தங்கள் அந்தரங்க உறுப்பின் அளவு குறித்த பயம் அந்தக் காலத்திலிருந்தே ஆண்களுக்கு இருக்கிறது. அது தொடர்பான மருத்துவ தகவல்களுடன், ஒரு கேஸ் ஹிஸ்டரியையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”சில வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆண் என்னைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 26 வயது. ஆணுறுப்பில் வளர்ச்சியே இல்லை. விதைப்பையும் இல்லை. ஆணுறுப்பின் முன்பகுதி மட்டும் மிகச் சிறியதாக இருந்தது.
இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஆண்களுக்குரிய தாடி, மீசை இருக்காது. உருவம் பெரிதாக இருக்கும். ஆணுக்குரிய வடிவத்தில் இல்லாமல், எக்கச்சக்க சதைத்தொங்கலுடன் இருப்பார்கள். இவர்களின் உடலில் ஆண் ஹார்மோன் குறைவாக இருப்பதால், குறிப்பிட்ட வயதுக்குள் நிற்க வேண்டிய உடல் வளர்ச்சி நிற்காமல, உயரமாக இருப்பார்கள். மார்பு பெண்களைப்போல பெரிதாக இருக்கும். முகத்தில் வயதுக்கேற்ற முதிர்ச்சி இருக்காது. என்னைச் சந்திக்க வந்திருந்த அந்த ஆணும் இப்படித்தான் இருந்தார்.
அந்தக் காலத்தில், ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் தங்கள் உறுப்பின் நுனியில் கல்லைக்கட்டி தொங்க விட்டுக்கொள்வார்கள். அந்தப் புகைப்படங்கள்கூட எங்களிடம் இருக்கின்றன. இதில், உண்மை என்னவென்றால், 80 சதவிகித ஆண்களுக்கு உறுப்பின் அளவு சிறியதாகத்தான் இருக்கும். விறைப்புத்தன்மை அடைந்தபின், உறுப்பின் நீளம் பெரிதாகும். இதை நாங்கள் grower penis என்போம். 20 சதவிகித ஆண்களுக்கு மட்டுமே உறுப்பின் அளவு பெரிதாக இருக்கும். விறைப்புத்தன்மை அடைந்தபின், உறுப்பின் நீளம் சற்றே பெரிதாகும். இதை நாங்கள் shower penis என்போம். ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான ஆண்களுக்கு மட்டுமே உறுப்பின் அளவு மிகச் சிறியதாக இருக்கும். பெரும்பாலும் ஹார்மோன் சுரப்பதில் ஏற்படுகிற சிக்கல்தான் இதற்கு காரணமாக இருக்கும். இவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை கொடுத்தால் ஆணுறுப்பு நன்கு வளர்ச்சி அடைந்துவிடும்.
விதைப்பை சரியான வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்றால், ஹார்மோன் சிகிச்சை செய்து விதைப்பையை பெரிதாக்கி விந்தையும் சுரக்க வைக்கலாம். மூளையில் இருக்கிற ஹார்மோன் போதுமான அளவு சுரக்கவில்லையென்றால், விதைப்பை, ஆணுறுப்பு இரண்டுமே வளராது. அந்த ஹார்மோனை 2 அல்லது 3 வருடங்களுக்கு ஊசி மூலம் செலுத்தி வந்தால், விந்துப்பையும் ஆணுறுப்பும் வளர ஆரம்பித்து விடும். ஒருகட்டத்தில் விந்தணுக்களும் உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். சிலருக்கு மூளையில் ஹார்மோன் சுரப்பு நார்மலாக இருக்கும். ஆனால், விதைப்பை அதற்கு ரெஸ்பாண்ட் செய்யாது. இதன் காரணமாக விதைப்பை முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. இவர்களுக்கு, ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணுறுப்பை மட்டும் பெரிதாக்க முடியும். விதைப்பையை பெரிதாக்க முடியாது. சிகிச்சையினால், விதைப்பை வளர்ந்து விந்தணுக்களும் உற்பத்தியாகி விட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் குழந்தைப்பேறும் கிடைக்கும். ஆனால், ஆணுறுப்பு மட்டுமே வளர்ந்தவர்களுக்கு குழந்தைப்பிறப்பில் சிக்கல் வரலாம். மேற்குறிப்பிட்ட அந்த ஆணுக்கும் ஹார்மோன் சிகிச்சையளித்து அவருடைய பிரச்னையை சரி செய்து அனுப்பி வைத்தோம்” என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.