
ஒளவை நடராசன்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86.
சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது.
இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவந்த நிலையில் இன்று மாலை ஏழே முக்கால் மணியளவில் அவர் உயிரிழந்தார்.
1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒளவை துரைசாமி – லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற தமிழறிஞரான இவருடைய தந்தையார் செய்யாறில் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்தபோது இவர் பிறந்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற நடராசன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
பிறகு மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார். பிறகு அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்த நடராசனை, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநராக நியமித்தார்.
செயலர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அல்லாத முதல் நியமனம்
இதற்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலராக நடராசன் நியமிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் இப்படி செயலர் பணியில் நியமிக்கப்பட்டது அதுவே முதல்முறை.
1992இல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார் நடராசன்.
2014ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட அவர், நவம்பர் மாதமே அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர்
வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள் உள்ளிட்ட பல நூல்களை நடராசன் எழுதியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட ஔவை நடராசன், மதுரையில் 1982ல் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார்.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது, இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம ஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
இவருடைய பெயருக்குப் முன்னால் உள்ள ‘ஔவை’ என்பது இவருடைய தந்தையார் பிறந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பத்தைக் குறிக்கும்.
இவருடைய மரணத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஒளவை நடராஜன் அவர்களுடைய பேச்சின் சுவையும் எழுத்தின் வலிமையும் நட்பின் ஆழமும் என்றென்றும் நிலைத்து நின்று அவருடைய புகழைப் பறைசாற்றும்” என்று அவர் தன் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஒளவை நடராசனின் மனைவி தாரா கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: