இருமல் உண்டாகும்போது, சிறிதளவு இலையை நன்றாகக் கழுவிட்டு மென்று சாப்பிட, இருமல் குறையும். இதன் `வாலடைல்’ எண்ணெயில் உள்ள ’p-cymene’ மற்றும் ’thymol’ நோய்க்கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் (Broncho-dilator) செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். ஆவி (வேது) பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் கற்பூரவள்ளி முக்கியமானது.
தொண்டையில் கரகரப்பா… இதன் இலையை மென்று சுவைக்க, கரகர தொண்டைக்கு இதம் கிடைக்கும்! இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்திற்கு, காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மை இருக்கிறது. இதிலுள்ள தைமாலுக்கு, பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் வன்மை இருப்பதால், பல்வேறு பற்பசைகளில் (டூத்-பேஸ்ட்களில்) சேர்க்கப்படுகிறது.
கற்பூரவள்ளி சுரசம்
கற்பூரவள்ளி இலையை அவியல் செய்து சாறு பிழிந்து அல்லது இலைச்சாற்றை சட்டியிலிட்டு சுண்டச் செய்து, கப நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். கற்பூரவள்ளியோடு தேங்காய், பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து சட்னியாகவும் செய்து சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி பஜ்ஜி
பஜ்ஜி பிரியரா நீங்கள்? வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி சரி, கற்பூரவள்ளி பஜ்ஜி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கற்பூரவள்ளி இலைகளால் செய்யப்படும் ’கற்பூரவள்ளி பஜ்ஜி’ ரெசிப்பி, பல ஹோட்டல்களில் இப்போதெல்லாம் ஸ்பெஷல் மெனு.
வித்தியாசமான இந்த மூலிகை பஜ்ஜி பலரது ஃபேவரைட் தின்பண்டமாக இப்போது மாறி இருக்கிறது நண்பர்களே! அதுவும் மழைக்கால மாலை வேளையில், மருத்துவ குணமிக்க கற்பூரவள்ளி பஜ்ஜியை சுவைப்பது அலாதியான அனுபவமாக இருக்கும்.