புதுடெல்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் சேரவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. இந்தாண்டு இறுதியில் இருந்து குஜராத், இமாச்சல பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.
இந்நிலையில், கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரையில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எடுத்து வருகிறார். இது தொடர்பாக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும், அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியை வெற்றி பெறச் செய்வது தொடர்பாகவும், கட்சிக்கு புத்துணர்வு அளிப்பதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் 600 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை சோனியாவிடம் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சமர்ப்பித்தார்.
இது பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக கட்சியின் 8 மூத்த தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை சோனியா நியமித்தார். மேலும், பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசில் சேர்க்க விருப்பம் தெரிவித்தார். ‘தேர்தல் வியூக நிபுணராக இருப்பதால், நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுடனும் பிரசாந்த் கிஷோர் நல்ல நட்பு கொண்டுள்ளார். இதனால், மற்ற கட்சிகளுடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்டால், அவரை கட்சியில் சேர்க்கலாம்,’ என சோனியாவிடம் அளித்த அறிக்கையில் மூத்த தலைவர்கள் குழு நிபந்தனை விதித்தது. அதே நேரம், அவர் காங்கிரசில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் இணையவில்லை என்பதை காங்கிரஸ் மூத்த தலைவரும், தகவல் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில், ‘உயர் அதிகார நடவடிக்கை குழு – 2024’ என்ற குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார். மேலும், இந்த குழுவின் ஒரு அங்கமாகவும், வரையறுக்கப்பட்ட பொறுப்புடனும் கட்சியில் சேரும்படி பிரசாந்த் கிஷோருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால், இதை அவர் ஏற்க மறுத்து விட்டார். அவர் கட்சிக்கு அளித்த ஆலோசனைகளையும், அவருடைய முயற்சிகளையும் பாராட்டுகிறோம்,’ என கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோர் இணைந்தால், காங்கிரசுக்கு புதிய பலம் கிடைக்கும் என கருதப்பட்ட நிலையில், அவர் திடீரென தனக்கு கொடுத்த வாய்ப்பை ஏற்க மறுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘தாழ்மையான கருத்து’
காங்கிரசில் சேர மறுத்தது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கட்சியில் சேரும்படியும், உயர் அதிகார குழுவின் ஒரு அங்கமாக இருக்கும்படியும், தேர்தலில் கட்சியை வழிநடத்தும்படியும் காங்கிரஸ் எனக்கு கொடுத்த வாய்ப்பை மறுத்து விட்டேன். கட்சியில் வேரூன்றி உள்ள அமைப்பு ரீதியான பிரச்னைகளை தீர்க்கவும், சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளவும், கட்சிக்கு என்னை விட நல்ல தலைமையும், உறுதியான கூட்டு முயறச்சியும்தான் தேவைப்படுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து,’ என்று கூறியுள்ளார்.
செயல் தலைவர் பதவி கேட்டாரா?
காங்கிரசில் இணைவதற்கு பிரசாந்த் கிஷோர் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. கட்சியை மாற்றி அமைத்து, புத்துணர்வு அளிக்கும் தனது நடவடிக்கைக்கு முழு சுதந்திரம் அளிக்கும்படியும், கட்சியில் செயல் தலைவர் பதவியை வழங்கும்படியும் அவர் கோரியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கட்சி மேலிடம் நிராகரித்ததால்தான், அவர் காங்கிரசில் இணையவில்லை என்று கருதப்படுகிறது.