சென்னை ஐஐடி வளாகத்தில் 250 அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.4.2023) சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். மேலும், “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடிக் கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, ‘நான் முதல்வன்’ என்கிற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டம் என பல்வேறு கல்வி திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மேம்பாட்டிற்கான

“அனைவருக்கும் IITM” திட்டம்: அனைவருக்கும் IITM திட்டமானது, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 5.1.2023 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை ஆறு கட்டங்களாக 250 பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நம் நாட்டின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக அந்நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தி வரும் திட்டம் “அனைவருக்கும் IITM” ஆகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐஐடி, சென்னையால் வழங்கப்படும் நான்காண்டுப் படிப்பான B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் கடந்த கல்வியாண்டில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐ.ஐ.டியில் அடிப்படைக் கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிடப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 இலட்சம் மாணவர்கள் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள பயிற்சி முடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் சென்னை-ஐஐடி-க்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் இடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 250 அரசுப் பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

The post சென்னை ஐஐடி வளாகத்தில் 250 அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com