மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக 50-க்கும் அதிமானோர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 20-க்கும் அதிமானோர் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகள். இது குறித்து வழக்கறிஞர் மொகித் கண்ணா மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார். அக்கடிதத்தை மனுவாக ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் தேவேந்திர குமார் மற்றும் ஆரிப் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”ஊழியர் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் நடந்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றதுடன், ’’அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் இடங்கள், மருந்து கையிருப்பு மற்றும் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்ற விவரத்தை சேகரித்து தாக்கல் செய்யுங்கள்’’ என்று அரசு வழக்கறிஞரிடம் வலியுறுத்தினர்.

மகாராஷ்டிரா முழுவதும் தினமும் ஒரு வயதுக்கு உள்பட்ட 40 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் மூன்றில் இரண்டு குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுகின்றனர். இதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”குறை பிரசவத்தில் பிறப்பதாலும், எடை குறைவு மற்றும் சுவாசக்கோளாறு காரணமாகவும் அதிகமான குழந்தைகள் உயிரிழக்கின்றனர்” என்றனர்.
இது குறித்து சாம்பாஜி நகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு டாக்டர் அமோல் ஜோஷி கூறுகையில், ”தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றன. மேக்ரோ சத்துகள் சாப்பாடு மூலம் கிடைத்து விடுகிறது. ஆனால் இரும்புச்சத்து போன்ற நுண்ணிய சத்துகளும் மிகவும் முக்கியம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கட்சிரோலியில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் அபய் இது குறித்து கூறுகையில், ”அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், மருந்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 40%ல் இருந்து 80% ஆக அதிகரித்து இருக்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் அதே கட்டமைப்பு வசதிகள் மட்டுமே இருக்கின்றன. மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதுவும் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மிலிந்த் மைஸ்கர் கூறுகையில், ”மோசமான உடல்நிலையில் இருக்கும் கர்ப்பிணிகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். அப்போது அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனே செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.