திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று TNPL வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக மாறியுள்ளது.
இதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும்.
முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது. முதலில் களமிறங்கிய அரவிந்த் டக் அவுட் ஆக சீதாராம் 4 ரன்கள் எடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டனான என்.எஸ்.சதுர்வேத் பொறுப்புடன் விளையாடி 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடன் கைகோர்த்து நின்று அதிரடி காட்டிய அத்திக் உர் ரகுமான் 28 பந்துகளில் 41 ரன்கள்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.