சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது 24 ஆண்டுகால அதிபர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு, சிரியாவில் அவரது குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
2000 ஆம் ஆண்டில் அசத் பதவியேற்றார். மறைந்த அவரது தந்தை ஹபீஸ் அதற்கு முந்தைய 30 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்தார்.
இப்போது, இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஹயாத் தஹ்ரிர்-அல் ஷாம் (HTS) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் அசத், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது.
அவர்கள் இப்போது ரஷ்யாவில் உள்ளனர். அங்கு அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அசத் ஏன் ரஷ்யா சென்றார்?
சிரிய உள்நாட்டுப் போரில், அசத்தின் உறுதியான கூட்டாளியாக ரஷ்யா இருந்தது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இரண்டு முக்கிய ராணுவ தளங்களை ரஷ்யா கொண்டுள்ளது.
2015 இல், ரஷ்யா அசத்திற்கு ஆதரவாக வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது. அதன் மூலம் போரின் போக்கை அசத் அரசாங்கத்திற்கு சாதகமாக மாற்றியது.
அடுத்த ஒன்பது ஆண்டுகளில், சிரியாவில் ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் 8,700 பொதுமக்கள் உட்பட 21,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
யுக்ரேன் போரில் கவனம் செலுத்தியதால், நவம்பர் இறுதியில் தொடங்கிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை நிறுத்துவதில் அசத்தின் அரசாங்கத்திற்கு உதவ ரஷ்யா விரும்பவில்லை அல்லது இயலவில்லை.
அசத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவிற்கு வந்துவிட்டதாகவும், அவர்களுக்கு “மனிதாபிமான அடிப்படையில்” அடைக்கலம் வழங்கப்படும் என்றும் கிளர்ச்சிப் படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றிய சில மணி நேரத்தில் ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால் திங்களன்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம், அசத்தின் இருப்பிடம் மற்றும் அவரது அடைக்கலம் பற்றிய கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “நான் உங்களிடம் இப்போது சொல்ல எதுவுமில்லை. நிச்சயமாக, அத்தகைய முடிவை (அசத்துக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து) அதிபர் இல்லாமல் எடுக்க முடியாது. அது அவருடைய முடிவு.” என்று டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
ரஷ்யாவுடனான அசத்தின் உறவு, குறிப்பாக மாஸ்கோவுடனான உறவு, நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு பைனான்சியல் டைம்ஸ் புலனாய்வில், சிரிய உள்நாட்டுப் போரின் போது பஷர் அல்-அசத்தின் குடும்பம் மாஸ்கோவில் பத்து மில்லியன் டாலர்கள் மதிப்புடைய, 18 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது தெரியவந்தது.
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் சிரியாவிலிருந்து அசத்தின் செல்வத்தை வெளியேற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது.
பஷர் அல்-அசத்தின் மூத்த மகன் ஹஃபீஸ் அல்-அசத் தற்போது மாஸ்கோவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக உள்ளார். சமீபத்தில், ஒரு உள்ளூர் செய்தித்தாள் அவரது முனைவர் ஆய்வுக் கட்டுரையைப் பற்றி செய்தி வெளியிட்டது.
சமீபத்திய குழப்பங்களுக்கு மத்தியில், மாஸ்கோ அதிகாரிகள் சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிரியாவில் உள்ள ஆயுதக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அசத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் யார்?
அசத்தின் மனைவி பெயர் அஸ்மா. சிரிய பெற்றோருக்கு பிறந்த அஸ்மா, மேற்கு லண்டனில் வளர்ந்தார்.
லண்டனில் பள்ளி மற்றும் பல்கலைக்க ழகத்தில் பயின்ற பின், முதலீட்டு வங்கியாளராக பணியில் இணைந்தார்.
அஸ்மா 2000-ஆம் ஆண்டில் சிரியாவுக்கு குடிபெயர்ந்தார். தனது தந்தைக்குப் பிறகு அதிபராக பதவியேற்ற சிறிது காலத்திலேயே பஷர் அல்-அசத்தை மணந்தார்.
சிரியாவின் முன்னாள் அதிபர் அசத்தின் மனைவி அஸ்மா அல்-அசத் , பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் என்றும், ரஷ்யாவில் தங்குவதற்குப் பதிலாக பிரிட்டனுக்குத் அவர் திரும்பலாம் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் (எல்எஸ்இ) ஆய்வாளராக உள்ள முனைவர் நெஸ்ரின் அல்ரெஃபாய், பிபிசி செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அஸ்மா அல்-அசத்தின் தந்தை டாக்டர் ஃபவாஸ் அல்-அக்ராஸ். அசத் ஆட்சிக்கு ஆதரவளித்ததற்காக , அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் அரச ஆதரித்ததாக டாக்டர் நெஸ்ரின் அல்ரெஃபாய் சுட்டிக்காட்டினார். அவரும் ரஷ்யாவில் இருப்பதால், தற்போது அஸ்மா மாஸ்கோவில் தங்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஃபவாஸ் தெரிவித்தார்.
அஸ்மா அல்-அசத்தின் பெற்றோரான, இருதய நோய் நிபுணர் டாக்டர் ஃபவாஸ் அல்-அக்ராஸ் மற்றும் ஓய்வு பெற்ற தூதர் சஹர் அல்-அக்ராஸ் ஆகியோர் மாஸ்கோவில் தங்கள் மகள் மற்றும் மருமகனுக்கு ஆதரவாக இருப்பதாக அவர்களின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளதாக, `மெயில் ஆன்லைன்’ செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ஹபீஸ் மற்றும் ஜீன், கரீம் ஆகிய மூவரும் அசத்தின் பிள்ளைகள்.
ஒட்டுமொத்த அசத் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 1 பில்லியன் முதல் 2 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
ஆனால், அவர்களின் சொத்துகள், பல்வேறு கணக்குகள், ரியல் எஸ்டேட், பெருநிறுவனங்கள் குறைந்த அல்லது வரி இல்லாத நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால், இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துவது கடினம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிரியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய வணிக நிறுவனங்களுடன் பஷர் மற்றும் அஸ்மா அல்-அசத் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்றும் என்று அறிக்கை கூறியது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022-ம் ஆண்டறிக்கை, பொருளாதார நெருக்கடியை நிர்வகிக்கும் சிரியாவின் பொருளாதாரக் குழுவில் அஸ்மா அல்-அசத் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் மானியங்கள், வர்த்தகம் மற்றும் நாணய சிக்கல்கள் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் அவருக்கு பங்கு இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
சிரியா டிரஸ்ட் ஃபார் டெவலப்மென்ட் மீது அஸ்மா அல்-அசத் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தார். இது ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புனரமைப்புக்கான பெரும்பாலான வெளிநாட்டு உதவிகளை நிர்வகிக்கும் பொறுப்பாகும்.
அஸ்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உதவியுடன் “சிரியாவின் போரினால் அதிக பணம் சம்பாதித்தவர்களில் ஒருவராகிவிட்டார், என 2020 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டினார்.
மூத்த டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் , “குடும்பத்தின் வணிகத் செயல்பாடுகளை தலைமையேற்று நடத்துபவர்” என்றும், பஷரின் உறவினர் ராமி மக்லூஃபுடன் போட்டியிட்டு வந்த “சக்திவாய்ந்த நபர்” என்றும் அஸ்மாவை குறிப்பிட்டார்.
வழக்குகளை அசத் எதிர்கொள்வாரா?
அசத் குடும்பத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பஷர் அல்-அசத் மற்றும் அவரது தந்தை ஹபீஸ் அல்-அசத் ஆகியோரின் கீழ் சிரியர்கள் “மனித உரிமை மீறல்களின் கொடூரமான நடவடிக்கைகளை” சகித்துக் கொண்டதாக அம்னெஸ்டி இன்டெர்னஷனலின் பொதுச்செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் கூறினார்.
இந்த மீறல்களில் ரசாயன ஆயுதங்கள், குண்டுகள், கொலைகள், சித்திரவதைகள், இருப்பிடத்தை தெரிவிக்காமல் அரசாங்கத்தால் மறைத்து வைக்கப்படுதல், திட்டமிட்டு கொல்லுதல் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற தாக்குதல்கள் அடங்கும்.
முந்தைய ஆட்சியின் போது சிரியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு தப்பிச் சென்ற அதிகாரிகளை திரும்பக் கொண்டுவர தனது இடைக்கால அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் அபு முகமது அல்-ஜோலானி கூறினார்.
சந்தேகத்திற்குரிய குற்றத்திற்காக விசாரணையை எதிர்கொள்ள, தங்கள் சொந்த குடிமக்களை ரஷ்யா வேறு நாட்டிற்கு அல்லது அரசிடம் அனுப்புவதில்லை.
இதன் காரணமாக, அசத் ரஷ்யாவை விட்டு வெளியேறி சிரியாவிற்கு அல்லது அவர் மீது குற்றம் சுமத்தக்கூடிய வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வாய்ப்பில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு