சீஸ் சாலட், சில்லி பனீர், மில்க் ஷேக்… வீக் எண்டை வித்தியாசமாக்க விதம்விதமான மில்க் ரெசிப்பீஸ்!

Share

பால், தயிருக்கு மட்டுமல்ல, பாலில் இருந்து பெறப்படும் பனீர், சீஸ் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற சமையலுக்கும் எப்போதுமே தனி ருசி உண்டு, கூடவே சத்துகளும்…. ஒரு மாறுதலுக்கு இந்த வார வீக் எண்டை பால் பொருள்கள் ஸ்பெஷலாக்கி பாருங்களேன்….

காட்டேஜ் சீஸ் சாலட்

தேவையானவை:

பனீர் (காட்டேஜ் சீஸ்) – 250 கிராம்

கேரட் – 100 கிராம்

பூண்டு – 2 பல்

லெட்யூஸ் இலை – 150 கிராம்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – அரை டீஸ்பூன்

வால்நட் – 4 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)

மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

காட்டேஜ் சீஸ் சாலட்

செய்முறை:

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

சில்லி பனீர்

தேவையானவை:

பனீர் – 200 கிராம்

மைதா மாவு – 75 கிராம்

கார்ன்ஃப்ளார் மாவு – 25 கிராம்

பெரிய வெங்காயம் – ஒன்று

குடமிளகாய் – ஒன்று

பச்சைமிளகாய் – 4

இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 4 பல்

செலரி தண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்

சிவப்புமிளகாய் சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

தண்ணீர் – 50 மில்லிசெய்முறை:

சில்லி பனீர்

செய்முறை:

பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

சீஸ் பால்ஸ்

தேவையானவை:

மொசரெல்லா சீஸ் – 20

சின்ன துண்டுகள்

உருளைக்கிழங்கு – 4

பெரிய வெங்காயம் – ஒன்று

பச்சைமிளகாய் – 3

பிரெட் கிரம்ப்ஸ் – 50 கிராம்

முட்டையின் வெள்ளைக் கரு – ஒன்று

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

சீஸ் பால்ஸ்

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் கலந்து வதக்கி இறக்கவும். இதை கைபொறுக்கும் சூட்டில் எடுத்து, நடுவே ஒரு சீஸ் துண்டினை வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து ஊற்றவும். இதில் உருட்டி தயாராக வைத்துள்ள சீஸ் உருளைக்கிழங்கு உருண்டையை முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கவும். இப்படி எல்லா உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீஸ் பால்ஸை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை பூண்டு சாஸ் அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை:

பால் – 150 மில்லி

துருவிய கேரட் – 100 கிராம்

சர்க்கரை – தேவையான அளவு

தண்ணீர் – 50 மில்லி

வெனிலா ஐஸ்க்ரீம் – 50 கிராம்

ஐஸ் க்யூப் – 5

கேரட் மில்க் ஷேக்

செய்முறை:

மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ்க்ரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக சுழற்றியெடுக்கவும். இதை ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com