
பட மூலாதாரம், Getty Images
லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா ஆகிய மூவரின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைப் நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சக் கட்டத்துக்கு இந்த ஐ.பி.எல்.ஆட்டம் அழைத்துச் சென்றது.
திக்.. திக்.. கடைசி ஓவர்
கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய ஓவரின் முதல் பந்தில் சிக்கந்தர் ராசா ஒரு ரன்னும், ஷாருக்கான் லெக்-பையில் ஒரு ரன்னும் எடுத்தனர். 3வது பந்தில் ராசா ரன் எடுக்காததால், சிஎஸ்கே ரசிகர்கள் கரகோஷம் அரங்கை அதிரச் செய்தது.
4வது பந்தில் ராசா ஸ்ட்ரைட் டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க 2 ரன்களை எடுத்தார். 5-வது பந்திலும் ராசா லெக்-சைடில் அடிக்க ஜடேஜா பீல்டிங் செய்து எறிந்தபோதிலும், 2 ரன்கள் பஞ்சாப்புக்குக் கிடைத்தது.
கடைசிப் பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 2 ரன்கள் எடுத்தால், சூப்பர் ஓவர், பவுண்டரி அடித்தால் வெற்றி என்று கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் சிக்கந்தர் ராசா ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
பவுண்டரி , சிக்ஸர் அடிக்கவிடக்கூடாது என்பதற்காக பீல்டர்களை தோனி எல்லைக் கோட்டில் அமைத்திருந்தார். அடுத்து என்ன நடக்கும் சிஎஸ்கே வெற்றியா?, சூப்பர் ஓவரா?, பஞ்சாப் வெற்றியா? என்பதை அறிய ரசிகர்கள் மார்பில் கைவைத்தும், இருக்கையின் நுணியிலும் அமர்ந்திருந்தனர்.
ஸ்லோவர் பால்
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது…!
கடைசிப் பந்தை பதிரனா ஸ்லோவராக, ஆஃப் சைடில் விலக்கி வீசினார். அனுபவம் மிக்க சிக்கந்தர் ராசா ஆப்சைடில் சிறிது நகர்ந்து, பந்தை ஸ்குயர் லெக் சைடில் தட்டிவிட்டார். பவுண்டரி நோக்கிச் சென்ற அந்தப் பந்தை ஆகாஷ் சிங் முயன்று தடுத்த நேரத்துக்குள் 3 ரன்கள் ஓடி பஞ்சாப் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
வரலாறு திருத்தப்பட்டது
சிக்கந்தர் ராசாவின் கடைசி நேர சாதுர்யமான ஆட்டம், டைமிங் ஷாட் ஆகியவை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸை அதன் மண்ணிலேயே பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில், சிஎஸ்கே இதுவரை 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஆட்டங்கள் அனைத்திலும் வென்றிருந்தது. ஆனால், முதல்முறையாக 200 ரன்கள் அடித்து தோனி ஆர்மி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பகலில் நடந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்து முதல்முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.
சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே-வின் வெற்றியைக் கொண்டாடவும், ஆர்ப்பரித்து விசில்போடவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தோல்வியைத் தாங்க முடியாமல் தவித்தனர். இந்த சீசனில் சிஎஸ்கே சொந்த மண்ணில் 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தானிடம் தோற்ற சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்துள்ளது.
10 புள்ளிகளில் 4 அணிகள்
ஆர்ப்பரிப்பான வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி 5வது இடத்தில் உள்ளது.
திருப்புமுனை நாயகர்கள்
பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 3 வீரர்களை குறிப்பிட்டே தீர வேண்டும், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்ந்தர் ராசா ஆகிய 3 பேரின் ஆர்ப்பணிப்பான பேட்டிங், வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
இந்த சீசனில் இதுவரை தனது இயல்பான ஆட்டத்துக்கு வராத லிவிங்ஸ்டோன், இந்த ஆட்டத்தில் வெளுத்துவாங்கினார். தேஷ் பாண்டே வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து லிவிங்ஸ்டன் 40ரன்னில்(24பந்துகள், ஒருபவுண்டரி 4சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். இந்த ஒருஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் வெற்றிக்கு 30பந்துகளில் 72 ரன்கள் தேவை என்ற நெருக்கடி நிலை இருந்தது. ஆனால் லிவிங்ஸ்டன் அதிரடிக்குப்பின், வெற்றிக்கான ரன் 48 ஆகக் குறைந்தது. லிவிங்ஸ்டனின் இந்த மிரட்டலான ஆட்டம் ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பி, நம்பிக்கை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, ஜிதேஷ் சர்மா. இந்த சீசன் முழுவதும் தனது பேட்டிங்கால் கலக்கி வருகிறார். பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகராக வலம் வரும் ஜிதேஷ் இந்த ஆட்டத்திலும் வெற்றிக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்தார்.
ஜிதேஷ் சர்மா களம்புகுந்த வேகத்தில், ஜடேஜா ஓவரில் ஒரு சிக்ஸரும், பதிரனாவின் 17-வது ஓவரிலும், தேஷ்பாண்டேவின் 18-வது ஓவரிலும் அடித்த பவுண்டரிகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. சிறிய கேமியோ ஆடிய ஜிதேஷ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விவாதமான கேட்ச்
அதிலும் ஜிதேஷ் சர்மா ஆட்டமிழந்தவிதம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்த, ரஷீத் பவுண்டரி கோட்டை காலால் தொட்டாரா என்று பலமுறை டிவி ரீப்ளேயில் 3வது நடுவர் பார்த்து அவுட் அளித்தார். ஜிதேஷ் சர்மா களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை பஞ்சாப் அணி கடைசிவரை ஆட்டத்தை கொண்டு சென்றிருக்கத் தேவையில்லை.
ராசா இல்லை ‘ராஜா’
ஜிம்பாப்பே வீரர் சிக்கந்தர் ராசா பற்றி குறிப்பிட்டே தீர வேண்டும். சிக்கந்தர் ராசா களமிறங்கியவுடன் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஒருபந்தைக் கூட வீணாக்காமல் சூழலை அறிந்து ரன் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில், சிக்கந்தர் ராசாவின் பொறுப்பான ஆட்டம், கடைசிப் பந்தை, லாவகமாக லெக் சைடில் தட்டிவிட்டு 3 ரன்கள் எடுத்தது ஆகியவை மாஸ்டர் கிளாஸ்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தகுதியானது என்றால், அதில் ராஜாவாக இருந்தது வெற்றியை பெற்றுக்கொடுத்தது சிக்கந்தர் ராசாதான். பந்துவீச்சிலும் அசத்திய சிக்கந்தர் ராசா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினார்.
‘எனக்கே தெரியவில்லை’
ஆட்டத்தின் ஹீரோவான சிக்கந்தர் ராசா கூறுகையில் “ ஜிம்பாப்பே கலாசாரத்தில் இருந்து வந்தேன், தனிநபர் ஆட்டத்தைவிட அணியின் வெற்றியைத்தான் அதிகம் விரும்புகிறேன். கடைசிப் பந்துக்கு முன் என்ன பேசினேன் என எனக்கேத் தெரியவில்லை. டக்அவுட்டில் ஏராளமானோர் என்னைப் பார்த்து கை அசைத்தனர். லிவிங்ஸ்டன் அமைத்துக் கொடுத்த தளத்தில், ஜிதேஷ் வழிகாட்டினார், அனைத்து ஆட்டத்திலும் ஜிதேஷ் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இருவரின் பேட்டிங் ஸ்கோரை சேஸிங் செய்ய உதவியாக இருந்தது. என்னால் முடிந்த பங்களிப்பை பந்துவீச்சு, பேட்டிங்கில் வழங்கினேன்” எனத் தெரிவித்தார்
பஞ்சாப் பந்துவீச்சு எப்படி?
பஞ்சாப் அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்றுதான் கூற முடியும். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரிந்தும், சிக்கந்தர் ராசா, ராகுல் சாஹர் மட்டுமே பந்துவீசினர், ஆனால், ஹர்பிரீத் பிராருக்கு பந்துவீசும் வாய்ப்பு வழங்கவே இல்லை.
சுழற்பந்துவீச்சில் சஹர், ராசா ஓரளவுக்கு கட்டுக் கோப்பாக பந்துவீசினர். சாம் கரன் ரன்களை கூடுதலாக வழங்கினார். ரபாடா, அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரன்களைக் கொடுத்தாலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை மிரட்டிவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் இன்னும் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருந்தால், 200 ரன்களுக்குள் சிஎஸ்கேவை சுருட்டியிருக்கலாம்.
பதிரனா மீது தவறா?
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய பதிரனா கடைசிப் பந்தில் ஸ்லோவர் பாலாக வீசியது சமூக வலைத்தளத்தில் விவாதமாகியுள்ளது. கடைசிப் பந்தை ஸ்லோவர் பந்தாக வீசாமல் வைடு யார்கராகவோ அல்லது யார்கராவோ வீசியிருக்கலாம் என்று நெட்டிசன்கள் விவாதிக்கிறார்கள். ஆனால், பதிரனா டெத்ஓவர்களை எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே வீசினார்.
பதிரனா தான் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்டநிலையில், பஞ்சாப் பேட்ஸ்மேனை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் நெருக்கடி நேரத்தில் பதிரனா சிறப்பாகப் பந்துவீசினார்.
சர்வதேச வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆடும் பதிரனா இதுபோன்ற “ஹைடெம்போ” போட்டிகளில் டெத் ஓவரை திறமையாக வீசுவது பாராட்டுக்குரியது. கடைசிப் பந்தில் ஸ்லோவர் பாலாக பதிரனா வீசியது என்பது ராசா பெரிய ஷாட் அடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
ஆனால், சிக்கந்தர் ராசா ஆப்சைடில் விலகிச் சென்று ஸ்குயர்லெக்கில் தட்டிவிட்டார். இது நிச்சயமாக பதிரனா தவறாக இருக்க முடியாது. 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சரியான வேகப்பந்துவீச்சாளராக பதிரனாவை கண்டுபிடித்துள்ளது. இலங்கை அணிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
சிஎஸ்கே எங்கு சறுக்கியது?
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம் சொந்த மைதானம். சேப்பாகம் ஆடுகளத்தைப் பற்றி நன்கு தெரிந்த அணி. 200 ரன்கள் சேர்த்தும், பஞ்சாப் அணியைச் சுருட்ட முடியவில்லை என்றால், எங்குசறுக்கியது என்பதை ஆய்வு செய்வது அவசியம்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பஞ்சாப் அணியும் 10 ரன்ரேட்டில்தான் சென்றது. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என பஞ்சாப் அணியும் விடாமல் துரத்தி வந்தது.
11-வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை பஞ்சாப் கிங்ஸ் ரன்வேகம் திடீரென குறைந்தது. இந்த 5 ஓவர்களில் பஞ்சாப் அணி, 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது, ஒருவிக்கெட்டையும் இழந்தது. சாம்கரன், லிவிங்ஸ்டனும் மந்தமாக ஆட தொடங்கினர்.
15 ஓவர் முடிவில் பஞ்சாப் வெற்றிக்கு 30 பந்துகளில் 72 ரன்கள் தேவைப்பட்டது. இதுவரை ஆட்டம் சிஎஸ்கே கைகளில்தான் இருந்தது. ஆனால், தேஷ்பாண்டே வீசிய 16-வது ஓவரில் லிவிங்ஸ்டன் சேர்த்த 24 ரன்கள் சிஎஸ்கேயிடம் இருந்து ஆட்டம் பஞ்சாப்புக்கு மாறியது.
அதன்பின் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள்பக்கம் இழுக்க முயன்றாலும், பஞ்சாப் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் ரன் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.
பந்துவீச்சில் ஜடேஜா சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. கடைசி நேரத்தில் பெரிய ஷாட்கள் அடிப்பார் என ஜடேஜா களமிறக்கப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.
ஒருவேளை ஜடேஜா பெரிய ஷாட்களை ஆடி சிக்ஸர், பவுண்டரி அடித்திருந்தால், சிஎஸ்கே இன்னும் கூடுதலாக ரன்களைச் சேர்த்து வெற்றியை எளிதாக்கி இருக்கும். தோனியும் கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை விளாசவில்லை என்றால் சிஎஸ்கே ஸ்கோர், 200 ரன்களுக்குள்ளேதான் இருந்திருக்கும்
2 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது
தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ நடுப்பகுதியில் இரு ஓவர்களில்தான் ஆட்டத்தைத் தவறிவிட்டோம். பந்துவீச்சாளர்கள்தான் என்ன தேவை என்பதை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாங்கள் பேட்டிங் செய்தபோது கடைசி ஓவர்களில் 10 ரன்களுக்கும் மேல்தான் அடிக்க முடிந்தது.
எங்கள் பந்துவீச்சுக்கு இன்னும் பயிற்சி தேவை, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டோம். 200 ரன்கள் வெற்றிக்குப் போதுமானதுதான், ஆனால், 2 ஓவர்களை மோசமாக வீசி ஆட்டத்தை இழந்தோம். பதிரனா சிறப்பாகப் பந்துவீசினார். எங்கள் திட்டம் தவறானதா அல்லது செயல்படுத்தியவிதம் தவறா என்பதை ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்
கான்வே, ருதுராஜ் வலுவான தொடக்கம்
சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் நல்ல தொடக்கம் அளித்து வரும் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இந்த முறையும் ஏமாற்றவில்லை. 2வது ஓவரில் இருந்து கான்வே அதிரடியில் இறங்கி, ரபாடா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளும், அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் கெய்க்வாட் 2 பவுண்டரிகளும், அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.
சாம்கரன் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரிகளை கெய்க்வாட் விளாசி பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தினார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி, 57 ரன்கள் குவித்தது. ஓவருக்கு 10 ரன்ரேட் திட்டத்தோடு கான்வே, கெய்க்வாட் ரன்களைச் சேர்த்தனர்.
ஆனால், சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துக்கும், மெதுவாக பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும், ராகுல் சஹர், சிக்கந்தர் ராசாவை பந்துவீசச் செய்து சிஎஸ்கே ரன் குவிப்புக்கு பிரேக் அமைக்க முயன்றனர்.
பஞ்சாப் அணி சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது ஓரளவு பலன்கொடுத்தது. 7 முதல் 9-வது ஓவர் வரை சிஎஸ்கே ரன் சேர்ப்பு மந்தமாகியது. அதன்பின் கைகொடுக்கவில்லை. சிக்கந்தர் வீசிய 10-வது ஓவரில் கான்வே இரு பவுண்டரிகளை விளாசினார். 4வது பந்தை கெய்க்வாட் இறங்கி அடிக்க முற்பட்டபோது, சிக்கந்தர் கேரம் பந்துவீச, அது நன்கு சுழன்று கீப்பர் கையில் தஞ்சமடைந்ததால், ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட், கான்வே கூட்டணி 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கெய்க்வாட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹானே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஷிவம் துபே வந்தார்.
பட மூலாதாரம், Getty Images
துபே, மொயின் அலி ஏமாற்றம்
இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியால் மிரட்டிவரும் துபே இந்த முறையும் ஏமாற்றவில்லை. சிக்கந்தர் வீசிய 12 ஓவரில் துபே லாங்ஆன் திசையில் சிக்ஸரை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய கான்வே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கான்வே இந்த சீசனில் அடிக்கும் 5-வது அரைசதமாகும். ஒரு சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கான்வேவும் இணைந்தார். கான்வே கடந்த 6 போட்டிகளில் 50,83,77,56,8,92 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரபாடா வீசிய 13வது ஓவரில் துபே மிட்-விக்கெட்டில் பெரிய சிக்ஸரை விளாசினார், அதே ஓவரின் கடைசிப் பந்தில் கான்வே பவுண்டரிக்கு அனுப்பி ரன்ரேட்டை உயர்த்தினர்.
ஷிவம் துபே பவுன்ஸரை விளையாடுவதற்கு சிரமப்படுவார் எனத் தெரிந்து அர்ஷதீப் சிங் 14வது ஓவரை வீசினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது, கடைசிப் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க துபே முயன்று அங்கு சிக்கந்தர் ராசாவால் கேட்ச் பிடிக்கப்பட்டார். குறுகிய நேரமே களத்தில் இருந்தாலும், துபே(28) சிறிய கேமியோவை சிஎஸ்கே அணிக்காக விளையாடிக் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த மொயின் அலியும் நிலைக்கவில்லை மொயின் அலி இரு பவுண்டரிகள் உள்ளிட்ட 10 ரன்கள் சேர்த்தநிலையில் ராகுல் சஹர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார்.
ஜடேஜா மந்தமான பேட்டிங்
அடுத்து வந்த ஜடேஜா, கான்வே ஜோடி கடைசி நேரத்தில் ரன் சேர்க்க முயன்றும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. ரபாடாவும், அர்ஷ்தீப் சிங்கும் கட்டுக் கோப்பாக பந்துவீசியதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்களும், ரபாடா வீசிய 19வது ஓவரில் 8 ரன்களும்மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது.
கடைசி ஓவரை சாம் கரன் வீசினார். முதல் பந்திலேயே ஜடேஜா டீப் மிட்-விக்கெட்டில் தூக்கி அடிக்க லிவிங்ஸ்டனிடம் விக்கெட்டை இழந்து 12 ரன்னில் வெளியேறினார்.
தோனியைப் பார்த்து ஆர்ப்பரித்த ரசிகர்கள்
பட மூலாதாரம், Getty Images
சென்னையில் சிஎஸ்கே ஆட்டம் என்றாலே ஏதும் சொல்லத் தேவையில்லை. தோனியை வரவேற்கவும், சிஎஸ்கேவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அரங்கில் ரசிகர்கள் குவிவார்கள். இன்றைய ஆட்டத்தைக் காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அடுத்ததாக சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த கேப்டன் எம்எஸ் தோனி களம்புகுந்தார். பாட்ஷா, பாட்ஷா பாடல் பின்புலத்தில் ஒலிக்க, தோனி வீரநடையுடன் மைதானத்துக்குள் வந்தார். தோனி மைதானத்துக்குள் வந்தவுடன் “தோனி, தோனி” என்று ரசிகர்களின் குரலும், விசில் சத்தமும் அரங்கை அதிரவைத்தன.
தோனியின் 86 மீட்டர் சிக்ஸர்
தோனி தான் சந்தித்த 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்தபந்தில் கான்வே ஒரு ரன் எடுக்கவே 5வது பந்தை தோனி சந்தித்தார். சான் கரன் ஆப்சைடில் விலக்கி வீசிய பவுன்ஸரை லாவகமாக அடித்து சிக்ஸருக்கு தோனி பறக்கவிட்டார். தோனி சிக்ஸர் அடித்தவுடன், அரங்கில் இருந்த ரசிகர்களிடம் கரகோஷமும், விசில் சத்தமும் காதைக் கிழித்தன.
கடைசிப் பந்தில் சாம்கரன் யார்கர் வீச முயன்று ஃபுல்டாசாக மாறியது. இதுபோன்ற ஃபுல்டாஸ் பந்துகளை தோனி யோசிக்காமல் சிக்ஸருக்கு பறக்கவிடுவார். இந்த முறையும் டீப் மிட்விக்கெட்டில் தோனி சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸர் 86 மீட்டர் உயரம் சென்றது.
41வயதிலும் அசராத தோனி
கடைசி இருபந்துகளில் தோனி அடித்த இரு சிக்ஸர்கள் அவரின் பேட்டிங்கை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 41வயதாகியும், இன்னும் களத்தில் சிங்கம்போல் களமிறங்கி விளையாடும் தோனிக்கு சிக்ஸர் அடிக்கும் திறன், பேட்டிங் வலிமை குறையவில்லை.
தோனியும், 20-வது ஓவர் சிக்ஸர்களும்
தோனி குறித்த ஸ்வரஸ்யமான புள்ளிவிவரம் என்னவென்றால், ஐபிஎல் வரலாற்றில், 20வது ஓவரில் மட்டும் தோனி 209 பந்துகளைச் சந்தித்து இதுவரை 709 ரன்கள் குவித்துள்ளார். இதில் 59 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 15 முறை 2 சிக்ஸர்களை தோனி இதுவரை அடித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.
அதுமட்டுமல்லாமல் கடைசிஓவர்களில் 59 சிக்ஸர்களை அடித்து தோனி முதலிடத்திலும், கெய்ரன் பொலார்ட்33 சிக்ஸர்களுடன் 2வதுஇடத்திலும் உள்ளனர்.
“தி கிரேட் ஃபினிஷர்” என்று பெயரெடுத்த தோனிக்கு கடைசி ஓவரில் கூலாக மேட்சை முடித்து வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதேநேரம், தோனி கடைசி ஓவரில் களத்தில் இருந்தாலும் பந்துகள் எந்தத் திசையில் பறக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. அதை இந்தமுறையும் கச்சிதமாக முடித்தார்.
இருப்பினும், சிஎஸ்கே அணி கடைசி 5 ஓவர்களில் எதிர்பார்த்த அளவு ரன்களைச் சேர்க்கவில்லை, 54 ரன்கள் சேர்த்து ஒருவிக்கெட்டை இழந்தனர். ரபாடா, அர்ஷ்தீப் பந்துகளையும் விளாசியிருந்தால் நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உயர்ந்திருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: