தலைமுறைகளை உருவாக்கும் தைராய்டு தடுக்க என்ன வழி? | What is the way to prevent the generation of thyroid?

Share

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அதீத உடல்வலி காரணமாக என்னிடம் வந்திருந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருடைய உடற் பயிற்சியாளர் அவருக்கு அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். இவரும் அதையெல்லாம் அப்படியே செய்துள்ளார். எனினும் பலன் இல்லை. எடையும் குறையவில்லை, உடல்வலி மட்டுமே மிஞ்சியது.

நான் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் அவருக்கு குறைவான தைராய்டு இருந்தது தெரியவந்தது. அதற்கான மருத்துவரை அணுகச் சொல்லி மருந்துகள் எடுத்துக்கொண்டபின் உடல் எடை குறைப்பதற்கான எளிமையான உடற்பயிற்சிகளை அவருக்கு வழங்கினேன். எடையும் குறைந்து, தைராய்டால் வரும் மற்ற உடல் பிரச்னைகளும் குறைய ஆரம்பித்தது. நம்மில் பலருக்கு தைராய்டு குறித்து தெரிவதில்லை. தைராய்டு என்றால் என்ன? ஏன் வருகிறது? வந்தால் என்ன செய்வது? இயன்முறை மருத்துவரின் பங்கு என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்க்கலாம்.

தைராய்டு சுரப்பி…

*நம் உடல் முழுவதும் வேதியியல் அடிப்படை சார்ந்து இயங்கும் கருவி. இந்த வேதியியல் மாற்றங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஹார்மோன்கள். நாம் பிறப்பது முதல் இறப்பது வரை நம் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்கள் அவசியம்.

*இதில் முக்கியமானது தைராய்டு சுரப்பி சுரக்கும் மூன்று ஹார்மோன்கள்.

*நம் கழுத்தில் காற்றுக் குழாயின் முன் சிறு பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் உறுப்புதான் தைராய்டு.

*மூளை வளர்ச்சி, சிசுவின் உடல் உருவாக்கம், இருபாலினரும் பருவமடைவது என அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் படிநிலைகளில் தைராய்டு சுரப்பியின் பங்கு முக்கியமானது.

குறைவாக சுரந்தால்…?

*கிரேக்க மொழியில் ‘தைரோஸ்’ எனில் கேடயம் என்று பொருள். இப்படி நம்மை கேடயமாக காக்கும் தைராய்டு ஹார்மோன்கள் அளவை விட அதிகமாக சுரந்தால் ‘ஹைப்பர் தைராய்டிசம்’ எனவும், குறைவாக சுரந்தால் ‘ஹைப்போ தைராய்டிசம்’ எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

*இரண்டுமே சிக்கலான பிரச்னைகள்தான் எனினும், குறைவாக சுரப்பதால் அதிகம் பாதிப்பு இருப்பதாலும், இந்தப் பிரச்னை அதிக அளவில் இருப்பதாலும் இதனை இங்கு பார்ப்போம்.

*குறைவாக சுரக்க காரணமாக குறைந்த ஐயோடின் அளவு, கதிர்வீச்சுக்கு உள்ளாகுவது, வாழ்க்கை முறை மாற்றங்கள், தன்னுடல் தாக்கு நோய், சில வகை மருந்துகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள்…

*அதிக  உடற்பருமன் (ஒரு மாதத்தில் பத்து கிலோ வரை கூட சிலருக்கு எடை உயரும்).

*உடல் சோர்வு.

*மலச்சிக்கல்.

*வறண்ட சருமம்.

*எதையும் சரிவர புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கவனக்குறைவு இருப்பது.

*ஞாபக மறதி.

*சின்ன விஷயமாக இருந்தாலும் அதிக கோபம், எரிச்சல் உணர்வு வருவது.

*ஒழுங்கற்ற மாதவிடாய்.

*கரு உருவாவதிலும், கரு தங்குவதிலும் சிக்கல்.

*ஆண்களுக்கும் கரு உருவாக போதுமான, சத்துள்ள விந்தணுக்கள் உற்பத்தியாகாதது.

*உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல் இருக்கும் என்பதால்  சத்துகுறைபாடுகள் இருக்கும்.

*செரிமான மண்டலம் சார்ந்த பிரச்னை இருக்கலாம்.

*இளநரை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தரவுகள் சொல்வது…

*ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

*உலக அளவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு தைராய்டு பிரச்னை உள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.

*மெனோபாசை நெருங்கும் நாற்பது வயதை தாண்டிய பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை பத்து வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்று கருத்தரிக்கும் வயதுடைய பெண்களிடம்
பரவலாக அதிகரித்து வருகிறது.

*இந்தியாவில் இருபது சதவிகிதம் பெண்கள் தனக்கு தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியாமலே இருக்கின்றனர்.

செய்ய வேண்டியவை…?

*தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய ஐயோடின் எனும் சத்து அவசியம் என்பதால், இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உணவு நிபுணரை அணுகி மேலும் எந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். தினசரி செயல்பாட்டுக்கு 140 மைக்ரோ கிராம் ஐயோடின் அவசியம் தேவை.

*மலச்சிக்கல் இருக்கும் என்பதால், அதனை கூடுமானவரை தடுக்க நார்சத்து மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கள், பழங்களை உண்ண வேண்டும்.

*வைட்டமின் பி குடும்பத்தை சேர்ந்த சத்துக்களை உணவு நிபுணரை கேட்டு தெரிந்துகொண்டு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*தைராய்டு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் மாத்திரை சாப்பிடும் முன் மற்றும் பின் ஒரு மணி நேரம் எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கியமாக தேநீர், காபி போன்றவை மாத்திரையை வேலை செய்யவிடாமல் தடுக்கும் என்பதால் பலன் தராது.

*மாத்திரையை மருத்துவர் பரிந்துரையுடன்தான் எடுக்க வேண்டும். அதேபோல் அவ்வப்போது பரிசோதனை செய்து மருத்துவரிடம் தைராய்டு அளவுகளை காண்பிக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை…?

*சமைக்காமல் பச்சையாக முட்டைகோஸ், பீன்ஸ் குடும்பத்தை சேர்ந்த எந்த ஒரு காய்களையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதாவது, சாலட், சான்விட்ச் முதலியனவற்றில் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பச்சையாக உண்பதால் இதில் உள்ள ஒரு வகை வேதிப்பொருள் தைராய்டு சுரப்பியை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது.

*காலிஃபிளவர், நூக்கல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

*முளைகட்டிய பயிறு வகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

*சோயா சார்ந்த உணவுகள் தவிர்ப்பது நல்லது.

பாதிப்புகள்…

*இந்த வகை பிரச்சனையை சரி செய்யாமல் விட்டால் கண்டிப்பாக இதயம், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

*கரு உருவாக காலத் தாமதம் ஆகும்.

*தைராய்டு பாதிப்பு இருப்பது தெரிந்தும் சிலர் கருத்தரித்த பின் மாத்திரைகளை சரிவர எடுக்க மாட்டார்கள். இது முற்றிலும் தவறு. கரு வளர்ச்சிக்கு 90 சதவிகித பங்கு தைராய்டு ஹார்மோன்களால் உள்ளதால் இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

*உடல் எடை அதிகரிப்பதால் இன்சுலின் எதிர்ப்பு நிலை, பி.சி.ஓ.டி போன்ற பிற பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம்.

எப்படி கண்டறிவது…?

*ஐயோடின் சத்து குறைவாக இருக்கிறதா? என்று தெரிந்துகொள்ள ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

*ரத்தப் பரிசோதனை வழியாக ஹார்மோன்களின் அளவை தெரிந்துகொள்ள முடியும்.

தீர்வுகள்…

*ஹார்மோன்கள் சரியாக சுரக்க மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டிய சூழல் இருக்கலாம். சிலருக்கு நிலைமை சரியானதும் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரைகள் நிறுத்திக் கொள்ளலாம்.

இயன்முறை மருத்துவம்…

*உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

*நடைப்பயிற்சி, நடனம், ஜாக்கிங், யோகா, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல் பயிற்சி, ஏரோபிக்ஸ் என எதனை வேண்டுமானாலும் உங்கள் இயன்முறை மருத்துவரிடம் ஆலோசித்து செய்து வரலாம்.

*கூடவே தசைகளை உறுதியாக வைத்துக்கொள்ள தேவையான பயிற்சிகளையும் இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்பார்.

வரும் முன் காப்போம்…

பெரும்பாலான ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்களால் வருகின்றன. தைராய்டும் அதில் அடங்கும். எனவே,

*தினசரி உடற்பயிற்சி.
*போதிய நேர உறக்கம் ( இரவு 10 – காலை 6).
*சத்துள்ள உணவு.
*சூரிய ஒளி நம் மீது படுதல்.
*மன அழுத்தம் இல்லாமல் இருப்பது.
*வெளி உணவுகளை தவிர்ப்பது போன்றவை மிக முக்கியம்.

குழந்தைகளுக்கு…

*கரு உருவாகி பதினோறாவது வாரம் முதல் கருவின் எல்லா வளர்ச்சியிலும் தைராய்டின் பங்கு இருக்கிறது. மேலும் குழந்தை பிறந்த பின்பும் அதன் முழு வளர்ச்சிக்கும் தைராய்டு அவசியம் என்பதால், கர்ப்பிணிகளும், தாய்மார்களும் தங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து போதுமான அளவு சுரப்பதற்கு வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

*குறைவான சுரப்பு இருந்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். மூளை வளர்ச்சியும் சேர்ந்து பாதிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ரத்த தானம்

எல்லோருக்கும் வாழ்வில் ஒரு தடவையாவது ரத்த தானம் செய்ய விருப்பம் இருக்கும். எனவே தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய விரும்பினால் தொடர்ச்சியாக மருந்துகள் எடுக்க வேண்டும். பின் தைராய்டு கட்டுக்குள் வந்தபின் அடுத்த ஆறு மாதம் மாத்திரை எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரியான அளவில் தைராய்டு இருந்தால் தாராளமாக ரத்த தானம் செய்யலாம்.ஆகவே, தைராய்டு விஷயத்தில் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கான உரிய சிகிச்சையை எடுத்துக்கொண்டால்… பெரும் விளைவுகளை தடுத்து நாம் மட்டுமல்லாமல், நம் வருங்கால சந்ததிகளையும் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com