Last Updated : 29 Mar, 2020 09:49 AM
Published : 29 Mar 2020 09:49 AM
Last Updated : 29 Mar 2020 09:49 AM

தொகுப்பு: தமிழ்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.
காராமணி வடை
ஒரு கப் வெள்ளைக் காராமணியுடன் சிறுதானியங்களான தினை, வரகு இரண்டில் ஏதாவது ஒன்றைக் கால் கப் சேர்த்து ஊறவையுங்கள். சிறுதானியம் இல்லையென்றால் அரிசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கலவையை மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 3 டீஸ்பூன் தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள்.
அதனுடன் கால் டீஸ்பூன் பெருங்காயம், விரும்பினால் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள். புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.