சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர்.
இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், சிறுமிக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதனால் இந்த வழக்கை தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தேனாம்பேட்டை போலீஸார் மாற்றினர். இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார், சிறுமியிடம் முதலில் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த உமாபதி (20) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், உமாபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.