- மோகன்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images
“நிவாரண திட்டங்களில் பலன்பெற அவை எளிமையான வகையில் இல்லை,” என்று ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்ற கார்த்திக் கூறுகிறார்
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஐந்து பயனாளிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தாக்கல் செய்திருந்த ஆர்.டி.ஐ மனுவிற்கு அம்பேத்கர் ஃபவுண்டேஷன் பதிலளித்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் என்றால் என்ன?
இந்திய அரசு கடந்த 1992-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனை தோற்றுவித்தது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை வளர்ப்பது, புத்தகங்களை வெளியிடுவது, வன்கொடுமையால் பாதிக்கப்படும் எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, மருத்துவ தேவைகளுக்கான நிதியுதவி வழங்குவது, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு சிறப்பு ஊக்க நிதி வழங்குவது உள்ளிட்ட 11 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
வன்கொடுமை பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்
டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிக முக்கியமானது எஸ்.சி/எஸ்.டி சமூக மக்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கான நிவாரணம் வழங்குவது.
இந்த திட்டத்தின் கீழ் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். இது பாதிக்கப்பட்டவர் அல்லது அவரைச் சார்ந்தவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணம் மாநில அரசு வழங்கும் நிவாரணத்திலிருந்து வேறுபட்டது. பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு நிவாரணங்களையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் விவரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணம் மாநில அரசு வழங்கும் நிவாரணத்திலிருந்து வேறுபட்டது
தமிழ்நாடு புறக்கணிப்படுகிறதா?
இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் எவ்வளவு பயனாளிகளுக்கு நிவாரணம்/நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களை சமூக ஆர்வலர் கார்த்திக் ஆர்.டி.ஐ மூலம் பெற்றுள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமே ஐந்து பயனாளிகள் மட்டுமே பலன் பெற்றுள்ளனர் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. ஐந்து பயனாளிகளுக்கு ரூ.15,25,000 மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 137 பயனாளிகள் மட்டுமே பலன் பெற்றுள்ளனர். ஒன்பது மாநிலங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் மூலம் பலன் பெற்றுள்ளனர். பிற மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒரு பயனாளி கூட பலன் பெறவில்லை.
தமிழ்நாட்டில் ஐந்து பயனாளிகளுக்கு ரூ.15,25,000 மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
அதே சமயம் குஜராத் மாநிலத்தில் மட்டும் 70 பயனாளிகள் ரூ.1.80 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர். உத்திரப் பிரதேசத்தில் 48 பயனாளிகள் ரூ.2.29 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர்.
இந்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்ற கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசுகையில், `தேசிய அளவில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 137 பேர் மட்டுமே நிவாரணம் பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த ஃபவுண்டேஷன் பற்றியோ அல்லது இதன் திட்டங்கள் பற்றியோ மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு விஷயம், மாறாக இந்த நடைமுறைகள் எல்லாம் எளிமையாக இருக்க வேண்டும். மக்களுக்காக போடப்படும் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மாநில அரசும் மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்` என்றார்.
டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனின் செயல்பாடு தொடர்பாக ஆராய மத்திய அரசு அமைத்திருந்த குழு, `வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்படும் நிதியும் இதில் பெறப்படும் விண்ணப்பங்களும் படிப்படியாக குறைந்து வருகின்றன. இதனால் எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைவதாக அர்த்தம் கிடையாது. சிக்கலான, நெடிய நடைமுறை இந்த திட்டத்தில் பலன் பெறுவதில் பெரிய தடையாக உள்ளது` எனத் தெரிவித்திருந்தது.
சமூகநீதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இதன் திட்டங்கள் தொடர்பாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இந்த திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
திட்டங்கள் தொடர்பாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட போதிய விழிப்புணர்வு இல்லை
வெளிப்படைத்தன்மை இல்லை
இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் ஆணையர் மதுமதி பிபிசி தமிழிடம் பேசுகையில், `தமிழ்நாட்டிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1,200 விண்ணப்பங்கள் சென்றுள்ளன. டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனுக்கு மாவட்ட நிர்வாகத்திலிருந்து விண்ணப்பங்கள் அனுப்பினால் அதை ஆதி திராவிட நலத்துறைக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் விண்ணப்பங்களை ஆதி திராவிடர் நலத்துறை தொடர்ந்து கண்கானித்து வருகிறது.
ஆனால் எவ்வளவு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன, எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள், எத்தனை மனுக்களை நிராகரிக்கிறார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை` என்றார்.
டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனின் பதில் என்ன?
இது தொடர்பாக கருத்து பெற டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேனை தொடர்பு கொண்ட போது அதன் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் நம்மிடம் பேசினார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நிர்வாகி திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறிவிட்டார்.
இந்த கட்டுரை தொடர்பாக விளக்கம் கேட்டு டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனுக்கு பிபிசி தமிழ் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டுரை பிரசூரிக்கப்படும் வரை அவர்களிடமிருந்து பதில் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் தரப்பு பதில் கிடைத்தவுடன் கட்டுரையில் இணைக்கப்படும்.
கடல் பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: ஒடிஷா இளைஞர்கள் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: