தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வெவ்வேறு வகையான காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகள், மக்கள் மத்தியில் பரவலாகத் தென்படுகின்றன. பலரும் பரிசோதிக்க முன்வராத நிலையில், இது கோவிட் தொற்றின் அறிகுறியா, சிக்கன் குனியா காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற சந்தேகம் எழுகிறது.
திடீரென காய்ச்சல் பரவலுக்கான காரணம் என்ன…மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனிடம் கேட்டோம்…
“காய்ச்சல் பரவல் கொஞ்சம் இருந்தாலும், மக்கள் அதிகம் பதற்றம் கொள்ளும்படியான சூழல் இல்லை. குறிப்பிட்டுச் சொல்வதானால் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் உள்ள நோயாளிகள், தற்போதைய சூழலில் யாரும் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், ஒற்றைப்படையிலேயே உள்ளது. ஒருநாளைக்கு 6 அல்லது 7 நபர்கள் என்ற வீதத்திலேயே பார்க்க முடிகிறது. இதுதவிர சாதாரண ஃப்ளு வகை காய்ச்சல் பரவல் உள்ளது.