திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்துவிட்டனர்.
தமிழ்நாட்டின் வட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல், திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. டிசம்பர் 1ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, மலைச் சரிவில் வெள்ளம் அடித்துக் கொண்டு ஓடியுள்ளது.
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மண் சரியத் தொடங்கி, அந்த மலைப் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று உருண்டோடத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று, பல புயல்களுக்கும், பல கனமழைகளுக்கும் சாட்சியாக இருந்த அந்தப் பாறை சில நொடிகளில் ஐந்து சிறுவர்கள் உள்பட ஏழு பேரின் உயிர்களைப் பலிவாங்கிவிட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏழு பேர் பலி
கட்டுமானத் தொழிலாளராக வேலை செய்யும் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவரது எட்டு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் வீட்டில் அப்போது இருந்த ஏழு வயது சிறுமிகள் இருவரும் 14 வயது சிறுமி ஒருவரும் அவர்களுடன் உயிரிழந்துவிட்டனர்.
மாலை 4.30 மணியளவில் திடீரென ‘வீட்டுச் சுவர் இடிந்து விழுகிறது, வாங்க’ என்று கத்தியபடி தன் வீட்டருகே சிலர் வந்து கதறியதாகவும், தான் உடனே சென்று பார்த்தேன் கூறுகிறார் இந்தத் துயரச் சம்பவத்தின்போது அங்கிருந்த முனியப்பன்.
“அங்கே சகதியில் மாட்டிக் கொண்டவர்கள் கதறிக்கொண்டிருந்தனர். நான் அருகில் சென்று சேற்றில் சிக்கியிருந்த மூன்று பேரை வெளியே மீட்டேன். அதன் பிறகு அருகில் இருந்த மற்றொரு வீடும் இடிந்து விழத் தொடங்கியது,” என்று அவர் நடந்ததை விவரித்தார்.
“அதற்கு மேல் எனது உயிருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து உடனே அங்கிருந்து ஓடினேன். வழியில் இருக்கும் வீடுகளில் வெளியே செல்லுமாறு எச்சரித்துக் கொண்டே சென்றேன்.”
முனியப்பன் விவரிப்பது ராஜ்குமார் வீட்டுக்குக் கீழே இருந்த வீடுகளில் நடந்தவை. “அப்போது அவர்கள் மேலே சிக்கிக் கொண்டார்கள் என்று தெரியாது” என்கிறார் அவர்.
அருகிலுள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாமில் உள்ள ராஜ்குமாரின் தாய் செல்வி, “எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு, செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். பாறை உருண்டு வந்துள்ளது. நான் கீழே எனது மகள் வீட்டில் வசித்து வருகிறேன். பாறை விழுந்தது தெரிவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
“அந்தப் பாறை மட்டும் வராமல் இருந்திருந்தால் என் மக்கள் பிழைத்திருப்பார்கள், எனது மகனும், சகலையின் மகளும் வெளியில் வர முயன்றதாக ஒருவர் கூறினார். என் மருமகள் வெளியே மழையில் நின்று கொண்டிருந்தததாகவும் உடை மாற்றிக்கொள்ள உள்ளே சென்றதாகவும் சிலர் கூறினர். அனைவரையும் பறி கொடுத்த பிறகு, எப்படி இருந்தார்கள் என்று கேட்டு நான் என்ன செய்வது?” என்று கதறி அழுகிறார் செல்வி.
ராஜ்குமாரின் தம்பி மனைவி ரம்யா, “அவர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்ற தகவலே மாலை 7 மணிக்குத்தான் எனக்குத் தெரிந்தது. இரவு 1 மணி வரை அங்கேயே இருந்தோம், மேலே செல்ல முடியவில்லை, எங்களை அனுமதிக்கவில்லை. எனது கணவர் அப்போது வீட்டில் இல்லை, இருந்திருந்தால் அவரை அனுப்பியாவது ஏதாவது செய்திருப்பேன்” என்கிறார்.
இந்த விபத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகளை இழந்துள்ளார் புஷ்பா. அரசின் நிவாரண முகாமில் இருக்கும் அவர் “இதே பள்ளியில்தான் படித்து வந்தாள். இன்று மாமா வீட்டிலேதான் இருப்பேன் என்று கூறி காலை 9 மணிக்கே அங்கு சென்றுவிட்டாள்” என்கிறார்.
மதியம் இரண்டு மணியளவில் மகளை அழைத்து, மழை பெய்வதால் வீட்டிற்கு வந்துவிடுமாறு கூறியதாகவும், ஆனால் தான் பத்திரமாக இருப்பதாக மகள் கூறியதாகவும் நினைவுகூர்ந்தார்.
“அதை நம்பி நான் இருந்துவிட்டேனே” என்று இரண்டு நாட்களாக மகளின் உடலைக் காண்பதற்காக அழுது அழுது கண்கள் வறண்டு, சக்தியற்றுக் கிடந்த ரம்யா கூறினார்.
வாழ்நாள் சேமிப்பை சேற்றில் இழந்த குடும்பம்
இந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் மண் பல அடிக்கு உள்ளே புகுந்துள்ளது. “நானும் கணவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். மழை பெய்வது தெரியும். ஆனால் இப்படியொரு பாதிப்பு வரும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை,” எனப் புலம்புகிறார் உண்ணாமலை.
“மலையிலிருந்து கற்கள் உருண்டோடி வந்தன. எப்போதும் தெளிவாக ஓடும் மழைநீர் இந்த முறை செந்நிறமாக இருந்துள்ளது. மலையில் இருந்து மண் சரியத் தொடங்கியபோது, அக்கம்பக்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு என்னை எழுப்பினர். எனக்கு நரம்பு வலி இருப்பதால் ஓட முடியாது, என்னை அப்படியே தூக்கிச் சென்று விட்டனர்,” என்று அவர் நடந்ததை விவரித்தார்.
தன்னால் எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை எனவும், இந்த மாதம் கிடைத்த சம்பளம், சிறுகச் சிறுக சேமித்து வைத்து வாங்கிய தங்க நகை, எல்லாமே வீட்டுக்குள் இருப்பதாகவும் கூறிய உண்ணாமலை, “ஆனால் இவ்வளவு சகதி இருப்பதால் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கட்டில் பீரோ துணிகள் எல்லாமே நாசமாகிவிட்டன. பக்கத்து வீட்டுக்குச் சென்று மாற்றுத் துணி வாங்கி கட்டிக் கொண்டு வருகிறேன்,” என்று கண்ணீர் சிந்தினார் உண்ணாமலை.
மீட்புப் பணிகளின் சவால்கள் என்ன?
ஞாயிற்றுகிழமை இரவு தமிழ்நாடு காவல்துறையின் கமாண்டோ குழுவினர் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இரவு நேரம் என்பதாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததாலும் அவர்களால் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை.
கமாண்டோ படையின் மீட்புப் பணி வீரர் ஒருவரிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, “திங்கள் கிழமை காலை மீட்புப் பணிகள் தீவிரமானாலும் சவால்கள் நிறைய இருந்தன. இடிந்து விழுந்த வீட்டில் இருக்கும் பாறை எவ்வளவு பெரியது என்பது முதலில் யாருக்கும் தெரியவில்லை,” என்றார்.
பாறையின் மீதிருந்த மண்ணை அகற்றும்போதுதான், அது மிகவும் பெரியது, அதை அகற்றுவது சவாலானதே என்பதே தெரிய வந்ததாகக் கூறினார் அவர்.
“அதுவரை பெரிய உபகரணங்கள் இல்லாமல் கைகளால்தான் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மீட்புப் பணியில் தொய்வு ஏற்படவே, பெரிய ஜேசிபி இயந்திரத்தை மேலே கொண்டு வருவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த இயந்திரத்தை மேலே ஏற்ற முடியாததால், அருகில் ஏற்கெனவே மண் சரிவால் இடிந்திருந்த வீடுகளை முழுவதுமாக இடித்து, இயந்திரத்தை மேலே கொண்டு வந்தோம். எனினும் இது செங்குத்தான மலைப் பகுதி என்பதால் மீட்புப் பணி சவலாகவே இருந்தது” என்றார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் இப்பகுதியை ஆய்வு செய்திருந்தனர்.
இனிமேல் இப்படித்தானா?
சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் மூன்று பேர் இந்தப் பகுதியின் மண்ணை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நீர்வளத்துறை பேராசிரியர் மோகன், “இது வயநாடு போல் இல்லை, அங்கு நிலம் களிமண் பாங்காக இருந்தது. இங்கு மணல் பாங்காக உள்ளது. எனினும் இதுபோன்ற இடங்களில் இனி வரும் காலங்களில் இருப்பது ஆபத்தானது,” என்று எச்சரித்தார்.
அதோடு, இங்கு பாதுகாப்பாக இருப்பதற்குச் சில தடுப்புச் சுவர்களை எழுப்பலாம் என்றும், ஆனால் அவற்றுக்கு மிக அதிக செலவாகும் என்பதால், இந்த இடங்களில் வசிக்காமல் இருப்பதே தீர்வாக இருக்கலாம் என்று வலியுறுத்தினார்.
மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “மீட்புக் குழுவினர் தாமதமின்றிப் பணி செய்ததன் மூலம், அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில அரசின் கமோண்டோ குழுவினர் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றியுள்ளனர்” என்றார். திங்கள்கிழமை ஐந்து உடல்களும் செவ்வாய்க் கிழமை இரு உடல்களும் மீட்கப்பட்டு, அனைவரது உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராஜ்குமாரின் உடலை எவ்வாறு கண்டறிந்தோம் என்று விளக்குகிறார் அவர். “வீடுகள் எப்படி அமைதிருந்தன என்பது குறித்து உள்ளூர் மக்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர்கள் காண்பித்த சில காணொளிகளைப் பார்த்தோம். பின்பு, உயிரிழந்தவர்கள் கடைசி தருணத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று யூகித்தோம். வீட்டின் கதவருகே குழந்தைகளைக் கூட்டிச் செல்ல ராஜ்குமார் அங்கே இருந்திருக்கலாம் என்று நினைத்தோம். அதே போன்று அங்கு அவரது உடலை மீட்டோம்” என்று ஆட்சியர் விளக்கினார். ராஜ்குமாரின் உடல் ஆறாவது உடலாக செவ்வாய்க் கிழமை மதியம் மீட்கப்பட்டது.
பட்டா இல்லை, மாற்று இடம் வேண்டும் என மக்கள் கோரிக்கை
அண்ணாமலையார் அடிவாரத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் பட்டா இல்லாமல் உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அங்கு வசிப்பவர்கள் குறைந்தது இரண்டு தலைமுறைகளாக இருப்பதால் தங்களின் நிலை கருதி மாற்று இடம் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
“இந்த இடத்தில் இனி இருப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது, இந்த ஆண்டு பிழைத்துவிட்டோம். ஆனால், அடுத்த மழைக்கு என்ன ஆகும் என்று தெரியாது. இங்கே பெரும்பாலானவர்கள் 40-50 ஆண்டுகளாக வசிக்கின்றனர்.
பட்டா இல்லை என்றாலும் எங்களுக்கு மாற்று இடம் கொடுக்க அரசு முன் வரவேண்டும். இலவச நிலம் அளித்தாலும் எங்களால் வீடு கட்டிக்கொள்ள முடியாது” என்கிறார் அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராணி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.