“தாய்ப்பாலூட்டலை அதிகரிக்க அரசு இவற்றையெல்லாம் எப்போது செய்யும்?!’’ | #BreastFeedingWeek

Share

பணி இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கென்று தனி நேரம், குழந்தைகள் காப்பகம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தினால், தாய்ப்பால் புகட்டல் விகிதம் அதிகரிக்கும் என்கிறார் தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்

தாய்ப்பால் புகட்டலை அதிகரிக்க அரசுத் தரப்பில் பல நடவடிக்கைகள், சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. எனினும், இது போதுமானதாக இல்லை. தாய்ப்பால் புகட்டல் விகிதம் அதிகரிக்க அரசு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

’’நடப்பு 2023-ம் ஆண்டின் தாய்ப்பால் வார செயல்திட்டத் தலைப்பாக `வேலையிடங்களில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேலை இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு சாதாகமான சூழல் நிலவுகிறதா என்று பார்த்தால், வெகுசில அரசு வேலை இடங்களைத் தவிர, பிற அரசு மற்றும் தனியார் வேலை இடங்களில் அதற்கான வசதி இல்லை.

பணிபுரியும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதற்கு என்று பாலூட்டும் இடைவேளை நேரம் (nursing hours) ஒதுக்கப்படுவதில்லை. வேலை நேரங்களில் குழந்தைகளை எங்கே விடுவது என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. குழந்தைகள் காப்பகம் எனச் சொல்லப்படும் க்ரச்கள் (creche) பல வேலை இடங்களில் இல்லை. 20 வயதில் இருந்து 45 வயது வரை இருக்கும் பெண்கள், குறைந்தபட்சம் 50 பேர் வேலை செய்யும் இடங்களில், வேலை நேரம் முடியும் வரை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, குழந்தைகள் காப்பகம் அமைக்கும் சாத்தியம் நிறைய உள்ளது. அரசு, இதனை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும் என்பது தற்காலத் தேவை.

எனினும், இதனை மேற்கொள்வதில் பல சவால்களும் உள்ளன. குறிப்பாக காவலாளர், மருத்துவர் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் சிக்கல்கள் உள்ளன. அடுத்ததாக, உரிய ஊதியத்துடன் கூடிய பிரசவ கால விடுமுறை என்பது பல இடங்களில் கொடுக்கப்படுகிறதா என்பதும் கேள்வியாய் இருக்கிறது.

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தாய்ப்பாலூட்டும் அறை

அப்படியே கொடுத்தாலும் போனஸ், பதவி உயர்வு போன்றவையும் உள்ளடக்கப்படுகிறதா என்பது நிச்சயமில்லை. பால் ஊட்டுவதற்கென்று தனி நேரம் அளிப்பது குறித்தும், வேலை இடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைப்பது சார்ந்தும், பால் ஊட்டுவதற்கு ஏதுவான இடங்களை பணி இடங்களில் ஏற்படுத்துவது குறித்தும் அரசு திட்டமிட வேண்டும்.

குறைந்தபட்சம், ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுமுறை அளிப்பதை தனியார் நிறுவனங்களிலும் கட்டாயப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரை, 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, மக்களிடையே தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாய்ப்பால் ஊட்டல் சார்ந்த ஆலோசனைகளை தாய்மார்களுக்கு வழங்க வேண்டும். எப்படி பாலூட்ட வேண்டும், எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும், குழந்தைக்குப் பால் சென்றடைகிறதா என்பதை எப்படி உறுதி செய்வது, குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை தாய்மார்களுக்கு அரசு வழங்க வேண்டும். பால் ஊட்டல் சார்ந்து நிலவும் அத்தனை தவறான கருத்துகளும் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

தாய்ப்பால்

உதாரணமாக, பால் சுரப்பதற்காகத் தேவையற்ற உணவுகளை, பண்டங்களை எடுத்துக்கொள்வது , குழந்தைக்கு லேகியங்கள் போன்றவற்றை கொடுப்பது குறித்து தெளிவான ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும். எப்போது குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும், உடல் எடை, சிறுநீர் போன்றவற்றை எப்படி கண்காணிப்பது ஆகிய விஷயங்களில் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. அரசு, இதுகுறித்து தக்க நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்; சேவை மையங்களை உருவாக்க வேண்டும். இவை தாய்ப்பால் ஊட்டல் விகிதத்தை நிச்சயமாக அதிகரிக்கும்” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com