வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சுமாரான சமையல் கூட சூப்பரான சமையலாக மாறும் ரகசியம் அதன் தாளிப்பில் தான் உண்டு… இந்த விஷயம்முதலில் எனக்கு தெரியவே தெரியாது . நான் என் கணவரின் அத்தையிடம் இருந்துதான் இதைக் கற்றுக் கொண்டேன்.
ஆம் அவர்கள் செய்யும் சாதாரண தண்ணிச் சாம்பார் கூட தாளிப்பின் மூலம் சுவை இரட்டிப்பாகும்.
திருமணமான முதல் ஆறு மாதங்களில் … நான் செய்யும் சாம்பார் மீதமானது ஆனால் அதே சாம்பாரை அவர்கள் செய்த போது இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் .
அதனால் வெட்கத்தை விட்டு சித்தியிடம் கேட்டேன். சித்தி உங்கள் சாம்பாரோட சுவையின் ரகசியம் என்ன சித்தி என்று…

சாம்பார் மட்டுமல்ல , பக்கோடா குருமா பருப்பு உருண்டை குழம்பு, கீரை மசியல், ரசம் ,அவியல் ,கூட்டு இப்படி எந்த சமையலாக இருந்தாலும் கடைசியாக அதற்கு ஏற்றார் போல் பொருட்களை போட்டு தாளிப்பு செய்ய வேண்டும் அதில் தான் சமையலின் சூட்சுமம் இருக்கிறது என்று பெரிய லெக்சர் எடுத்தார்.
லெக்சர் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை சொல்லியும் கொடுத்தார் இதுவரை (இத்தனை வருடங்களாக)இதை நான் அவ்வளவாக யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.

என் மகள் கூட அடிக்கடி கேட்பாள் ஏன் மம்மி எனக்கெல்லாம் சொல்லித் தர மாட்டீங்களா ன்னு? உங்க சமையல் தான் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் பாராட்டணுமா?! ன்னு செல்லமாய் மிரட்டுவாள்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை பட்டு.. . அதற்கான சந்தர்ப்பங்கள் வரவில்லை” என்று சமாளித்து விடுவேன்.
சமையல் என்பது ஒரு அழகான விஷயம். அதில் கற்றுக்கொள்ள நிறைய நிறைய நிறைய விஷயங்கள் இருக்கிறது.. ஒரு சாதாரண மிளகு ரசம் கூட தாளிப்பின் மூலம் வேற லெவலில் மாறும்.
எல்லோரும் தான் மோர் குழம்பு வைக்கிறார்கள்… சில பேர் வீட்டில் அது மோர் சாம்பாராகவும், சில பேர் வீட்டில் மஞ்சள் தூள் சேர்த்த தயிராகவும்தான் இருக்கும்.

மோர் குழம்பை பார்த்து பக்குவமாகச் செய்ய வேண்டும். சீரகம், தனியா ,பச்சை மிளகாய் ,இஞ்சி எல்லாம் வதக்கி ஒரு சிறு துண்டு தேங்காயுடன் அரைத்து அந்த விழுதை மட்டும் வடிகட்டி தயிரில் சேர்த்து, உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு, மேலும் 10 சின்ன வெங்காயம் ஆறு பூண்டு பல்லை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து அதில் சேர்த்து, அடுப்பில் ஏற்றி ஒரு முறை நுரைத்ததும் இறக்கி நான்கு ஐந்து முறை ஆற்றி (காபிக்கு ஆற்றுவது போல்) தாளிப்பு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, கறிவேப்பிலை ,பெருங்காயம் ,காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்ட… மோர் குழம்பு பாசமாய் உங்களை பார்த்து கண்ணடிக்கும்.
அதேபோல் எல்லா காய்கறிகளையும் போட்டு சாம்பார் வைக்கும் போது இறுதியாக வடவம் சேர்த்து தாளித்து பச்சை கொத்தமல்லியை அப்படியே நறுக்கி போட சாம்பாரை ஊற்றியே குடிக்கலாம் .
எந்த வகை ரசம் செய்தாலும் இறுதியாக கடுகு பெருங்காயம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலையை நெய்யில் தாளித்துக் கொட்ட ரசத்தின் மணம் ஊரையே கூட்டும்.

எந்த வகை பிரியாணி செய்தாலும் இறக்கும் தருவாயில், நெய்யில் பொடியாக நறுக்கிய முந்திரியை நன்கு வறுத்து அல்லது குட்டி குட்டியாக நறுக்கிய பிரெட்டை வறுத்து ஒரு கிளறு கிளறி பரிமாற பிரியாணியை சாப்பிடுபவர்கள் ‘வாவ்’ என்று சொல்லுவர்.
எந்த சட்னி அரைத்தாலும் தாளிப்பை கடைசியில் தான் சேர்க்க வேண்டும். எண்ணையில் முக்கியமாக கருவேப்பிலை மின்ன வேண்டும்..
இப்படி எந்த சமையல் செய்தாலும் இறுதியாக தாளித்துக் கொட்ட இன்னும் இன்னும் என்று கேட்டுவாங்கி சாப்பிடுவார்கள் .வீட்டில் மகிழ்ச்சி அலை பரவும். எங்க கிளம்பிட்டீங்க இன்னைக்கு நீங்க செஞ்ச சமையலில் தாளிப்பைச் சேர்க்கவா ?!! ..ஆல் தி பெஸ்ட்!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.