திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102

Share

சமீப காலமாக விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன என்று சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும், மருத்துவம் மற்றும் உளவியல் துறையைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தளங்களில் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இது உண்மைதான் என்று வழிமொழிகிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதற்கு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு நிகழாததும் ஒரு முக்கியமான காரணம் என்கிறார். கூடவே, திருமணமாகி பல வருடங்களாகியும் தாம்பத்திய உறவே நிகழாத ஒரு தம்பதியரின் கேஸ் ஹிஸ்டரியையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

Sexologist Kamaraj

”திருமணமான ஒரு வருடத்தில், சில மாதங்களில், ஒரு வாரத்தில், ஏன் அரைமணி நேரத்தில்கூட சில திருமணங்கள் உடைந்து கொண்டிருப்பதை என் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காரணம்… பெரும்பாலும் செக்ஸ்…! தற்போதைய புள்ளிவிவரத்தின்படி 100 திருமணங்களில் 4 திருமணங்களில் தாம்பத்திய உறவு நிகழ்வதில்லை. இதில் 3 திருமணங்களில் விவாகரத்து பெற்று விடுகிறார்கள். குறிப்பாக, பிள்ளைகளுக்கு விருப்பமிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்கிற திருமணங்களில் இந்தப் பிரச்னை சற்று கூடுதலாக நிகழ்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரம், காதல் திருமணங்கள் கொஞ்சம் தாக்குப் பிடிக்கின்றன” என்றவர் தொடர்ந்தார்.

”அது கொஞ்சம் வித்தியாசமான கேஸ் ஹிஸ்டரி. திருமணமாகி 13 வருடங்களாகியும் அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நிகழவில்லை. காரணம், அந்தக் கணவன். மருத்துவர்கள் இதை ‘unconsummated marriage’ என்போம்.

பல வருடங்கள் கழித்தும் இதே நிலைமை தொடர்ந்ததால், மனைவி விந்தணு தானம் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொண்டார். ‘செக்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று குடும்பத்துக்காக தியாக வாழ்க்கை வாழ்கிறார்’ என்று அந்தப் பெண்மணியை கணவர் இயல்புக்கும் அதிகமாக மரியாதையாக நடத்த ஆரம்பிக்கிறார்.

காமத்துக்கு மரியாதை

எல்லாவற்றிலும் நல்ல விளைவு, கெட்ட விளைவு என்று இரண்டுமே ஏற்படுமில்லையா..? அந்தப் பெண்மணி கணவரை மட்டம் தட்டிப் பேசுவதில் ஆரம்பித்து அடக்குமுறை வரை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்தாரும் அந்த ஆணை தொடர்ந்து மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தவிர, கணவருடைய குடும்பத்தாரையும் வீட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டே வந்த அந்தக் கணவர், ஒரு நாள் என்னை வந்து சந்தித்தார்.

‘டாக்டர் கல்யாணமான 13 வருஷமா எனக்கும் என் மனைவிக்கும் நடுவுல ஒரு தடவைகூட தாம்பத்திய உறவு நடக்கல… என் பிரச்னையை சரி செய்ய முடியுமா..’ என்றவர், அவர் வாழ்வில் நடந்த, நடந்துகொண்டிருக்கிற அத்தனை துயரங்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

பரிசோதித்துப் பார்த்ததில், நூறு சதவிகிதம் சரி செய்யக்கூடிய ஆண்மைக்குறைபாடு பிரச்னைதான் அவருடையது என்பது தெரிய வந்தது. அதாவது, சரி செய்ய முடிந்த பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், 13 வருட வாழ்க்கையை வீணடித்திருக்கிறார். இத்தனை வருடங்களாக எந்த மருத்துவரையும் ஏன் சந்திக்கவில்லை என்று அவர் மீது சற்று கோபம்கூட கொண்டேன்.

காமத்துக்கு மரியாதை

அந்த ஆணுக்கு ஐந்து நிலையில் சிகிச்சை தேவைப்பட்டது. அதைச் செய்ய ஆரம்பித்தேன். மூன்றாவது நிலையிலேயே, தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து தன்னால் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது அவருக்கு.

அதன் பிறகு, தன் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு தன்னை அவமானப்படுத்திக்கொண்டிருந்த மனைவியின் சொந்தக்காரர்களையெல்லாம் வீட்டை விட்டு அனுப்பி விட்டு, நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

நம் நாட்டு ஆண்கள், மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், அதை அவமானமாக நினைத்துக்கொள்கிறார்கள். ‘தான் ஆம்பள இல்லையோ’ என்று பதறி விடுகிறார்கள்.

இதற்கெல்லாம் அவசியமே இல்லை. நம் உடலில் வருகிற எத்தனையோ ஆரோக்கிய பிரச்னைகள்போல ஆண்மையின்மையும் ஒரு பிரச்னை மட்டுமே… இதில் மான, அவமானம் கொள்ளத் தேவையே இல்லை.

Sex education

முதலிரவில் முடியவில்லையா… பரவாயில்லை…அடுத்தடுத்த இரவுகள் இருக்கின்றன. அப்போதும் முடியவில்லை என்றால், தகுந்த மருத்துவரை சந்தித்து பிரச்னையை சரி செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பியுங்கள். பதிமூன்று வருடங்கள் மருத்துவரையே சந்திக்காமல் வாழ்க்கையை இழப்பதெல்லாம் அறிவின்மை என்றே சொல்வேன்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com