
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சென்னை அசோக் நகரில் கண்ணப்பர் சாலை – நடேசன் சாலை சந்திப்பில் பாழடைந்த ‘அந்த’ பங்களா அமைந்துள்ளது.
‘அமானுஷ்யம் நிறைந்த வீடு’, ‘இரவு நேரத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது’ என்றெல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியான சில காணொளிகள் இணையத்தில் பரவின.
இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“இது வேண்டும் என்றே பரப்பப்படும் வதந்தி” என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
2008-ஆம் ஆண்டு இந்த வீட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட பிறகு சுமார் 17 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மூவர் கொலை வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?
2008-ஆம் ஆண்டு என்ன நடந்தது?
பட மூலாதாரம், UGC
சென்னை அசோக் நகரில் காவலர் பயிற்சி பள்ளிக்கு அருகில் நடேசன் சாலையில் அமைந்துள்ள இந்த வீடு, 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி காலையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரவணன், அவரது மனைவி கஸ்தூரி மற்றும் பணிப் பெண் அன்பரசி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
‘சரவணன் – கஸ்தூரி தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் வீட்டில் உள்ள நகை, பணம் உள்பட அவர் சேர்த்து வைத்த சொத்துக்காக கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்’ என முதற்கட்ட தகவல்கள் வெளியாயின.
‘நகைக்காக கொலைகள் நடக்கவில்லை’

கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்த அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், “நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலைக்குள் இந்தக் கொலை நடந்திருக்கலாம். நகைக்காக மட்டும் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கொலையான நபர்களின் உடலில் நகைகள் அப்படியே உள்ளன. கொலை குறித்து புலன் விசாரணை மேற்கொள்வதற்கு இணை ஆணையர் தலைமையில் பத்து காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” எனக் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
‘மூவர் கொலை வழக்கில் பெரிதாக எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை’ எனக் கூறி 2010 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல்துறையின் விசாரணை முறையை கண்டித்தது. தொடர்ந்து, மூவர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்பிறகு ஒரு மாதத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கைது செய்தது.

இந்த வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முடிவில் குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேருக்கும் நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
கொலைக்கும் கைதானவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை காவல்துறை நிரூபிக்க தவறிவிட்டதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர். உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சரவணன் தொடர்புடைய வங்கி லாக்கர்களை புலனாய்வு அதிகாரி திறந்து பார்த்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை மறு விசாரணை செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நபர்களைத் தவிர தொடர்புள்ள மற்றவர்கள் குறித்தும் விசாரிக்குமாறு சி.பி.ஐ இணை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணைக்கு வழக்கில் கைதான நான்கு பேரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதனை 2024 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம் சொன்ன 2 விஷயங்கள்

கொலை வழக்கில் காவல்துறை கையாண்ட விசாரணை முறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
இறந்துபோன நபர்களுக்கு சொந்தமான லாக்கர்களை எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் புலனாய்வு அதிகாரி திறந்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அதாவது, சொத்துக்கு உரியவர்களின் சார்பான பிரதிநிதிகள் (Nominee) இல்லாமல் திறந்து பார்த்துள்ளதாகத் தெரிவித்தது.
‘அவ்வாறு லாக்கரை திறப்பதற்கு வங்கி மேலாளர் எவ்வாறு அனுமதியளித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்’ என, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மூவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம், ‘இதற்கான விசாரணை நடைமுறைகள் இரண்டு பகுதிகளாக இருக்க வேண்டும்’ எனக் கூறியது.
- குற்றம் நடந்த இடம் மற்றும் லாக்கர்களைத் திறப்பதில் புலனாய்வு அதிகாரிகளின் ஈடுபாடு ஆகியன.
- குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைளை சரிவர பொருத்திப் பார்க்காமல் இருப்பது மற்றும் மீட்கப்பட்ட சொத்துகளை (recovered property) நீதிமன்றத்துக்கு அனுப்பாமல் இருந்தது போன்ற குறைபாடுகளை ஆராய வேண்டும் என உத்தரவிட்டது.
17 ஆண்டுகள் கடந்த பின்னரும் மூவர் கொலைக்குக் காரணமான சதித்திட்டம் குறித்தும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இறந்தவர்களின் வங்கி லாக்கர்களைத் திறந்து பார்ப்பதற்கு விசாரணை அதிகாரிகள் செலுத்திய ஈடுபாடு குறித்தும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
‘வீட்டுக்குள் ரீல்ஸ்… பதற்றம்’
பட மூலாதாரம், UGC
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக சரவணனின் வீட்டுக்குள் அத்துமீறி சில இளைஞர்கள் நுழைந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளனர். அந்தக் காணொளியில், வீடு அமைந்துள்ள தெருவில் சில இளைஞர்கள் கூடி உள்ளே செல்ல உள்ளதாகக் கூறுகின்றனர். வீட்டுக்குள் நுழைந்து அங்கு தென்பட்ட ஆல்பத்தை திறந்து காட்டுகின்றனர். அதில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் சரவணன் இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
வீட்டின் படிக்கட்டுகளில் திருநீறு பாக்கெட் உள்பட ஏராளமான ஆவணங்கள் சிதறிக் கிடப்பது, வீட்டின் முகப்பில் பாழடைந்து கிடக்கும் கார், வீட்டின் அறைகள் ஆகியவை குறித்தும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
‘இது அமானுஷ்யம் நிறைந்த வீடு’ எனவும் ‘நள்ளிரவு நேரத்தில் பெண்ணின் சத்தம் கேட்கிறது’ என்றெல்லாம் கூறி சிலர் காணொளிகளை வெளியிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக ஏராளமான காணொளிகள் பரவியதால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ‘இது தனிநபருக்கு சொந்தமான இடம். அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கே.கே.நகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.
‘எந்த சத்தத்தையும் கேட்டதில்லை’

“சம்பவம் நடந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதுவரையில் அப்படி எந்த சத்தத்தையும் நாங்கள் கேட்டதில்லை” எனக் கூறுகிறார், நடேசன் தெருவில் ஆட்டோ ஓட்டும் முருகன்.
மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வீடு என்பதற்கான எந்தவித கவலையும் இல்லாமல் சிலர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு வருவதாகக் கூறிய அவர், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் தான் ஆட்டோ ஒட்டி வருகிறேன். இவர்கள் கூறுவதைப் போல எதுவும் நடந்ததில்லை” என்கிறார்.
கொலையான சரவணனின் வீட்டின் எதிரில் ஆட்டோ நிறுத்தம் ஒன்று உள்ளது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் முருகன், “எங்களுடன் அவர் நன்றாக பேசுவார். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அவருக்கு குழந்தைகள் என யாரும் இல்லை” எனக் கூறினார்.
சரவணனின் உறவினர்கள் மைலாப்பூர் உள்பட சில பகுதிகளில் வசிப்பதாகக் கூறிய அவர், “சம்பவம் நடந்த நாளில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அன்று காலை ஆட்டோ ஓட்ட வரும்போது தான் மூன்று பேர் கொல்லப்பட்டது தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியான பிறகு உள்ளே யாரும் நுழைய முடியாத அளவுக்கு வீட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்.
“அமானுஷ்யம் இருப்பதாகக் கூறுவது தவறானது. இரவு நேரத்தில் ரோந்து செல்கிறோம். இதுவரையில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. யாரும் எந்தப் புகாரும் கூறியதில்லை” என அங்கிருந்த காவலர் ஒருவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
சில இளைஞர்களின் செயலால் வீட்டின் முன்பு பாதுகாப்பு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூவர் படுகொலை வழக்கின் பின்னணி வெளிவராத நிலையில், ‘அமானுஷ்யம் நிறைந்த பங்களா’ என சிலர் வெளியிட்ட ரீல்ஸ் மூலம் கொலை தொடர்பான விவரங்கள் மீண்டும் பொதுவெளிக்கு வந்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு