சீனாவில் கடந்த சில தினங்களாக குழந்தைகளிடம் தீவிர சுவாசப்பாதை தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பரிசோதனைகளை உறுதிசெய்யவும் மற்ற நாடுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சீனாவின் பாதிப்பு மற்றும் அவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவில் அதிகரித்துவரும் இந்த பாதிப்புக்கு புதிய வைரஸ் காரணமில்லை என்றும், ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகள்தான் காரணம் என்றும் சீனாவின் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாசத் தொற்று பாதிப்புக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. இதை எப்படிப் புரிந்துகொள்வது… இந்தியாவிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா….?
சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம். அவர் கூறுகையில்,
”சீனாவில் பொருளாதாரம், ஆரோக்கியம் என எந்த விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. கடந்த மே மாதம் தொடங்கி சீனாவில் ஒருவித நிமோனியா காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதாக ஐசிஎம்ஆர் ஓர் அறிக்கை தந்திருக்கிறது. குறிப்பாக இது அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் குழந்தைகளும் முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் இது குழந்தைகளையே பாதிக்கும் ஒருவகை நிமோனியாவாக அறியப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிவதாகவும், ஆறு மணி நேரமெல்லாம் காத்திருந்து மருத்துவரைப் பார்ப்பதாகவும்கூட செய்திகள் கேள்விப்படுகிறோம்.
இந்தத் தகவல்களுக்கு உலக சுகாதார நிறுவனமும் சீன அரசும் விளக்கங்கள் கொடுத்துள்ளன. இன்னொரு பக்கம், இது எந்தக் கிருமியால் ஏற்படும் நிமோனியா என்றே தெரியாத அளவுக்கு மர்மத் தொற்றாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிகமான காய்ச்சலும், காய்ச்சல் குணமானாலும், அடுத்த சில நாள்களுக்கு இருமல் தொடர்வதாகவும், சில குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.
சீனாவில் பரவும் இந்த நிமோனியா பாதிப்பு, ஏற்கெனவே அங்கிருந்து பரவிய கோவிட் தொற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரோ பிளாஸ்மா எனப்படும் ஒருவித பாக்டீரியாவாலும் சில வகை வைரஸாலும் குழந்தைகளிடம் இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் சீன அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏற்கெனவே வந்த வைரஸ்தான், புதிதல்ல என்றும் சொல்கிறார்கள்.
அப்படி இருந்தால் ஏன் இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பெரியவர்களுக்கு இருக்கும் எதிர்ப்புசக்தி குழந்தைகளுக்கு இருப்பதில்லை. ஸீரோ கோவிட் என்ற இலக்கை எட்ட, சீனாவானது தொடர்ந்து பல மாதங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தது. அப்படிப் பார்த்தால் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் குளிர்காலம் குழந்தைகளுக்கு சீனாவில் இதுதான் என்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
அடுத்தது சுற்றுச்சூழல் மாசின் காரணமாகவும் இந்தத் தொற்று அதிகரித்திருக்கலாம். கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடம்வரைகூட அதன் தாக்கம் தொடர்கிறது. அதில் நுரையீரல் பாதிப்பும் முக்கியமானது.தொற்றுப் பரவலுக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஐசிஎம்ஆரின் அறிக்கை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் பார்ப்போம். ஏஐ உருவாக்கிய சில டேட்டாக்களின் படி, சில இடங்களில் ஹெச்9 என் 2 என்ற ஃப்ளு சற்று அதிகரித்திருப்பதாக உறுதிசெய்யப்படாத சில தகவல்கள் சொல்கின்றன. சீனா தரப்பிலிருந்து இது குறித்து எதுவும் சொல்லாவிட்டாலும், ஐசிஎம்ஆரின் தகவலின்படி, இதையும் கருத்தில்கொண்டு பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதாகச் சொல்லியிருக்கிறது.
மற்ற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளும் தயாராக இருப்பதற்கு அறிவுறுத்தியிருப்பதாக ஐசிஎம்ஆர் சொல்கிறது. ஹெச்9 என் 2 என்பது கோழிப்பண்ணையிலிருந்து பரவி நோயை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை ஃப்ளூ. கோழிப்பண்ணையிலிருந்து அங்கே வேலை பார்ப்பவர்களுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம். மற்றபடி இது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்பு ரொம்பவும் குறைவு. கோழிகளுக்கு முறையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் விளைவாக தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசியானது கோழிகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பை அளிப்பதில்லை. மீண்டும் மீண்டும் செலுத்தவேண்டிய தடுப்பூசியாக இருக்கிறது. அதனால் அங்கே வேலை பார்ப்பவர்களுக்குப் பரவுகிறது.
இது குறித்தெல்லாம் கவலைப்படாமல், நாம் கோவிட் தொற்றுக்குப் பின்பற்றிய எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனமானது.
ஃப்ளூ வராமல் தடுக்க தடுப்பூசிகள் இருக்கின்றன. அவை வருடந்தோறும் அப்டேட் செய்யப்படுகின்றன. இணைநோய்கள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள் என ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி மேற்குறிப்பிட்ட ஹெச்9 என் 2 தொற்றுக்கு உதவாது என்றாலும் குளிர்காலத்தில் பரவும் ஃப்ளூ தொற்றின் பாதிப்பிலிருந்து காக்கும். ” என்றார்.
– ராஜலட்சுமி