பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார்.
மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே என்று மருகினார். மந்தீப் கவுரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்.
இதனால் தற்போது தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மந்தீப் கவுர், தொடர்ந்து தனது தாடி மற்றும் மீசையை வளர்த்து வருகிறார். அதனை அகற்றவில்லை. மேலும், இப்போது வெளியாள்களைப் பற்றி கவலைப்படாமல் தனது அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.
மன அழுத்தத்தை போக்க ஆன்மிகத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி குருத்வாராவிற்கு சென்று வருகிறார். குருசாஹேப் தன்னை ஆசீர்வதிப்பதால் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது தன் சகோதரிகளுடன் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்து வரும் மந்தீப் கவுர், தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக முன்னர் பல முறை தன்னைத்தானே அடித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.