பட மூலாதாரம், Sarah Mizugochi
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
சாரா மிசுகோச்சியின் உயரம் 164 செ.மீ (5 அடி 4 அங்குலம்). அவர் ஒரு டீனேஜராக இருந்தபோது குறைஎடையுடன் இருந்தார்.
“நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன். நான் வருடத்திற்கு ஒருமுறை என் பிறந்தநாளில் மட்டுமே கேக் சாப்பிடுவேன். மூன்று முதல் நான்கு ஆண்டுகள், அந்நிலையே நீடித்தது. அப்போது வாழ்வில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இருக்கவில்லை.” என்கிறார் சாரா.
இப்போது 29 வயதாகும் சாரா சந்தித்த பிரச்னை என்பது ஜப்பானில் மிகவும் பொதுவானது. ஜப்பானில் இளம் பெண்கள் குறைஎடையுடன் (Underweight) இருப்பது மோசமான உடல்நலப் பிரச்னையாக மாறியுள்ளது.
2019-ஆம் ஆண்டில் ஜப்பானிய சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், 20-29 வயதுடைய ஐந்து பெண்களில் ஒருவர் மருத்துவ ரீதியாக குறைஎடையுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது 18.5-க்கும் குறைவான BMI (உடல் நிறை குறியீட்டெண்- பிஎம்ஐ) என வரையறுக்கப்படுகிறது.
சாராவின் பிஎம்ஐ ஆரோக்கியமான எடை வரம்பிற்குக் கீழே இருந்தது.
மக்களின் பிஎம்ஐ என்பது 18.5 முதல் 25 வரை இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது.
உலகிலேயே, பெண்கள் குறைஎடையுடன் இருக்கும் பிரச்னையை எதிர்கொள்ளும் அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடு ஜப்பான் மட்டுமே.
லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ‘குறைஎடை மற்றும் உடல் பருமன் தொடர்பான உலகளாவிய போக்குகள்’ குறித்த 2024 ஆய்வின்படி, திமோர்லெஸ்டே, புருண்டி, எரித்திரியா மற்றும் நைஜர் போன்ற உலகின் ஏழ்மையான இடங்களில் மட்டுமே இதே போன்ற நிலைகள் காணப்படுகின்றன.
1990இல், ஜப்பானிய பெண்கள் இன்று இருப்பதை விட குறைவான எடையுடன் இருந்தனர். அப்போது இந்தப் பிரச்னையில் ஜப்பான் நாடு தனித்து தெரியவில்லை. ஆனால் இப்போது அவ்வாறு தெரிகிறது.
பல ஆய்வுகள் மற்றும் தேசிய கருத்துக்கணிப்புகள் இளம் பெண்களிடையே ‘உடல் மெலிவது’ குறித்த போக்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சிண்ட்ரெல்லா எடை’ என்ற வார்த்தை ஜப்பானிய இளம் பெண்களிடையே பரவியது. இந்தச் சொல் ஆரோக்கியமான எடைக்குக் கீழே உள்ள பிஎம்ஐ-யைக் குறிக்கிறது. அதிகாரப்பூர்வமாக பிஎம்ஐ அளவில் குறைஎடை என இது வகைப்படுத்தப்படுகிறது, ஆனால் பல பெண்கள் அந்த எடையைதான் அடைய விரும்பினர்.
‘சிண்ட்ரெல்லா எடை’ என்பது நடைமுறைக்கு ஒவ்வாத மற்றும் ஆரோக்கியமற்ற இலக்கு எனக் கருதிய பலரும் இதை எதிர்த்து குரல் கொடுத்தனர்.
ஜப்பானின் கலாசார நெறிமுறைகள்
பட மூலாதாரம், Getty Images
ஜப்பானில் உள்ள ‘செய்ரெய் கிறிஸ்டோபர் பல்கலைக்கழகத்தின்’, நர்சிங் பள்ளியின் பேராசிரியரான டோமோஹிரோ யசுடா, குறைஎடை கொண்ட ஜப்பானிய இளம் பெண்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.
‘ஆய்வில் பதிலளித்த பெண்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எடை அதிகரிப்பிற்கான அவர்களின் இலக்கு என்பது ஆரோக்கியமான பிஎம்ஐ-க்கு தேவையானதை விட மிகவும் குறைவாக இருப்பதாக’ அவரது ஆராய்ச்சி கூறுகிறது.
அவரது ஆய்வில் கலந்து கொண்ட குறைஎடை கொண்ட பெண்கள் ஆரோக்கியமான எடையை அடைய சராசரியாக 10.3 கிலோ எடையை அதிகரிக்க வேண்டும் (பிஎம்ஐ 22 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது). ஆனால், அவர்களோ சராசரியாக 0.4 கிலோ எடையை மட்டுமே அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
“ஜப்பானில், இளம் பெண்கள் மிகவும் ஒல்லியாக இருப்பதோடு, கருவுறாமை, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது மற்றும் சர்கோபீனியா (வயதாகும்போது அல்லது உடல் அசைவுகள் இல்லாதபோது ஏற்படும் தசை இழப்பு) போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்,” என்று யசுடா பிபிசியிடம் கூறினார்.
ஊட்டச்சத்து குறைபாடு எலும்புகள் பலவீனமாவது, இரத்த சோகை மற்றும் மாதவிடாய் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் போதுமான புரதங்கள் உட்கொள்ளவில்லை என்றால் தசை வலிமை குறையும்.
பேராசிரியர் யசுடாவின் ‘உடல் பருமன் மற்றும் மெலிதல்’ குறித்த வகுப்பில் உள்ள சில மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் ஒல்லியாக இருப்பதால் தாங்களும் உடல் எடையைக் குறைக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தனர்.
“இது ஜப்பானிய ஊடகங்களின் வலுவான தாக்கம் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மீதான நீண்டகால ஈர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. சில காலமாக ஜப்பானிய கலாசாரத்தின் ஃபேஷன் மற்றும் பிற அம்சங்களில் இந்தப் போக்கு முன்னணியில் உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
“ஜப்பானிய ஊடகங்களில் பல இளம் பெண்கள் மெலிந்தவர்களாகக் காட்டப்படுவதால், ஒல்லியாக இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இருப்பதாக நான் உணர்கிறேன்,” என்கிறார் யசுடா.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் சிக்கல்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
‘நான் குண்டாக இருப்பதை என் அம்மா விரும்பவில்லை’
பட மூலாதாரம், Sarah Mizugochi
இப்போது ‘உணவு இன்ஃப்ளூயன்சராக’ இருக்கும் சாரா மிசுகோச்சி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வசித்து வருகிறார். அவர் குழந்தையாக இருந்தபோது ஒல்லியாக இருக்க தனது பெற்றோர் ஊக்குவித்ததாகக் கூறுகிறார்.
“நான் குண்டாக இருப்பதை என் அம்மா விரும்பவில்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
பெற்றோர் அவரிடம் உணவு நேரத்தில், அரிசிக்கு பதிலாக இறைச்சி மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொன்னார்கள். அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது, ஆனால் ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளது.
அவரிடம் இந்தப் பழக்கம் பல வருடங்களாக இருந்தது.
மதிய உணவுக்காக அவர் பள்ளிக்கு எடுத்துச் சென்ற சிறிய டிபன் பாக்சில் காய்கறிகள் மற்றும் இறைச்சி மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது, “நான் அப்போது சோறு சாப்பிடவே விரும்பவில்லை.” என்கிறார் சாரா.
12 முதல் 15 வயதாக இருந்தபோது, ஒரு மாடலாக வேண்டுமென விரும்பினார் சாரா. கலோரிகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டார்.
“இதற்காக பள்ளியில், நான் மற்றொரு பெண்ணுடன் போட்டியிட்டேன். ஒரு நாள், அவள் மதிய உணவாக சிறிது சாலட், எடமேம் (ஜப்பானிய உணவு) மற்றும் சிறிது பன்றி இறைச்சி கொண்டு வந்திருந்தாள். ‘உன் உணவு கலோரிகள் நிறைந்தது’ என்று நான் அவளிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது” என்கிறார் சாரா.
பட மூலாதாரம், Sarah Mizugochi
மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் படித்தபோது தான் அதிக உணவு சாப்பிட வேண்டும் என்பதை சாரா உணர ஆரம்பித்தார்.
“நான் மனித உடலைப் பற்றி கற்றுக்கொண்டேன். நம் அனைவருக்கும் ஊட்டச்சத்து அவசியம் என்பதை உணர்ந்த தருணம் அது.” என்கிறார்.
2011-ஆம் ஆண்டில், ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய பின்னர், அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது.
“நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஒரு நிபுணர் தொலைக்காட்சியில் விளக்கினார். எனது உயிரியல் பாடங்களும் அந்த நிபுணரின் கருத்தும் என்னை அதிகமாக சாப்பிடுவதற்கும், எடையை அதிகரிப்பதற்கும், சுமார் 45 கிலோ என்ற எடையை அடையவும் உதவியது.” என்கிறார் அவர்.
சாரா நான்கு வருடங்களுக்கு முன்பு 25 வயதில் மீண்டும் அரிசி உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் 7 கிலோ அதிகரித்து ஆரோக்கியமான எடை வரம்பில் இருக்கிறேன். நான் சில உடற்பயிற்சிகளையும் செய்வதால் தசைகள் வலிமையாக உள்ளன.” என்று கூறுகிறார்.
அழகு குறித்த தவறான எண்ணங்களுக்கு எதிரான குரல்
பட மூலாதாரம், Asako Nakamura
ஜப்பானில் உள்ள பிற ஆளுமைகள், பிரபலங்கள், குறைஎடை போக்கு மற்றும் அழகு குறித்த தவறான முன்முடிவுகளுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
25 வயதான துல்மி ஒபாடா, (பெற்றோர் ஜப்பான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்) டோக்கியோவின் தெற்கே உள்ள கடலோரப் பிரதேசமான கனகாவாவில் வசிக்கிறார்.
அவரது மாநிறம், உடல் வடிவம் மற்றும் வித்தியாசமான முடி அமைப்பு, பள்ளியில் கேலி செய்பவர்களின் இலக்காக அவரை மாற்றியது.
ஆரம்பப் பள்ளியில், சில சிறுவர்கள் அவரை கறுப்பினப் பெண் என்று அழைத்தனர்.
“என் கைகள் இயற்கையாகவே அழுக்காக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அது என்னை காயப்படுத்தியது,” என்று துல்மி விளக்குகிறார்.
பட மூலாதாரம், Asako Nakamura
2021ஆம் ஆண்டில், ‘பிளஸ்-சைஸ்’ மாடல்கள் குறித்து தெரிந்துகொண்ட பிறகு, துல்மி மிஸ் யுனிவர்ஸ் ஜப்பான் போட்டியில் பங்கேற்றார்.
போட்டியிட வரும் மற்ற பெண்கள் ஒல்லியான உடல் வடிவம் அல்லது ‘நவநாகரீக’ உடல் வடிவம் என்று அழைக்கப்படும் உடல் வடிவத்துடன் வருவார்கள் என்பதை துல்மி அறிந்திருந்தார்.
“போட்டியின் போது நான் எனது எடையை குறைக்க விரும்பவில்லை. ஒரு பிளஸ்-சைஸ் மாடலாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்ற எண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினேன். நான் ஜப்பானின் அழகு குறித்த அளவுகோல்களை மாற்ற விரும்பினேன்.” என்கிறார் அவர்.
துல்மி இறுதிப் போட்டி வரை சென்றார். ‘இதுவரை இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே ப்ளஸ் சைஸ் மாடல் நான்தான்’ என்று அவர் கூறுகிறார்.
“நிச்சயமாக, நான் என்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். என்னுடைய சிறுவயது அனுபவங்கள் அவ்வப்போது என் நம்பிக்கையை இழக்கச் செய்தன. இப்போதும் எனக்கு 100% தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் என்று எனக்குத் தெரியும், ஆனால் பரவாயில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஜப்பானின் ஆண் ஆதிக்க கலாசாரம்
அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் ‘நவீன காலத்திற்கு முந்தைய ஜப்பானிய வரலாறு மற்றும் ஜப்பானிய உணவுக் கலாசாரங்கள்’ குறித்து கற்பிக்கும் எரிக் ராத், “நீண்ட காலமாக ஜப்பானிய கலாசாரத்தில் ஒல்லியாக இருப்பது அழகிற்கான ஒரு அளவுகோலாக உள்ளது” என்று விளக்குகிறார்.
ஜப்பான், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடு என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கபுகி (ஜப்பானிய நாடகத்தின் பாரம்பரிய வடிவம்) போன்ற கலைகளை நீங்கள் பார்த்தால், ஆண்களே பெண் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தனர் அல்லது எடோ காலத்தில் (1600-1868) மர அச்சு கலைகளில் பெண்கள் ஒல்லியானவர்களாக காட்டப்பட்டனர். அவையெல்லாம் ஆண்களின் கற்பனைகள் மற்றும் பெண் அழகின் பிரதிநிதித்துவங்கள்.” என்கிறார் அவர்.
இன்று, ஜப்பானிய பெண்கள் வெவ்வேறு வகையான தவறான முன்முடிவுகளை எதிர்கொள்கிறார்கள் என அவர் கூறுகிறார்.
“அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும். அவர்கள் வேலைக்குச் சென்றால், பணியிடத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். இந்த காரணிகள் எதையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உடல் எடையை குறைப்பது அவர்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்று. எனவே, சிலர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.” என்கிறார்.
குறைஎடை கலாசாரத்திற்கு எதிரான முன்னெடுப்பு
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஜப்பானிய அரசாங்கங்கள், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழிகாட்டுதலை வழங்குவது உட்பட, பல நடவடிக்கைகளை எடுத்து, குறைஎடை பெண்களின் பிரச்னையை எதிர்கொள்ள முயற்சித்து வருகின்றன.
மார்ச், 2000-ஆம் ஆண்டு- ஜப்பானியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது.
வழிகாட்டுதல்களில் ஒன்று, மக்கள் போதுமான உடற்பயிற்சி மற்றும் நன்கு ஊட்டச்சத்து உணவுகளுடன் சரியான எடையைப் பராமரிக்க வேண்டும் என்றும், அதிக எடையைக் குறைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.
அரசாங்கம் 2022-ஆம் ஆண்டில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை இதில் ஈடுபட அழைப்பு விடுக்கும் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. குறைஎடையுடன் இருக்க முயற்சிப்பது உட்பட ஊட்டச்சத்து பிரச்னைகள் இளம் பெண்களிடையே இருப்பதை இது ஒப்புக்கொள்கிறது.
பட மூலாதாரம், Yasuko
ஜப்பானில் உள்ள பிளஸ்-சைஸ் மாடலிங் ஏஜென்சியான ப்ளூம் கிரியேட்டிவ் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாசுகோ, ஜப்பானில் இன்னும் பிளஸ்-சைஸ் பெண்களுக்கு எதிராக தவறான முன்முடிவுகள் இருப்பதாகவும், அவர்கள் வரலாற்று ரீதியாகவே ஒல்லியான பெண்களை விட ‘குறைவான மதிப்புடையவர்களாக’ கருதப்பட்டதாகவும் அவர் நம்புகிறார்.
பல பிளஸ்-சைஸ் பெண்களுக்கு, தங்கள் பெற்றோரால் தங்கள் உடல் வடிவத்திற்காக இழிவுபடுத்தப்படுவது, நண்பர்களால் கேலி செய்யப்படுவது, தங்களுக்கு ஏற்ற ஆடைகளை வாங்க முடியாதது ஆகிய அனுபவங்கள் உள்ளது என அவர் கூறுகிறார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை யாசுகோ விவரிக்கிறார்.
“நெரிசல் நிறைந்த ரயிலில் ஒரு நடுத்தர வயது மனிதர் என்னைப் பார்த்து, ‘இவ்வளவு அருவருப்பான மற்றும் குண்டான உடலுடன் உங்களால் எப்படி வாழ முடிகிறது, அதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டதாக யாசுகோ கூறுகிறார்.
ஆனால் அவர் இத்தகைய எதிர்மறையான, மோசமான கருத்துகளை புறக்கணிக்கத் தொடங்கினார்.
ஜப்பானின் அடுத்த தலைமுறை பிளஸ்-சைஸ் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கக்கூடாது எனவும், அதற்கான பணிகளில் தான் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு