தாய்க்கு நெகட்டிவ் ரத்தப்பிரிவு; குழந்தைக்கு மஞ்சள் காமாலை… ஏன்? | பச்சிளங்குழந்தை பராமரிப்பு – 6

Share

பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இத்தொடரில் கடந்த வாரம், குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ குறித்து பார்த்தோம்.

இந்த வாரம், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் காணலாம்…

மருத்துவர் மு. ஜெயராஜ்

DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள்:

* தொப்புள்கொடி ரத்தநாள ரத்தத்தின் ஹீமோகுளோபினின் (Cord Hb) அளவு < 10 g/dL அல்லது பிலிருபினின் (Cord TSB) அளவு > 5 mg/dL என இருக்கும்போது.

* ஒளிக்கதிர் சிகிச்சை கிடைக்கும்போதும் பிலிருபினின் அளவு > 1 mg/dl/hr என்ற விகிதத்தில் வேகமாக அதிகரிக்கும்போதும்.

* ஹீமோகுளோபினின் (Cord Hb) அளவு 10-12 g/dl ஆக இருப்பின், ஒளிக்கதிர் சிகிச்சை கிடைக்கும்போதும் பிலிருபினின் அளவு > 0.5 mg/dl/hr என்ற விகிதத்தில் வேகமாக அதிகரிக்கும்போதும்.

* குழந்தைக்கு ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) பாதிப்பு இருக்கும்போது.

* பிலிருபினின் அளவு, ‘American Academy of Pediatrics (AAP)’-ன் ரத்த மாற்றம் வரைகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பிலிருபின் அளவுகோலில் இருக்கும்போது.

DVET செயல்முறை:

DVET-க்குத் தேவையான ரத்த அளவு கணக்கிடப்பட்டு, ரத்த வங்கியில் இருந்து புதிய ரத்தம் பெறப்படும். தொப்புள்கொடி ரத்த நாளத்தில் ரத்தக்குழல் (Umbilical Venous Catheter) செலுத்தப்பட்டு, 5 ml/kg என்ற சிற்றளவு விகிதத்தில் (aliquots), குழந்தையின் ரத்தம் நீக்கப்பட்டு, புதிய ரத்தம் ஏற்றப்படும். DVET செயல்முறையின்போதும், DVET முடிவுற்று இரண்டு மணிநேரம் வரையும், குழந்தையின் இதயத் துடிப்பு, சுவாச விகிதம், உடல் வெப்பநிலை, தமனி ரத்த ஆக்ஸிஜன் நிரம்பலை (SpO2) போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

DVET செயல்முறையின்போது, ரத்தமாற்ற எதிர்வினைகள், ரத்தசோகை அல்லது ரத்தச் சிவப்பணுக்கள் அதிகரித்தல் (Polycythemia), தொற்று, இதய லயமின்மை, Hyperkalemia போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தாலும், அதிகரிக்கும் பிலிருபின் அளவின் தீவிரத்தால் மூளை பாதிப்பும் உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடுமென்பதால், DVET செய்வதற்கான தேவை இருந்தால் கணடிப்பாக DVET செய்யவேண்டுமெனவே மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.

DVET

கேள்வி: டாக்டர், எனது ரத்தப் பிரிவு O-ve. என் கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட்டெல்லாம் நார்மலாக இருந்தன. 28 வாரங்களில் Anti-D போட்டார்கள். 40 வாரங்கள் முடிந்து நார்மல் டெலிவரி ஆனது. டெலிவரி ஆகி ஒரு மணி நேரத்தில், குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும், ரத்தத்தை மொத்தமாக மாற்றாவிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். DVET செய்ததும், ஜாண்டிஸ் நார்மலானது. தாய்க்கு நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருந்தால் குழந்தைக்கு ஏன் மஞ்சள் காமலை வருகிறது? DVET செய்ததால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்னுடைய அடுத்த கர்ப்பத்தில் இப்படி ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Rh இணக்கமின்மை, Anti D, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் DVET குறித்து கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு மருத்துவ நுணுக்கங்களுடன் விளக்கியிருப்பதால், உங்கள் கேள்விக்கான பதிலை தற்போது அறிந்திருப்பீர்கள். நான் முன்னரே கூறியிருப்பது போல், DVET செய்முறையினால ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் உடனடியாகவே நடைபெறக் கூடியவையெனினும், குழந்தைக்கு பிலிருபின் அளவின் தீவிரத்தால் மூளை பாதிப்பும், உயிருக்கு ஆபத்தும் ஏற்படாமல் DVET தடுத்துள்ளதென்பதை நீங்கள் உணர வேண்டும்.

DVET செய்யப்பட்டதால்தான், மஞ்சள் காமாலை சரியாகியுள்ளது. உங்கள் குழந்தைக்கு தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பும், DVET செய்வதற்கான தேவையும் ஏற்பட்டிருப்பதன் மூலம், உங்கள் உடலில் ஏற்கெனவே Rh இணக்கமின்மையும், Rh ஆன்டிபாடிகள் உள்ளதையும் அறிய முடிகிறது. Rh இணக்கமின்மையின் தீவிரம் அடுத்தடுத்த கர்ப்பத்தில் அதிகரிக்கும்; எனவே, அடுத்த குழந்தையை நீங்கள் பெற்றெடுக்க நினைத்தால், சிசுவின் ரத்த வகை பாசிட்டிவ்வாக இருப்பின், Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும்.

மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால், கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகளை பரிசோதனை செய்ய முடியுமென்பதையும் தீவிர ரத்தசோகைக்கு கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை செய்ய முடியுமென்பதையும் கடந்த அத்தியாயங்களில் வாசித்திருப்பீர்கள்.

எனினும், கர்ப்பப்பைக்குள் ஊசிகள் மூலம் செய்யப்படும் பரிசோதனைகள், ரத்தமாற்றங்கள், இச்செயல்முறைகளிலுள்ள அபாயங்கள், மருத்துவ செலவுகள், சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் என அனைத்தையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, தற்போதைய குழந்தை ஆரோக்கியமாக நலமுடன் இருந்தால் ‘Family planning’ செய்யலாமா அல்லது அடுத்த ‘Pregnancy’ பற்றி முடிவெடுக்கலாமா என்பதை உங்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் குழந்தை நல மருத்துவர், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசித்துவிட்டு, சிறந்த முடிவெடுங்கள்.

அடுத்த அத்தியாயத்தில் தாய்ப்பால் சம்பந்தமாக தாய்மார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விடை காண்போம்.

பராமரிப்போம்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com