சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 1963ல் நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய அண்ணா கோரினார். பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அண்ணா, கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக் சபா என்று மாற்றியதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்றார். தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர்: ஆளுநர் ரவிக்கு ஜெயக்குமார் கண்டனம்
Share