சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வி: டெல்லிக்கு ஹாட்ரிக் வெற்றி | CSK vs DC | dc register hat trick victory csk back to back defeat ipl 2025

Share

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று (சனிக்கிழமை) சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதற்கு முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவி இருந்தது.

184 ரன்கள் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 3 ரன்களில் ஆட்டமிழந்தார் ரச்சின். ருதுராஜ் 5 ரன்களில் வெளியேறினார். கான்வே 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் சென்னை அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் துபே, ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தனர். பின்னர் தோனி களத்துக்கு வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய விஜய் சங்கர் அரை சதம் பதிவு செய்தார். தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் மூலம் 25 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி. இந்த சீசனில் பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் டெல்லி என அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சிஎஸ்கே. அதே நேரத்தில் டெல்லிக்கு இது மூன்றாவது வெற்றியாக அமைந்துள்ளது.

டெல்லி வென்றது எப்படி? – டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், தனது சுழற்பந்து வீச்சாளர்களான விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முழுவதுமாக தலா 4 ஓவர்கள் வீச செய்தார். அதற்கு மாறாக அஸ்வின், நூர் அகமது, ஜடேஜா என தரமான ஸ்பின்னர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட முழுவதுமாக 4 ஓவர்கள் வீசவில்லை. அதை கேப்டன் ருதுராஜ் மிஸ் செய்தார்.

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக டாட் பால்களை ஆடியதும் ரன் குவிக்க தவறியதற்கான காரணமாக அமைந்தது. மேலும், திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரை முயற்சிப்பதை காட்டிலும் அவர்கள் பேட் செய்யும் இடத்தில் அஸ்வினை விளையாட வைக்கலாம். அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக பேட் செய்திருந்தார். மேலும், அவர்களுக்கு மாற்றாக வேறொரு இளம் வீரரை அணியில் ஆட வைக்கலாம். இன்றைய டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஸ்பார்க் சிஎஸ்கே அணியில் அறவே இல்லை என்பது போல இந்த ஆட்டம் அமைந்தது. வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பே இல்லாதது போல சிஎஸ்கே ஆடியது. அதை அடுத்து வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே மாற்றியாக வேண்டும்.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்​ஸிஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

சிஎஸ்கே பவுலர் கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜேக் பிரேசர் மெக்​கர்க் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 21, சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார். 51 பந்துகளில் 77 ரன்களை அவர் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை ராகுல் விளாசினார். அசுதோஷ் ரன் அவுட் ஆனார். ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com