சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பேற்றுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததை அடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் அதிரடியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளராக எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் கூடும் பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் கூறி வருகிறார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். அதே நேரத்தில் நாளுக்கு நாள் இபிஎஸ் கை ஓங்கி வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பிரச்னை எழுந்துள்ள நிலையில் போட்டிக்கு சசிகலாவும் நான் தான் அதிமுகவின் உண்மையான பொது செயலாளர் என்று கூற தொடங்கியுள்ளார். அதாவது அதிமுகவுக்கு நான்தான் இப்போதும் பொதுச்செயலாளராக இருக்கிறேன். அதிமுக என்பது ஒரு தனிநபரின் வீடோ அல்லது தனியார் அமைப்போ அல்ல.
11ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர். எனவே அடுத்தக்கட்டமாக அதிமுக தொண்டர்களை திரட்டி தலைமை கழகத்துக்கு செல்வேன். நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். சசிகலா தலைமை கழகத்துக்கு வந்தால் பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுக்கும். இதை உணர்வு அதிமுக தலைமை கழகத்துக்கு எடப்பாடி தரப்பில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமானோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் திரையில் படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆர்வமிகுதியில் பெண் ஒருவர் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பாட்டுக்கு ஏற்றார் போல் அந்த பெண் ஆட்டம் போடுவது அதில் வருகிறது. அதனை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ரசிப்பது போல அந்த காட்சி உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம் என்பது ஒவ்வொரு அதிமுகவினருக்கும் கோயில் போன்ற இடம். அப்படியிருக்கும் போது அதிமுக தலைமை அலுவலகத்திலேயே குத்தாட்டம் போடுவது எந்தவிதத்தில் நியாயம் என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது ஆட்டம் போடும் வீடியோ பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.