“சிறிதளவு பார்லியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். ஊறிய பார்லியை அப்புறப்படுத்திவிட வேண்டும். பார்லி ஊறிய தண்ணீரை மட்டும் தினமும் காலையில் குடித்துவர, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பத்து, இருபது நாள்களில் கிரியாட்டினின் அளவு சீராகும். யூரிக் ஆசிட் குறையும். பழுதடைந்த சிறுநீரங்கள் 90 சதவிகிதம் சரியாக வாய்ப்புண்டு. டயாலிசிஸ் சிகிச்சையே தேவைப்படாது. சிறுநீரகத் தொற்றை குணமாகும். இது மருத்துவர்களே பரிந்துரைக்கும் சிகிச்சை…” – சமீபத்தில் வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட தகவல் இது.
எடைக்குறைப்புக்கும், நீர்க்கடுப்புக்கும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் பார்லி தண்ணீருக்கு, சிறுநீரகங்களையே பழுது பார்க்கும் சக்தி உண்டா? இந்த வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா? நிபுணர்களிடம் கேட்டோம்.
“இது போன்ற தவறான தகவல்களை நம்பி, மருத்துவ ஆலோசனையின்றி பின்பற்றும் விஷயங்கள் நல்லது செய்வதற்கு பதிலாக, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். எனவே எந்தத் தகவலையும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார் சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவரும், உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவருமான முத்துக்குமார்.