* பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
* சென்னையில் கட்சித் தொண்டர்கள் குவிந்தனர்
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை நடக்கிறது. இதில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பதவியேற்கிறார். பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. திமுகவின் 15வது அமைப்பு தேர்தலை முன்னிட்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்-கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் தேர்தல் நடந்தது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர், பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடக்கிறது. இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்களிடம் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. இதில் திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராக போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என போட்டிப்போட்டு விருப்ப மனுக்களை அளித்தனர். அதேபோல், பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் சார்பிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தனர். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேலும் பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், திமுக பொதுக்குழு இன்று காலை கூடுகிறது. இதில் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர். அதை தொடர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு தமக்கு வழங்கிடும் சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில், திமுகவின் துணைப் பொது செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பார். மேலும் தணிக்கை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை வாழ்த்தி திமுக முன்னோடிகள் உரையாற்றுவார்கள். இந்த மாபெரும் பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார். இன்று நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர் 2,600 பேர், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று முதல் சென்னை வர தொடங்கினர். பொதுக்குழுவில் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டம் அரங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போன்று தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு கூடுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சென்னையில் திரண்டுள்ளனர். இதனால், சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.