பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
இந்தியா இன்று தனது சூப்பர்-8 சுற்றை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
188 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தது. இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், திலக் வர்மா , அபிஷேக் ஷர்மா என அடுத்தடுத்து சொற்பரன்களில் ஆட்டமிழந்தனர். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ராம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே சவாலாக அமைந்தது. பவர் பிளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகள் இழந்த அந்த அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளேவில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதன்பிறகு டெவால் பிரெவிஸ், டேவிட் மில்லர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு அதிரடியாகவும் விளையாடினார்கள்.
பிரெவிஸ் 45 ரன்கள் எடுத்து ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர், 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 63 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images
மில்லர் அவுட் ஆனதன் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. கடைசி கட்டத்தில் அர்ஷ்தீப், பும்ரா இருவரும் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்கள்.
17-வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். 19-வது ஓவரை வீசிய பும்ரா, 3 ரன்கள் மட்டும் கொடுத்து கார்பின் பாஷ் விக்கெட்டை வீழ்த்தினார். அதனால் தென்னாப்பிரிக்கா 167/7 என்ற நிலைக்குச் சென்றது.
ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில், 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்கள் எடுத்தார். அதனால் தென்னாப்பிரிக்க அணி 187 ரன்கள் எடுத்தது. 24 பந்துகள் சந்தித்த ஸ்டப்ஸ், ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.
இந்திய பௌலர்கள் தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Matt Roberts-ICC/ICC via Getty Images
துணைக் கேப்டன் அக்சர் பட்டேல் இல்லை
இரு அணிகளும் கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாளர்கள். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.
இன்றைய போட்டியில் துணை கேப்டன் அக்சர் பட்டேல் விளையாட மாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
“தென்னாப்பிரிக்க அணியில் டி காக், ரிக்கில்டன், மில்லர், யான்சன் என நிறைய இடது கை பேட்டர்கள் இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. அதனால் அக்சர் பட்டேலுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்தார்.
டாஸின் போது பேசிய சூர்யகுமார் யாதவும். தான் வென்றிருந்தாலும் டாஸில் பந்து வீச்சு முடிவை எடுத்திருப்பேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், டேவிட் மில்லர் ஆகியோர் கடந்த போட்டியில் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் அணியில் சேர்ந்தனர். தனது ஒரே போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்த எய்ன்ரிக் நார்கியா இடம்பெறவில்லை. ரபாடா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றவர்கள்:
அபிஷேக் சர்மா
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
திலக் வர்மா
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
ஹர்திக் பாண்ட்யா
ரிங்கு சிங்
சிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
அர்ஷ்தீப் சிங்
ஜஸ்பிரித் பும்ரா
வருண் சக்கரவர்த்தி
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு