை வழிசெலுத்தலுக்கான அடையாளமாகவும் பயன்படுத்தக்கூடும்.
சிறிய இரும்பு அணுக்களைக் கொண்ட எரிமலைப் பாறை குளிர்ந்து திடமாகும்போது ஒரு கடலடி மலை உருவாகிறது. பூமியின் காந்தப்புலத்துடன் சீரமைக்கப்படும் இந்த இரும்பு அணுக்கள், காலத்தால் உறைந்து போகின்றன. மேலும், அந்தக் கடலடி மலையின் தனித்துவமான காந்தப்புலம் அதில் நிலைநிறுத்தப்படுகிறது. திமிங்கிலம், சுறா ஆகிய இரு இனங்களும் கடலடி மலைகளின் தனித்துவமான புவிகாந்த அடையாளங்களை பாதை கண்டறியப் பயன்படுத்தக்கூடும் என்று வெப்பர் கூறுகிறார்.
“கடலடி மலைகள் மிகவும் வலுவான காந்த அடையாளத்தைக் கொண்டுள்ளன. மீன்கள் பலவும் அதை உணரக்கூடியவையாக உள்ளன. நாங்கள் ஆய்வு செய்த கடலடி மலைகள், சுமார் 100 முதல் 200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ள ஒரு மிக நீண்ட கடலடி மலைத்தொடரின் முனையில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் வலசைப் பாதையில் அவற்றை இடைத்தங்கல் இடங்களாகப் பயன்படுத்துகின்றனவா என்பதைக் கண்டறிய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.”
“உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள வேட்டையாடிகள் உள்பட, கடலடி மலைகளில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆற்றலின் ஒரு செறிவாகும்,” என்று வெப்பர் விளக்குகிறார்.
அவரது கூற்றுப்படி, அந்த ஆற்றல் இரண்டு முக்கிய இடங்களில் இருந்து வரலாம். “முதலாவதாக, கடலடி மலையிலேயே அது உருவாக்கப்படலாம். அதாவது, கடலடி மலை ஆற்றலை உருவாக்குகிறது அல்லது செறிவூட்டுகிறது. இதுவே சோலை கருதுகோள். அதாவது கடலடி மலை என்பது உயிர்ச்சூழலை ஆதரித்து வளர்க்கும் ஒரு சோலையைப் போன்றது.”
“இரண்டாவதாக, கடலடி மலைகள், வேறு இடங்களில் உணவருந்திவிட்டு, அந்த ஆற்றலை கடலடி மலைக்குக் கொண்டு வரும் உயிரினங்களுக்கான கூடுமிடங்களாகச் செயல்படுகின்றன. இதுவே சேவை மையம் கருதுகோள்.”
பட மூலாதாரம், NASA
பெருங்கடலை கலக்கி விடும் கடலடி மலைகள்
கடந்த 1998இல், பெருங்கடல் ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளரான வால்டர் மங்க், கடல் மலைகளை “பெருங்கடலை கலக்கி விடும் தண்டுகள்” என்று விவரித்தார். ஒரு கடல் மலை எவ்வாறு வளமான, ஊட்டமளிக்கும் சோலையாக மாறக்கூடும் என்பதை விளக்குவதற்கு இது உதவக்கூடும்.
கடல் மலையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் நீர் கொந்தளிப்பாகவும் சீரற்றதாகவும் இருக்கலாம். கடல் நீரோட்டங்கள் நீருக்கு அடியில் உள்ள செங்குத்தான சரிவுகளில் மோதும்போது, நீர் உச்சிக்குத் தள்ளப்படுகிறது. இதனால், குளிர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த நீரை சூரிய ஒளி படக்கூடிய மேற்பரப்பை நோக்கித் தள்ளுகிறது.
“பெருங்கடலின் ஆழமான நீரோட்டங்கள் இந்தக் கடல் மலைகளுடன் இடைவினை புரிவதால் உருவாகும் கொந்தளிப்பு, ஆழ்கடல் நீரோட்ட இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு வகிப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்கிறார் மஷாயெக். உண்மையில், மஷாயெக் மற்றும் அவரது குழுவின் கூற்றுப்படி, மலைகளைச் சுற்றி நடக்கும் இந்தக் கலக்குதல், உலகளாவிய பெருங்கடல் கலவையின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்குக்குப் பங்காற்றுகிறது.
“கடல் மலையால் தூண்டப்படும் இந்தக் கலவையானது ஊட்டச்சத்துகள், ஆக்ஸிஜன், வெப்பம், கரிமம் போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பண்புகளின் ஆழ்கடல் சேமிப்பைக் கட்டுப்படுத்துகிறது” என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் பெருங்கடல் ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியருமான லாரா சிமோலி.
ஆழ்கடல் நீர் மேற்பரப்புக்குத் தள்ளப்படும்போது, ஊட்டச்சத்துகள் மேல்நோக்கி வருகிறது. இது ஃபைட்டோபிளாங்டன்களின் பெருக்கத்திற்கு வித்திடுகிறது. இவை பெருங்கடல் உணவுச் சங்கிலியில் முதன்மையாக இருப்பதால், கடல் மலை ஒரு வளமான சோலையாக மாறுகிறது. இது சுறாக்கள் போன்ற பெரிய வேட்டையாடிகளை ஈர்க்கிறது.
“கடல் மலைகள், அதன் மீது தொடர்ந்து அடித்துச் செல்லப்படும் பிளாங்டன் உயிரிகளுக்கு ஒரு மாபெரும் பொறியாகச் செயல்பட முடியும்” என்கிறார் வெப்பர். அதோடு, “இந்த பிளாங்டன் மேலும் கீழுமாக நகரும்போது, கடல் மலையால் அதை உச்சியில் சிக்க வைக்க முடியும். அந்த அற்றல், பின்னர் உணவு வலையின் ஊடாக, அதற்கு மேலே உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பரவுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Oceano Azul Foundation
‘சேவை மையம் கருதுகோள்’
சில உயிரினங்கள் கடல் மலையைத் தங்கள் வீடாகக் கொண்டு, “நிரந்தரமாக வசிப்பதாகவும்” வெப்பரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அதோடு, கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற சில இனங்கள், திறந்தவெளி பெருங்கடலில் இரை தேடிய பிறகு கடல் மலைகளில் கூடுவதையும் காட்டுகின்றன.
“ஆற்றல் கடல் மலைக்கு வெளியே உருவாக்கப்பட்டு, இரை தேடும், இடம்பெயரும் வேட்டையாடிகள் அதைச் சேகரித்து கடல் மலைகளுக்குக் கொண்டு வருகின்றன.”
இங்குதான் “சேவை மையக் கோட்பாடு” வருகிறது. கடல் மலைகள் ஒன்று கூடுவதற்கும், சமூக நடத்தைகளில் ஈடுபடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்குமான ஓர் இடமாகச் செயல்படலாம். அல்லது திறந்தவெளிப் பெருங்கடலில் வேட்டையாடிய பிறகு திரும்புவதற்கான ஒரு தளமாகக்கூட இருக்கலாம்.
கடல் மலைகளில் சுறாக்கள் விரும்புவதாகத் தோன்றும் சில குறிப்பிட்ட இடங்கள் உள்ளதாகக் கூறுகிறார் வெப்பர். “அவை மிக அதிக எண்ணிக்கையில் அந்த ஓர் இடத்தில் ஒன்று கூடுகின்றன.”
இதுதான் வெப்பருக்கு மிகவும் பிடித்தமான கருதுகோள். இதை அவர் ‘சேவை மையக் கருதுகோள்” என்று அழைக்கிறார். மேலும், இதை அவர் விரிவாக ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார்: “அவை கடல் மலைகளை ஆற்றல் சேமிப்புப் புகலிடமாகப் பயன்படுத்துகின்றனவா என்பதை நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்.”
பட மூலாதாரம், Oceano Azul Foundation
பல சுறா இனங்கள் தங்கள் செவுள்களுக்கு தொடர்ந்து தண்ணீரைச் செலுத்திக்கொண்டே இருக்க இடைவிடாமல் நீந்த வேண்டியுள்ளது. “அவற்றால் நீந்துவதை நிறுத்த முடியாது. இதுவொரு ஆற்றல் செலவை ஏற்படுத்துகிறது.”
வானத்தில் ஒரு கழுகு வெப்பக் காற்றோட்டத்தில் வட்டமிடுவதைப் போல, கடல் மலைகளைச் சுற்றி நீர் மேலே எழும்போது, அதேபோன்ற ஒரு நிகழ்வு சுறாக்களிடையே நடக்கக்கூடும் என்று வெப்பர் கருதுகிறார். இந்த மேல்நோக்கிய நீரோட்டம், சுறாக்கள் உணவு உண்ணாத நேரங்களில் மிதந்து ஆற்றலைச் சேமிக்க அனுமதிக்கும். “பின்னர் அவை மீண்டும் வெளியே சென்று நீலக்கடலில் இரை தேடுகின்றன.”
வெப்பரின் குழுவால் டேக் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பட்டு சுறா, ஒவ்வோர் இரவும் இரை தேடுவதற்காகக் கடல் மலையை விட்டு வெளியேறி, 100 கி.மீ வரை பயணிக்கிறது. “அவற்றால் இந்தக் கடல் மலைகளுக்கு மிகத் திறமையாகப் பாதையைக் கண்டறிய முடிகிறது. அவற்றால் நீண்ட நேரம் நீந்த முடியும், மிக விரைவாக மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பவும் முடியும்,” என்கிறார் வெப்பர்.
ஆய்வாளர்களுக்குத் தெரிந்த மற்றொரு விஷயம் என்னவெனில், டேக் செய்யப்பட்ட சில பட்டுச் சுறாக்கள், சுமார் ஓராண்டுக்கு அந்தக் கடலடி மலையில் இருந்து காணாமல் போயின. அவை அவற்றை ஒரு சேவை மையம் போலப் பயன்படுத்துகின்றன என்பதை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் வெப்பர். “ஒரு நீண்ட பயணத்தில், அவை அங்கு வந்து, ஒருவேளை உணவுண்டு, பின்னர் தங்கள் வலசைப் பயணத்தைத் தொடர்கின்றன. அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் கடலடி மலைகளில் ஏராளமான உணவு உள்ளது. எனவே, அவை செல்லும் வழியில் இங்கு தங்கிச் செல்கின்றன.”
பட மூலாதாரம், Oceano Azul Foundation
ஒளிவட்ட விளைவு
கடல் மலைகளுக்கு சோலை, சேவை மையம் ஆகிய இரண்டு கருதுகோள்களும் பொருந்தக்கூடும் எனத் தெரிகிறது. அங்கு நிரந்தரமாக வசிக்கும் உயிரினங்கள், வழக்கமாக வந்து செல்லும் உயிரினங்கள், அவ்வழியாகச் செல்லும் சில உயிரினங்கள் எனக் கலந்து காணப்படுகின்றன.
இவற்றின் விளைவாக கடல் உயிரினங்களின் எண்ணிக்கை இந்தப் பகுதிகளில் மலைகளின் உச்சிகளுக்கு அப்பால் வெகுதூரம் வரை பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது, ஒரு கடலடி மலையைச் சுற்றி கிட்டத்தட்ட ஓர் ஒளிவட்டத்தைப் போல, உயிரினங்களின் செறிவு அதிகமாகக் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது திறந்தவெளிப் பெருங்கடலில் 6கி.மீ வரை பரவியிருந்தது. இந்த ஒளிவட்ட விளைவு சுமார் 40 கி.மீ வரைகூட பரவக்கூடும் என்று பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
“உச்சியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றாலும், அதிக எண்ணிக்கையிலான வேட்டையாடிகளை காணலாம். அந்த இடத்தில் கடல் ஆயிரக்கணக்கான மீட்டர்கள் ஆழமாக இருக்கும்,” என்கிறார் வெப்பர்.
பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு சூரை மீன்கள், பெரிய கண் சூரை மீன்கள் கடல் மலை உச்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பயணித்தன. ஆனால், அவை “ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒட்டியே” இருந்ததாகத் தெரிகிறது, என்கிறார் வெப்பர்.
ஒலி அலைகள் மூலம் டேக் செய்யப்பட்ட கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள் இரண்டு தெற்கு கடல் மலைகளுக்கு இடையே உள்ள 80கி.மீ தூரத்திலும் பயணிப்பது காணப்பட்டது. அவை அந்த இரண்டு உச்சிகளையுமே தங்கள் வீடாகக் கருதுவது போல அது இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, பட்டு சுறாக்கள் இரவில் கடல் மலை உச்சிகளில் இருந்து விலகிச் சென்று, விடியற்காலையில் மீண்டும் திரும்பின. இது வேட்டையாடிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் நிறைந்த ஒளிவட்டம், இரவு மற்றும் பகலுக்கு ஏற்ப விரிவடைந்து, சுருங்குவதைக் காட்டுகிறது.
கடல் மலைகள் ஆழ்கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஈடு செய்ய முடியாத சோலைகளாகும். மேலும் சுறாக்கள், திருக்கை மீன்கள், ஸ்கேட் மீன்கள் போன்ற அழியும் அபாயத்தில் உள்ள மீன்கள் உள்படப் பலவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பதை நிரூபிக்கும் சான்றுகளும் அதிகரித்து வருகின்றன.
“ஆழமற்ற கடல் முதல் ஆழ்கடல் வரை, கடலோரப் பகுதி முதல் ஆழ்கடல் வரை, முழு கடல் சூழலியல் அமைப்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும் சுறா இனங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன” என்கிறார் கோலர்.
ஆனால், அவையனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது ஆபத்தானது. பல தசாப்தங்களாக, பெரிய கண் சூரை மீன் போன்ற விரும்பத்தக்க மீன்களை எளிதில் காணக்கூடிய கடல் மலைகள், டிராலர் எனப்படும் ஆழ்கடல் இழுவை வலை மீன்பிடித்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
“சுறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அதிகப்படியான மீன்பிடித்தல்தான்” என்கிறார் கோலர். “இதில் வணிகரீதியாக அவற்றை இலக்கு வைத்துப் பிடிப்பது மட்டுமின்றி தற்செயலாக இழுவை வலைகளில் சிக்குவதும் அடங்கும்” என்கிறார் அவர்.
“அவர்கள் வேண்டுமென்றே சுறாக்களைப் பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், செல்லும் இடங்கள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான சுறாக்களைப் பிடிக்கிறார்கள். மேலும், அவற்றை கரைக்குக் கொண்டு வந்து சந்தைப்படுத்துகிறார்கள்.”
பட மூலாதாரம், Getty Images
கடல்வாழ் உயிரினங்களுக்கு இருக்கும் ஐந்து பெரிய அச்சுறுத்தல்களில், இழுவை வலை மீன்பிடித்தலும் ஒன்று. மேலும், இதனால் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில் சுறாக்களும் அடங்கும். ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் தொழில்களால் எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பதில் தெளிவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக, கடல் தரையில் வலைகளைப் போட்டு இழுத்துக்கொண்டே செல்வதன் மூலம் மீன்பிடிப்பது அழிவுகரமான மீன்பிடி முறை என்கிறார் கோலர்.
“கனமான ஒரு வலை, கடல் தரை முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறது. மென்மையான கடற்பஞ்சுகள், பவளப் பாறைகள் போன்ற எளிதில் உடையக்கூடிய அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவை அடியோடு அகற்றப்படுகின்றன. இறுதியில் மிஞ்சுவது ஒன்றுமில்லாத வெற்று நிலப்பரப்பு மட்டுமே.”
அனைத்தும் கடல் தரையில் இருந்து சுரண்டி எடுக்கப்படுகின்றன. அங்கு இருக்கும் எந்தவொரு உயிரினமும் அகற்றப்படுகிறது.
“கடல் தரையில் இழுவை வலைகளை வைத்து மீன்பிடிப்பது, அடிமட்ட சுற்றுச்சூழல் அமைப்பையே தகர்த்துவிடுகிறது. இதனால் முழு உணவுச் சங்கிலியும் அழிக்கப்படுகிறது” என்கிறார் வெப்பர்.

மேலும், “கடல் மலைகளில் வாழும் உயிரினங்களில் பலவும் மிக மெதுவாக வளரக்கூடியவை. அவை மிக மெதுவான வாழ்க்கை சுழற்சியைக் கொண்டவை. இழுவை வலையால் நிகழும் திடீர் மீன் பிடித்தல் முறை அவற்றை முழுதாக அள்ளிச் செல்கின்றன. இதனால் அவை முற்றிலுமாகக் காணாமல் போய்விடுகின்றன” என்றும் வெப்பர் குறிப்பிட்டார்.
இழுவை வலை மீன் பிடித்தலின் தாக்கம் கடலடி மலைகளில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்கிறார் கோலர். “இந்தச் சூழல் அமைப்புகள் மீண்டும் உருவாகி மீண்டு வருவதற்கு மனித வாழ்நாளைவிட அதிக காலம் எடுக்கும். இதற்கிடையே, உணவு ஆதாரங்கள், இனப்பெருக்கப் பகுதிகள் போன்ற மிக முக்கியமான அவற்றின் சேவைகளை கடல் உயிரினங்கள் இழக்க நேரிடும்.”
இருப்பினும், சுறாக்கள் எங்கு கூடுகின்றன என்பதை அறிவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கிய ஞானமாக உள்ளது.
அசென்ஷன் தீவுகளிலும், 2019இல் முழு பிரத்யேக பொருளாதார மண்டலம் வணிக மீன்பிடித்தலுக்காக மூடப்பட்டது. 2021இல் ஐ.நா சபையின் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீடு, “மீன்பிடிப்பு, கடலடி மலைச் சூழல் அமைப்புகளுக்குத் தற்போதுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியது. மேலும், அக்டோபர் 2025இல் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் “தீர்மானம் 032” ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடலடி மலைகளில் இழுவை வலை மீன்பிடித்தல் முறையில் உலகளாவிய மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு