கேரளா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜெ.என்-1 வகை கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. விழாக்காலங்களில் மக்கள் கூடும்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
’சிங்கப்பூர் கொரோனா’ என்று அழைக்கப்படும் ஜெ.என்-1 வகை கொரோனா கேரளாவில் அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் சிங்கப்பூரில் கண்டறியும் முன்பே கேரளாவில் ஜெ.என்-1 வகை கொரோனா கண்டறியப்பட்டதாகவும், மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக சித்திரித்து சிலர் தேவையில்லாமல் பீதியை கிளப்பி வருகின்றனர். இது மிகவும் தவறான பிரசாரம்.
நவம்பர் மாதம் கொரோனா தொற்று சற்று அதிகரித்ததை கண்டறிந்ததை தொடர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது முதலே சாம்பிள்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில் திருவனந்தபுரம் கரக்குளத்தைச் சேர்ந்த 79 வயதான நபருடைய சாம்பிள் மட்டுமே ஒமிக்கிரானின் பிரிவான ஜெ.என்-1 வகை கொரோனா எனக் கண்டறியப்பட்டது. அவர் வீட்டு சிகிச்சையில் இருந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டார்.
அதே நேரம் கடந்த மாதம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற 15 பேருக்கு ஜெ.என்-1 வகை கொரோனா இருந்ததாக சிங்கப்பூரில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் பிற மாநிலங்களிலும் இந்த வகை கொரோனா பரவல் உள்ளது என்பதுதான் அதற்கு அர்த்தம். கேரளாவில் ஏற்கெனவே செய்யப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.