டிஎன்பிஎல் டி 20 தொடர்: சேப்பாக் அணிக்கு 4-வது வெற்றி | TNPL T20: Chepauk Super Gillies register 4th win

Share

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். சுனில் கிருஷ்ணான 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

181 ரன்கள் இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் சேர்த்தனர். திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவையாக இருந்தது.

லோகேஷ் ராஜ் வீசிய இந்த ஓவரில் ஹன்னி ஷைனி (7), பாபா இந்திரஜித் (73), விமல் குமார் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இந்த ஓவர் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனினும் இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது. அடுத்த ஓவரை வீசிய தன்வர் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். லோகேஷ் ராஜ் வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் திண்டுக்கல் அணியால் 2 விக்கெட்களை பறிகொடுத்து 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி தோல்வியை சந்திக்காமல் 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com