கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி செயின்ட் தாமஸ் சர்ச்சில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 190 பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதைச் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு ஒவ்வாமையும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. சுமார் 70 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இவர்கள் ரானி, அடூர், கொம்பநாடு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இது குறித்து புகாரின் பேரில் விழாவில் உணவு வழங்கிய `ஓவன் ப்ரெஸ்’ கேட்டரிங் நிறுவனம் மீது கீழ்வாய்ப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
`ஓவன் ப்ரெஸ்’ கேட்டரிங் நிறுவன உரிமையாளர் மனுவின் பெயரை குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஞானஸ்நானம் நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதே உணவு அன்றைய தினம் வேறு இரண்டு நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்டவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என கேட்டரிங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியில் உணவு விஷத்தன்மையாக மாறியதால், கேட்டரிங் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.