குழந்தையை இடம் மாற்றும் போது வெப்ப நிலையைப் பராமரிப்பது (Warm Transportation):
குழந்தை பிறந்த பிறகு, பிரசவ அறையிலிருந்தோ அல்லது அறுவை சிகிச்சை அறையிலிருந்தோ, குழந்தையை வார்டுக்கோ அல்லது பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவிற்கோ (NICU) மாற்றும்போது, குழந்தையின் வெப்பநிலையைப் பராமரிப்பது மிக மிக முக்கியம். குழந்தை பிறக்கும்போது, வெப்பநிலை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குழந்தையை வார்டு/NICU-விற்கு எடுத்துச் செல்லும்போது வெப்பநிலை பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தவில்லையென்றால், குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும்.
சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல், குழந்தையை தாயின் மார்பு அல்லது வயிற்றின் மீது கிடத்தி, குழந்தையின் மேல் சுத்தமான துணியால் மூடி, தாயின் சருமத்தோடு சருமம் தொடர்பு ஏற்படுத்தும்போது, Skin-to-skin contact மூலம் தாயின் உடல் வெப்பம் குழதையின் வெப்பநிலையைப் பராமரிக்கும். எனவே, குழந்தையை தாயின் மேல் Skin-to-skin contact தொடர்பு ஏற்படுத்தி, பிரசவ அறையிலிருந்து வார்டுக்கு மாற்றினால், குழந்தையின் வெப்பநிலையைப் பராமரிக்க முடியும்.
குழந்தையை பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவிற்கோ (NICU), அல்லது மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கோ, மாற்ற வேண்டிய தேவை இருந்தால், குழந்தை போக்குவரத்து இன்குபேட்டர் (Transport Incubator) பயன்படுத்தினால், குழந்தையின் வெப்பநிலையைப் பராமரிக்க முடியும்.