காஸ்பர் ரூட் (Casper Ruud) மற்றும் மரின் சிலிக் (Marin Cilic) ஆகிய இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி பிரான்ஸின் பிலிப் சாட்ரியர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நடுவில் 22 வயதுள்ள பெண் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டென்னிஸ் நெட்டுக்கு அருகே வந்தார்.
அவரது டி-சர்டில் “நமக்கு இன்னும் 1028 நாள்களே மீதமுள்ளன” (we have 1028 days left) என்று அச்சிடப்பட்டிருந்தது. சரடு ஒன்றால் தனது கழுத்தை டென்னிஸ் வலையுடன் இணைத்து கட்டி கொண்டார். சில நிமிடங்கள் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பார்வையாளர்கள் திகைத்தனர். பின்னர் சுதாரித்த பாதுகாவலர்கள் அவரை வெளியேற்ற மைதானத்துக்குள் நுழைந்தனர்.
2025-ல் ஐக்கிய அமைப்பின் சமீபத்திய பருவநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட கடைசி நாளைக் குறிப்பதுதான் ‘இன்னும் 1028 நாள்கள்’ என்கிற வாசகம். பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கடைசி நாள் அதுதான். பருவநிலை மாற்றம் குறித்து கவனத்தை ஏற்படுத்த அந்தப் பெண் முயன்றுள்ளனர். வேறு எந்தப் பாதிப்பும் இல்லாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
15 நிமிட பரபரப்புக்கு பிறகு மீண்டும் போட்டி தொடர்ந்தது. அதில் நார்வேவைச் சேர்ந்த காஸ்பர் ரூட் வெற்றி பெற்றார். இவர் இறுதிப் போட்டியில் 13 முறை சேம்பியனான ரபேல் நடாலை எதிர்கொள்ளப் போகிறார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ரூட், “உண்மையைச் சொல்லப் போனால் நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. இதற்கு முன்பு எனக்கு இப்படி நடந்ததில்லை. நாங்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினோம். மீண்டும் வந்த போது விளையாட்டில் கவனத்தைக் குவிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.