தமிழ்நாட்டில் பரவும் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல்… தப்பிப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

Share

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை, புதுச்சேரியில் ஆரம்பம் முதல் தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 26-ம் தேதி வரை விடுமுறை என, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவல் தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்படும் நபர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் போன்றவை இடம் பெற்றுள்ளன.

ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன்

மாறுபடு அடையும் வைரஸ்

இது தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனிடம் பேசினோம்…

“தற்போது H3N2 என்ற வைரஸ் இந்தியா முழுக்க பரவியுள்ளதாக, ஐசிஎம்ஆர் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கே இந்தக் காய்ச்சல் அதிகளவில் இருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சலை எப்படிக் கண்டுபிடிப்பது, வந்தபின் எப்படிக் கையாள்வது உள்ளிட்டவை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தான், மாநில பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. H3N2 என்பது இன்ஃப்ளுயென்சா வைரஸ். இது A,B,C,D என வகைப்படுத்தப்படுகிறது. இது மாறுபாடு அடையக்கூடிய வைரஸ். மனிதர்களை பாதித்து விலங்குகளையும் பாதித்தால் வைரஸ் மாறுபாடு அடையும்.

குறிப்பாக இந்த H3N2 வைரஸ் காய்ச்சல், 1968 மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. அந்தக் காலத்தில் பிறந்த நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால், அவர்களுக்கு மீண்டும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாது. அவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக்குறைவு. அக்காலத்தில் இந்த வைரஸ் ஒரு பெருந்தொற்றாக இருந்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு இது போன்ற பலதரப்பட்ட வைரஸ்கள் உருமாறி இன்ஃப்ளுயென்சா வைரஸாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்போது, இதுபோன்ற வைரஸ் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது.

வைரஸ் காய்ச்சல் | மாதிரிப்படம்

A, B, C பிரிவுகளும் அறிகுறிகளும்!

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் A,B,C என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். A பிரிவு என்பது லேசான காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு உள்ளவர்களைக் குறிக்கும். B பிரிவு என்பது தீவிர காய்ச்சல், இணைநோய் உள்ளவர்களையும், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களையும் குறிக்கும். B பிரிவில் உள்ளவர்களுக்கு ஒசெல்டாமிவிர் (Oselta Mivir) என்ற மருந்தினை ஐந்து நாள்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும். C பிரிவு என்பது தீவிர காய்ச்சல், நுரையீரல் தொற்று, மூச்சு விடுவதில் சிரமம், கைகால்கள் நீல நிறமாக மாறுவது போன்ற அறிகுறிகள் உள்ளவர்களைக் குறிக்கும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்தே இந்த வைரஸை எளிதாக அடையாளம் கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருந்துகளை கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மிக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. இந்தக் காய்ச்சல் தற்போது அச்சப்படும் அளவில் இல்லை. கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கண்காணித்து சிகிச்சை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவே ஒருங்கிணைந்த சுகாதார தளம் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு திட்ட இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிவிடாமால் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் தான் இணையாளத்தில் தரவுகளைப் பதிவு செய்வது மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை இணை நோய் உள்ளவர்கள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

முகக்கவசம்

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை மக்கள் அதிகம் கூடுமிடங்களுக்குச் செல்ல கூடாது. இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாயை மூடிக் கொளள வேண்டும்.

குழந்தைகளுக்கு இருமல், தும்மல் போன்றவை இருந்தால் பெரியவர்கள் அவர்களை தூக்கி விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. காய்ச்சல் பாதித்தவர்கள் மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக இருந்தால் இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com