மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, “தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 கிராமங்களில் அதிகம் உள்ளது. இதில் மதுரை – 45, திருநெல்வேலி – 29, திருச்சி – 24, தஞ்சாவூர் – 22, தேனி – 20 ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி இடத்தில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள் இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்திக், “சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டத்தில் மதுரைதான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 335 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்ட போதும் பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூக நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குப் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும் பதற்றம் நிறைந்த 304 கிராமங்களை ரோல் மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க வேண்டும். அதற்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்” என்றார்.