- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
மே தினம் உள்பட ஆண்டு முழுவதும் உழைக்கக்கூடிய துறையாக இருந்தாலும் காவல்துறையில் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. ‘இதர அரசுத் துறைகளைப் போல எந்த விடுப்பையும் அனுபவிக்க முடியாது. இதனால் ஏற்படும் மனஉளைச்சல்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.
தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைந்த ஆட்சியில் முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலின், ‘காவலர்கள் தங்களின் உடல்நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும் அவர்கள் குடும்பத்தினருடன் போதிய நேரத்தைச் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான அனைவருக்கும் ஒருநாள் ஓய்வு வழங்கப்படுகிறது’ என சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு காவல்துறை வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘ ஐந்து நாள் வேலை நாள்களில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் தவிர்க்க முடியாத சூழலில் பணிபுரிய நேர்ந்தால் ஒரு நாளைக்குரிய ஊதியம் வழங்கப்படும். அந்தந்த காவல் நிலையத்தின் சூழலைப் பொறுத்து வார விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம், விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடுப்பு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முறையாக வழங்கப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தால் காவலர்கள் மன நல ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக காவல் நிலையங்களில் ‘லாக்கப்’ குற்றங்கள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
”காவலர்களுக்கு விடுப்பு கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. சென்னையில் மட்டுமே காவலர்களுக்கான வார விடுப்பு என்பது முறையாகப் பின்பற்றப்படுகிறது. சில தென்மாவட்டங்களில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அங்கெல்லாம் உயர் அதிகாரிகள் மனது வைத்தால்தான் விடுமுறை என்பதை நினைத்துப் பார்க்க முடியும். இந்தப் போக்கு காவல்துறையில் ஏற்படும் உயிரிழப்புகள் அண்மைக்காலமாக அதிகரிக்கவும் காரணமாகின்றன” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேதுராமன்.
தொடரும் மரணங்கள்
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஓரிரு ஆண்டுகளில் காவல்துறையில் ஏற்பட்டுள்ள மரணங்களையும் இவர் பட்டியலிடுகிறார். 2021ஆம் ஆண்டில் 81 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் மாரடைப்பால் 59 பேரும் விபத்தால் 69 பேரும் தற்கொலையால் 40 பேரும் உடல்நலக் குறைவால் 132 பேரும் இறந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் சேதுராமன்.
”மனஉளைச்சலின் காரணமாக இறந்ததை ‘தற்கொலை’ என்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். 2020ஆம் ஆண்டில் பார்த்தால் தமிழ்நாடு காவல்துறையில் 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனாவை விட பிற காரணங்கள்தான் இந்த இறப்புகள் அதிகமாக இருந்துள்ளன” என்கிறார் அவர்.
மேலும் அவர், ”ஒருவர் இதயநோயாளியாக இருந்தால் அவருக்கு காவலர் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வீடு இருக்கும். ‘தரைத் தளத்தில் வீடு வேண்டும்’ எனக் கேட்டு நிர்வாகப் பிரிவில் மனு கொடுத்தால் அந்த மனு ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருக்கும். தவிர, இதர அரசு பணிகளைப் போல 10 மணி முதல் 6 மணி வரையில் வேலை என்பதெல்லாம் இங்கு கிடையாது. காலை 7 மணிக்கு வந்தால் 11 மணி வரையில் நிற்க வேண்டும். அதன்பிறகு தேநீர் இடைவேளை என பத்து நிமிடம் கிடைக்கும். வீட்டுக்குச் செல்லும் நேரத்தில்தான் எங்காவது போகச் சொல்வார்கள். ஆங்கிலேயர் காலத்தில் வகுக்கப்பட்ட விதிகளின்படிதான் இப்போதும் காவல் அமைப்பு முறையின் சில பகுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் கொடுமை என்னவென்றால், ஒருவர் எஸ்.ஐ ஆகிவிட்டால் அவருக்கு ‘அதிகாரி’ என்ற அந்தஸ்து வந்துவிடும். அவரை எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்வார்கள். திருச்சியில் இருந்து வேறு மண்டலத்துக்கு மாறிவிட்டாலும் குடும்பம் திருச்சியில் இருக்கும். இடமாற்றம் செய்யப்பட்ட ஊரில் எவ்வளவு நாள் பணியில் இருக்க வேண்டும் என்பது தெரியாது. இதனால் ஏற்படும் கோபத்தை தங்களைத் தேடி வரும் பொதுமக்களிடம் காட்டுவார்கள். தொடர்ந்து எஸ்.ஐ மீது யாராவது புகார் கொடுத்தால் ஆயுதப்படைக்கு மாற்றி விடுவார்கள்” என்கிறார் சேதுராமன்.
காவல்துறை, மக்களின் நண்பனா?
பட மூலாதாரம், Getty Images
மேலும், ”காலில் அணியும் பூட்ஸை அவ்வளவு எளிதாக அணிய முடியாது. முந்தைய காலங்களில் நமது சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் ஷூ கிழியாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. இப்போது அதுபோன்ற பூட்ஸ் தேவையில்லை. தற்போதைய வெய்யில் காலங்களில் பழைய காலத்துக் காலணிகள் மிகவும் சிரமத்தைக் கொடுப்பதாக உள்ளன” என்கிறார்.
”வார விடுமுறை நடைமுறையால் காவலர்களின் மன அழுத்தம் குறைந்துள்ளதா?” என்று அவரிடம் கேட்டோம்.
”இல்லை. கரூர் உள்பட சில மாவட்டங்களில், ‘வேலை வேண்டாம்’ எனக் கூறாமல் நீண்ட விடுப்பில் செல்லும் காவலர்கள் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு அவர்கள் தங்களுக்கு ‘உடல் சுகவீனம் என காரணம் கூறுகின்றனர். இதற்கான காரணத்தை உயர் அதிகாரிகளும் ஆராய்வதில்லை. காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புத்தாக்க பயிற்சிகளை அளிக்கும் வழக்கம் காவல்துறையில் உள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் யோகா போன்ற பயிற்சிகளை காவலர்கள் மேற்கொள்வார்கள்.
பட மூலாதாரம், Getty Images
முன்பெல்லாம் ஒவ்வோர் வெள்ளிக்கிழமையும் எதாவது ஒரு மைதானத்தில் ‘கவாத்து’ பயிற்சி நடக்கும். லத்தியை எவ்வாறு சுழற்றுவது, குற்றவாளிகளை எப்படிப் பிடிப்பது, காலில் எங்கே அடிப்பது என்றெல்லாம் அதிகாரிகள் வகுப்பெடுப்பார்கள். இந்தப் பயிற்சி என்பது காவலர்களின் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தது. காலம்காலமாக நடந்து வந்த இந்தப் பயிற்சி தற்போது நடப்பதே இல்லை. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்தனர். அந்தச் சைக்கிள்கள் எங்கே போயின எனத் தெரியவில்லை. சீசனுக்கு ஏற்றவாறு சில உத்தரவுகள் வரும். அதை சில நாள்கள் கடைபிடிப்பார்கள். அவ்வளவுதான்,” என்கிறார் சேதுராமன்.
மேலும், ”வாகன சோதனை என்ற பெயரில் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பொதுமக்களை சட்டத்துக்குள் கொண்டு வந்து தண்டிக்கின்றனர். காவல் நிலையம் சென்றால் உயிரோடு திரும்புவோமோ என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. காவல்துறையில் உள்ள அடிப்படையான விஷயங்களை மாற்றாதவரையில் மக்கள் நண்பனாக காவல்துறை மாறுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.
காவல்துறை – பொதமக்கள் இடைவெளி எப்போது குறையும்?
பட மூலாதாரம், Getty Images
”காவல்துறைக்குப் பணிச்சுமை இருப்பது உண்மைதான். அதற்காக பொதுமக்களை அச்சுறுத்துவதையெல்லாம் ஏற்க முடியாது. உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்கள் தீர்வினைப் பெறலாம். காவல்துறையைப் பொறுத்தவரையில் வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது. ஆள் பற்றாக்குறை இருந்தால் புதிய நபர்களைத் தேர்வு செய்யலாம். காவலர்களுக்கு விடுப்பு கிடைத்தால் மனஅழுத்தம் குறைக்கும். குற்றவாளிகளைத் தேடுவதில் சோர்வு, அதிகாரிகளின் வசை உள்பட சில காரணங்களால் காவலர்களுக்கு மனரீதியாக பிரச்னைகள் வருகின்றன. அதற்கான தீர்வை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுத் தீர்வைப் பெற வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்துவதற்கான காரணமாக கூறுவதை ஏற்க முடியாது” என்கிறார், மனித உரிமை ஆர்வலரான வழக்குரைஞர் பா.புகழேந்தி.
”காவலர்களுக்கு விடுப்பு அளித்தும் சர்ச்சைகள் ஓயாதது ஏன்?” என ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ”ஒவ்வோர் காலகட்டத்திலும் காவல்துறையின் தலைமை இயக்குநரிடம் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறை பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பொதுமக்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அதிகாரிகளும் உணர்ந்து வைத்துள்ளனர். விடுப்பு உள்பட சில விஷயங்களை இதர துறைகள் போல சரியான நேரத்துக்குப் பெற முடியாது,” என்கிறார்.
”தொடர்ந்து நான்கு நாள்கள் இரவு பகலாக வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். போராட்டம், வழக்கு என முக்கிய சம்பவம் நடந்தால் விடுப்பு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது. அதேநேரம், குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் சரியில்லாவிட்டால் விடுப்பு கொடுக்காமல் யாரும் இருக்கப் போவதில்லை. ஒருவேளை விடுப்பு வழங்கப்படாவிட்டால், உயர் அதிகாரிகள் தங்களைப் பழிவாங்குவதாகவும் சிலர் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் சில இடங்களில் பிரச்னைகள் வருகின்றன” என்கிறார் கருணாநிதி.
”காவலர்களுக்கு யோகா உள்பட சில பயிற்சிகளை தொடங்குவார்கள். அதனை அடுத்து வரும் உயரதிகாரிகள் தொடர மாட்டார்கள். அண்மைக்காலமாக கோவை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் பொதுமக்களை நோக்கி காவல்துறை அதிகாரிகள் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதேபோல் அனைவரும் செய்யத் தொடங்கிவிட்டால் காவலர்களுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறைந்துவிடும். இது தொடர்ந்தாலே காவலர்களின் பணியும் மிக எளிதாகிவிடும்” என்கிறார் கருணாநிதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: