
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோதி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
தொடக்க விழா மேடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
நிகழ்ச்சி தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
வரவேற்புரைக்கு பிறகு நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழ் வரலாறு குறித்த 3டி நிகழ்ச்சி அரங்கேறியது.
முன்னதாக இந்த தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய பிரதமர் மோதி ஆகியோரின் மணல் ஓவியங்களை வரைந்தார் சர்வம் பட்டேல். பின் போட்டியில் பங்கு பெறும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின் பரதநாட்டியம் உட்பட இந்தியாவின் 8 பாரம்பரிய நடன நிகழ்ச்சி அரங்கேறியது.
லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் இடம் பெற்றது. லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டி கொண்டு பியானோ வாசித்ததை கண்ட பார்வையாளர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.
விஸ்வநாதன் ஆனந்த், நடிகர் ரஜினிகாந்த், திமுக எம்.பி. கனிமொழி, மூத்த பத்திரிகையாளர் என். ராம், நடிகர் கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்
தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்கிற சிறப்பை நிகழ்த்த உள்ளது.
பொதுவாக இந்த நிகழ்ச்சியின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்ய ஒவ்வொரு நாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கும்.
ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நான்கு மாதங்களில் அனைத்தையும் தயார் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் சாதனையை நிகழ்த்த இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலதிக செய்திகளுக்கு இந்த பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: