சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் தி.மு.க. அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை தி.மு.க. அரசு காக்கும் முறையா? 2,500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் தி.மு.க. அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை அறிந்தால் அது தமிழ் இனத்திற்கு அவமானமா? வெகுமானமா? தமிழர் வரலாற்று பெருமைக்கு அது மாபெரும் இழுக்கில்லையா?

அதனை தி.மு.க. அரசு உணர மறுத்து வடமொழிக்கு வால் பிடிப்பதேன்? ஆகவே, தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.