நம்முடைய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அதற்காக காய்கறிகள், பழங்கள் என பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறோம். கூடவே, நவதானியங்களில் ஒன்று தினமும் நம் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டால், ஆரோக்கியத்தில் இன்னும் சில படிகள் முன்னேற முடியும். இந்த வார வீக் எண்டுக்கு நவதானிய சமையலை முயன்று பாருங்களேன்…
தேவையானவை:
தட்டைப்பயறு 250 கிராம்
பெரிய வெங்காயம் 50 கிராம்
பச்சை மிளகாய் 2
உப்பு 5 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
இஞ்சி 5 கிராம்
பூண்டு 3 பல்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
சோம்பு அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தட்டைப்பயறை நன்றாகக் கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த தட்டைப்பயறுடன், சீரகம், சோம்பு, உப்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு சூடான எண்ணெயில் வடைகளாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.