கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் போக்குவரத்துத்துறையில் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், செந்தில் பாலாஜியைக் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த செந்தில் பாலாஜியை உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கும் நிலையில், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கியிருக்கின்றனர்.