சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2011ம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் தி.மு.க.வின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில், புதிய அமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.