ஒவ்வொருவருக்கும் சிலவற்றின் மீது பயம் இருக்கும். உயரம், கூட்டம், தனிமை என `தெனாலி’ படத்தில் நடிகர் கமல் சொல்வதுபோல், பல விதமான பயங்கள் பலருக்கும் இருக்கலாம். ஆனால், சாக்லேட்டை கண்டாலோ, அதை உண்டாலோ சிலருக்கு ஒருவித பயம் (phobia) ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா..?

சாக்லேட்டின் மீதான இந்த பயம் `ஸோகோலாட்டோஃபோபியா’ Xocolatophobia என்று அழைக்கப்படுகிறது. இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாக்லேட்டை உட்கொள்ளும்போதும் அல்லது அதைப் பற்றிய எண்ணம் வரும்போதும் பதற்றம் கொள்கிறார்கள்.
சிலருக்கு சாக்லேட் உண்டால் உடல் எடையில் மாற்றம் உண்டாகி, சுயமரியாதை பாதிக்கப்படலாம் என்ற எண்ணத்திலும் இந்த பயம் உண்டாகலாம்.
இவர்கள் சாக்லேட் அல்லது சாக்லேட் குறித்த எண்ணங்களை எதிர்கொள்ளும்போது, விரைவான இதயத் துடிப்பு, வியர்வை, நடுக்கம், மூச்சுத் திணறல், பயம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.
குடும்பத்தில் உள்ளவர்கள் ஃபோபியாவால் பாதிக்கப்பட்ட வரலாறு இருந்தால், அந்த வீட்டில் உள்ள மற்ற நபர்களும் இந்த ஃபோபியாவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.
ஆனால், மரபியல் மட்டுமே இந்த ஃபோபியா ஏற்படுவதற்குக் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது. சுற்றுச்சூழல் போன்ற பிற காரணிகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சாக்லேட் தொடர்பான மோசமான சம்பவங்கள், சாக்லேட் பற்றிய மீடியா மற்றும் கலாசார சித்திரிப்புகளும் காரணமாகலாம்.

சாக்லேட் மீதான பயத்தைப் போக்க `எக்ஸ்போஷர் தெரபி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சாக்லேட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சாக்லேட்டுடன் தொடர்புடைய பயத்தை குடும்ப உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், இது குடும்பத்துக்குள் சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் பயத்தைப் புரிந்துகொள்வதும், அவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும் முக்கியம்.
இதைத்தாண்டி, ஃபோபியா குறித்த விழிப்புணர்வையும் மக்களிடத்தில் ஏற்படுத்தலாம்.
உங்களுக்கு எதைக் கண்டால் அல்லது நினைத்தால் பயம் உண்டாகும்..? கமென்டில் சொல்லுங்கள்!