டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானார்.
அவருக்கு வயது 57. ஜி.என்.சாய்பாபாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட உடல்நல பிரச்னைகள் காரணமாக அவர் நிம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.
பேராசிரியர் சாய்பாபா, சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். அவர், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தபோது, உச்சநீதிமன்றம் 24 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால், இறுதியாக மும்பை உயர்நீதிமன்றம் அவரை மார்ச் 2024இல் விடுவித்தது. அந்த நேரத்தில், அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலையான போது சாய்பாபா கூறியது என்ன?
பேராசிரியர் சாய்பாபா 90 சதவீத மாற்றுத்திறனாளி பிரிவில் வருபவர். அவரது அன்றாட வாழ்க்கையில் சக்கர நாற்காலி மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் விடுதலையான நேரத்தில், பிபிசியிடம் பேசும்போது, தான் சிறையில் சந்தித்த அசௌகரியங்களைக் குறிப்பிட்டார்.
“சிறையில் உள்ள கழிப்பறைக்கு சக்கர நாற்காலியால் செல்ல முடியவில்லை, குளிக்கக்கூட இடம் இல்லை, தனியாக கால் ஊன்றி நிற்க முடியவில்லை. கழிவறை செல்லவும் குளிக்கவும் மீண்டும் படுக்கைக்குச் செல்வதற்கும் எனக்கு 24 மணிநேரமும் இரண்டு பேர் தேவை” எனக் கூறியிருந்தார்.
ஜி.என்.சாய்பாபா, யுஏபிஏ சட்டம் ‘இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது’ என்று கூறினார். அவர் அதை ‘உலகின் மிகக் கொடூரமான சட்டம்’ என்று அழைத்தார்.
“உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற கொடூரமான சட்டங்கள் தற்போது நடைமுறையில் இல்லை என்று அவர் கூறியிருந்தார். இது அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று அவர் கூறியிருந்தார்.
“இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறேன், இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். என் குரல் ஒடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தார். அப்போது, சிறையில் தன்னுடைய உடல்நிலை மோசமானது குறித்தும் ஜி.என்.சாய்பாபா பேசினார்.
‘மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், சிகிச்சைகளும் தனக்கு அளிக்கப்படவில்லை’ என சாய்பாபா குற்றம் சாட்டியிருந்தார்.
“இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்கிறேன், ஆனால் என் உடலின் ஒவ்வொரு பாகமும் செயலிழந்து கொண்டிருக்கிறது. நான் உயிர் பிழைப்பேன் என சிறை அதிகாரிகள் நம்பவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
சிறையில் மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் கூறியிருந்தார். அவருக்குப் பல நோய்கள் ஏற்பட்டன. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, முதலில் தனக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் விரும்பினார்.
சாய்பாபாவின் மனைவி கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI
ஜி.என்.சாய்பாபாவின் மறைவு குறித்து அவரது மனைவி வசந்தா, “மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் கொடுத்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து சாய்பாபா இறந்துவிட்டதாக நிம்ஸ் மருத்துவர்கள் அறிவித்தனர்” என்றார்.
வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மாதம், செப்டம்பர் 28ஆம் தேதி, ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மூலம் சாய்பாபா குணமடைந்தார். ஆனால், வயிற்றில் வலி இருப்பதாகத் தெரிவித்தார். அறுவை சிகிச்சை முடிந்த 6 நாட்களுக்குப் பிறகு பித்தப்பை அகற்றப்பட்ட இடத்தில் தொற்று ஏற்படத் தொடங்கியது” எனத் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஒரு வாரமாக சாய்பாபா 100 டிகிரிக்கு மேல் காய்ச்சலாலும், கடுமையான வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தார். இதையடுத்து, அக்டோபர் 10ஆம் தேதி சாய்பாபாவுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று நீக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.”
“வயிற்றில் வீக்கம் காரணமாக அவர் அதிக வலியால் அவதிப்பட்டார். வயிற்றின் உள்ளே அறுவை சிகிச்சை செய்த இடத்திற்கு அருகே, அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவரது வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது, அவரது ரத்த அழுத்தம் குறைந்தது.”
“சனிக்கிழமை அவரது இதயம் செயலிழந்தது. அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் (உயிர்காக்கும் சிகிச்சை) கொடுத்தனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.”
கைது செய்யப்பட்டது குறித்து சாய்பாபா கூறியது என்ன?
சிறை சென்றது ஏன் என்பது குறித்து சாய்பாபாவிடம் பிபிசி கேட்டபோது, “பழங்குடியினரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வருகிறேன். இதற்காகப் பல பொதுச் சமூகக் குழுக்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதுகுறித்து இயங்கும் பல அமைப்புகள் என்னை ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தன” என்றார்.
“பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும், சுரங்கத் தொழிலுக்கு எதிராக பழங்குடியினரின் பாதுகாப்பிற்காகவும், பழங்குடியினரின் இனப்படுகொலைக்கு எதிராகவும், ‘ஆபரேஷன் க்ரீன் ஹன்ட்’-க்கு (Operation Green Hunt) எதிராகவும் நாங்கள் குரல் எழுப்பினோம்.”
பட மூலாதாரம், Sushil Kumar/Hindustan Times via Getty Images
பத்து கோடி பழங்குடியின மக்களை நசுக்கக் கூடாது என்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பி வருகிறோம் என்று கூறிய சாய்பாபா, “எங்கள் குரலை ஒடுக்குவதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக அறிந்தேன். ஒரு போலி வழக்கில் பத்து ஆண்டுகள் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்” என்றார்.
இந்திய நீதி அமைப்பில் நம்பிக்கை இருக்கிறதா என்றும் யுஏபிஏ போன்ற கடுமையான சட்டங்களைப் பற்றி அவருடைய கருத்து குறித்தும் பிபிசி கேட்டது.
“இந்திய நீதித்துறை இந்திய மக்களுக்காகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி இல்லை என்று நான் கூறமாட்டேன், ஆனால் இந்திய நீதித்துறையில் பல குறைபாடுகள் உள்ளன என்று உறுதியாகக் கூறுவேன்,” என்றார்.
மேலும், “நீதிமன்றம் ஏன் ஜாமீன் வழங்குவதில்லை என உச்சநீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் நிராகரிக்கப்படுகிறது,” என்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சாய்பாபா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அக்டோபர் 14, 2022 அன்று, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அவரை விடுதலை செய்தது.
இருப்பினும் அடுத்த 24 மணிநேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து, மார்ச் 5, 2024 அன்று, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, ‘கம்யூனிஸ்ட் அல்லது நக்சல் இலக்கியங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்குவது அல்லது எந்தவொரு சித்தாந்தத்தின் ஆதரவாளராக இருப்பதும் யுஏபிஏ குற்றத்தின் கீழ் வராது’ என்று கூறி அவரை விடுவித்தது.
‘சாய்பாபா ஒரு திறமையான மனிதர்’
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் நெருங்கிய குடும்ப நண்பருமான நந்திதா நாராயண், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிழதழிடம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
“சாய்பாபாவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கப் போராடினர், ஆனால் இதற்கிடையில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. சாய்பாபா மிகவும் புத்திசாலி, திறமையான நபர்” என்று அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அவரும் அவரது குடும்பத்தினரும் போராடி வந்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாடம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று சாய்பாபா நம்பினார். “நான் ஓர் ஆசிரியர். நான் எப்போதும் எனது மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று அவர் அடிக்கடி கூறுவார் எனக் கூறியுள்ளார் நந்திதா நாராயண்.
பட மூலாதாரம், ANJANI
இன்றைய ஆந்திர பிரதேசத்தில் உள்ள அமலாபுரத்தில் பிறந்த சாய்பாபா, ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் பணியில் சேர்ந்த பிறகுதான் அவர் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தொடங்கியதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்படும் வரை ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக சாய்பாபா இருந்தார்.
மத்திய இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளில் ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’டின் கீழ் துணை ராணுவப் படைகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அகில இந்திய மக்கள் எதிர்ப்பு மன்றத்திற்கு ( All India People’s Resistance Forum) அவர் தலைமை தாங்கினார்.
சாய்பாபா தனது மாணவர்களிடையே மிகவும் பிரபலமாகக் கருதப்பட்டார்.
சாய்பாபா வழக்கில் நடந்தது என்ன?
ஹேம் மிஸ்ரா, பிரசாந்த் ராஹி ஆகியோர் 2013இல் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபாவின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் மாவோயிஸ்ட் தலைவர்களை அவர்கள் இருவரும் சந்திக்க இருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
- செப்டம்பர் 2013: டெல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
- பிப்ரவரி 2014: காவல்துறை கைது வாரன்ட் பிறப்பித்தது, ஆனால் கைது செய்ய முடியவில்லை.
- மே 2014: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
- ஜூன் 2015: மருத்துவ காரணங்களுக்காக மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
- டிசம்பர் 2015: மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
- ஏப்ரல் 2016: உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
- மார்ச் 2017: யுஏபிஏ பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாய்பாபா மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
- ஏப்ரல் 2021: டெல்லி பல்கலைக்கழகம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
- அக்டோபர் 2022: மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அவரை விடுதலை செய்தது.
- அக்டோபர் 2022: மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
- மார்ச் 2024: மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அவரை மீண்டும் விடுதலை செய்தது.
- அக்டோபர் 12, 2024: ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தார்.
ஸ்டான் சுவாமியின் மரணம்
பட மூலாதாரம், Ravi Prakash/BBC
யுஏபிஏவின் கீழ் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரும் சமூக சேவகருமான ஸ்டான் சுவாமி கடந்த 2021இல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவருக்கு 84 வயது. ஸ்டான் சுவாமி மும்பை தலோஜா சிறையில் இருந்தார். ஆனால், ‘சிறையில் தனக்கு சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை’ என்று அவர் கூறியிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்து அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இறுதியாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் தலைநகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில், ‘சிறையில் தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைவதாக’ கூறியிருந்தார்.
இடைக்கால ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தபோது, ’இதே நிலை நீடித்தால் விரைவில் இறந்துவிடுவேன்’ என்றும் அவர் கூறியிருந்தார்.
ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டான் சுவாமி கேட்கும் திறனை முற்றிலும் இழந்திருந்தார். அவர் குணப்படுத்த முடியாத பார்கின்சன் நோயாலும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஸ்பான்டைலிடிஸ் பிரச்னையும் இருந்தது.
இதற்கிடையே கடந்த 2020இல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டான் சுவாமி, ஜார்க்கண்டில் சுமார் 50 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். இடப் பெயர்வு, நில உரிமை தொடர்பான பிரச்னைகளில் பொதுமக்கள் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு