
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.
கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சூர்யகுமார் யாதவும் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அலஹசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றினார். 5 ரன்களில் அவர் வெளியேறினார்.
இதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தாங்கிப் பிடித்த விராட் கோலி
ஆனால் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அடிலெய்ட் மைதானத்தில் சராசரியாக எடுக்க வேண்டிய 170 ரன்கள் என்ற இலக்கை இதனால்தான் இந்தியாவால் தாண்ட முடிந்தது.
தொடக்கத்தில் சாதாரண வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர் கடைசி ஓவர்கள் நெருங்கும்போது வழக்கமாகக் கையாளும் அதிரடி உத்தியைக் காட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் 64 ரன்களை எடுத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘டெண்டுல்கர் சிக்சர்’
ஆட்டத்தில் 19-ஆவது ஓவரில் கடைசிப் பந்தை ஹசன் மஹ்முத் வீசியபோது, முன்னோக்கி இறங்கி வந்து ஸ்ட்ரெய்ட் திரையில் பந்தை சிக்கசருக்கு விரட்டினார் கோலி. இது 1998-ஆம் ஆண்டு சார்ஜா போட்டியில் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக இருந்தது என் வர்ணனையாளர்கள் வியந்தனர்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 184-ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
ட்ரென்டான ‘அஸ்வின் அண்ணா’
இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி ஓவரில் ஒரு சிக்சரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இதைக் குறிப்பிட்டு ‘அஸ்வின் அண்ணா’ என்ற ஹேஷ்டேக் ட்ரென்டானது. 6 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 13 ரன்களை அடித்து இந்தியாவின் எண்ணிக்கை உயர்வதற்கு உதவினார்.
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்
186 ரன்கள் இலக்குடன் ஆடத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி அளித்தார். 21 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து அதிடியாக ஆடினார்.
வங்கதேச அணி 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தபோது மழைகுறுக்கிட்டது. அந்த நேரத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியாவை விட 17 ரன்கள் அதிகம் எடுத்திருந்தனர். அன்த நேரத்தில் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்களும் நஜ்முஸ் ஹுசைன் ஷானஅடோ 16 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
நடப்பு டி20 தொடரில் இந்தியா ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும்.
பட மூலாதாரம், PAUL KANE
வங்கதேசத்துக்கு என்ன வாய்ப்பு?
வங்கதேசம் 3 போட்டிகளில் ஆடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ் 1.533. இன்னும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. இந்தியாவை விட ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த அணிக்கான வாய்ப்புக் குறைவுதான்.
எனினும் இந்தியா தோல்வியைச் சந்தித்து, ரன்ரேட்டும் குறைந்தால் வங்கதேசத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்த அணி குறைந்தது இன்னும் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் சந்தேகமே இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.
தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிட்டதா?
மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் 2.772. இன்னும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஆட வேண்டியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கான வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகிவிடும்.
ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?
நான்கு போட்டிகளை ஆடியுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவுடன் மட்டுமே ஜிம்பாப்வே மோத வேண்டியிருக்கிறது. அந்த அணிக்கு இனி அரையிறுதி வாய்ப்பு இல்லை.
நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்கெனவே அரையிறுதிக்கான தகுதியை இழந்துவிட்டது.
பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: